நாட்டிய ஆசிரியர் சித்தாரவம்மா சந்திரசேகரன் நாட்டியத்தால் வேரூன்றியவர்

Gov.sg-உடன் கூட்டாகப் படைக்கப்படும் இந்த ஆறு பாகத் தொடர், சிங்கப்பூரைத் தங்களது இல்லமாக்கிக்கொள்ள அரும் முயற்சி எடுத்தவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவங்களையும் ஆராய்கிறது.

எதிர்பாராமல் கிடைத்த ஒரு வாய்ப்பே திருவாட்டி சித்தாரவம்மா சந்திரசேகரனை 1993ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வரவழைத்தது. இந்தியப் பாரம்பரிய நாட்டியக்கலை ஆசிரியரான அவர், அந்த வருகையைத் தொடர்ந்து சிங்கப்பூரைத் தனது இல்லமாக்கிக் கொண்டார். பல்வேறு இனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்தியக் கலை, கலாசாரம், பாரம்பரியம் அனைத்தையும் அவர் கற்பித்திருக்கிறார்.

“என்னுடைய குரு சீதாராம ‌ஷர்மா (சென்னையைச் சேர்ந்த பிரபல நட்டுவாங்க வித்வான்) சிங்கப்பூரில் நன்மதிப்பு பெற்றிருந்தார். அவர் அடிக்கடி இங்கு நிகழ்ச்சி படைத்துவந்தார். ஒரு நாள், நான் ஒரு நிகழ்ச்சிக்காக ஜப்பானுக்குச் சென்றிருந்தபோது, என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரது மனங்கவர்ந்த சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் நான் கற்பிக்க வேண்டும் என அவர் விரும்பியதால், என்னை சிங்கப்பூருக்கு வரச் சொன்னார். நானும் அவ்வாறு செய்து பார்க்க எண்ணி, உடனடியாகச் சரி என்று சொன்னேன்,” என்றார் திருவாட்டி சித்தாரவம்மா.

அந்தக் காலக்கட்டத்தில், மொரி‌ஷியஸில் பணிபுரிந்து கொண்டிருந்த உயிரியல் துறை பேராசிரியர் ஜகநாதன் சந்திரசேகரனை மணந்திருந்த திருவாட்டி சித்தாரவம்மா, சிங்கப்பூர் நுண்கலைக் கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்து 10 ஆண்டுகாலம் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களுக்கு நாட்டியம் கற்பித்தார்.

“அங்கு இந்தியர்கள், சீனர்கள், ஜெர்மானியர்கள், அமெரிக்கர்கள் இருந்தனர்.. நான் 120க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் குச்சிப்பிடியும் பரதநாட்டியமும் கற்றுக் கொடுத்தேன். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் அரங்கேற்றம் செய்தனர்,” என்று அவர் கூறினார்.

“சிங்கப்பூர் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. இந்தியக் கலைகளையும், மொழியையும், கலாசாரத்தையும் கற்றுக்கொள்வதில் உள்ளூர் மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இவற்றில் நான் வல்லமை பெற்றிருந்ததால் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.

“இந்தியப் பண்புகளையும் பாரம்பரியங்களையும் பற்றி அனைத்து வயதினருக்கும் பல மணிநேரம் விளக்கம் அளிப்பேன். அவர்கள் நல்ல வி‌ஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். என் திறனின் முழுப்பலனை அடைய விரும்பினார்கள். அவர்கள் உண்மையாகவும் கடினமாகவும் முயற்சி எடுப்பதைக் கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.”

சென்னையின் புகழ்பெற்ற கலாசேத்திரா கவின் கலைக் கல்லூரியில் படித்தவர் திருவாட்டி சித்தாரவம்மா. பட்டம் பெற்றபின் அதே கல்லூரியில் 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். இதன்வழி, பாரம்பரிய இந்திய நாட்டிய நுணுக்கங்களில் அருந்திறன் பெற்றார். ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல்வேறு நாடுகளிலும் அவர் நிகழ்ச்சி படைத்திருக்கிறார்.

“நான் மொரி‌ஷியஸ் அரசாங்கத்தின் கலாசார விவகார ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றி இருக்கலாம். ஆனால், சிங்கப்பூரில் இருக்க முடிவெடுத்தேன். சிங்கப்பூரின் பொதுநோக்கு இயல்பு என்னைக் கவர்ந்தது. இங்கு மக்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது. என் அறிவாற்றலை நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். இளையர் முதல் வயதானவர் வரை என்னிடமிருந்து கற்றுக்கொள்ள வந்தார்கள். அது எனக்குப் பெருமகிழ்ச்சி அளித்தது.”

திருவாட்டி சித்தாரவம்மாவுக்கு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இருந்த சில நண்பர்கள், அவர் சிங்கப்பூரில் குடியேற உதவி புரிந்தனர். கலைப் பிரியர் ரமா சங்கருடன் திருவாட்டி சித்தாரவம்மாவுக்கு நெருங்கிய நட்பு மலர்ந்தது. சிங்கப்பூரில் வேரூன்றி, உள்ளூர் நடைமுறைக்கேற்ப வாழ ரமா சங்கர் அவருக்கு வழிகாட்டினார்.

“சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை,” என்றார் நாட்டிய ஆசிரியர் சித்தாரவம்மா. “நாட்டியக் குழுக்களுடன் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருப்பதால், என்னால் எளிதில் பழகிக்கொள்ள முடியும். மக்களைச் சந்திப்பதும் நட்புறவை வளர்த்துக்கொள்வதும் ஓரளவு எளிதாகவே இருந்தது.”

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டலப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த திருவாட்டி சித்தாரவம்மா, தனது குடும்பத்தாரின் கவனிப்பிலிருந்த மகனைப் பார்த்துக் கொள்வதற்காக 2003ல் சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார். ஆனால், மறு ஆண்டே அவர் சிங்கப்பூருக்குத் திரும்பிவந்து, கலாபீதம் நாட்டியப் பள்ளியை அமைத்தார். அவரது குரு சீதாராம ‌ஷர்மா பள்ளியைத் தொடங்கி வைத்தார்.

“நான் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும், பிற்பாடு ஸ்ரீ வடபத்திரக் காளியம்மன் கோயிலிலும் பாரம்பரிய நாட்டியங்களும் கிராமிய நடனங்களும் கற்றுக் கொடுத்தேன். சில உள்ளூர்க்காரர்களும் வெளிநாட்டவர்களும் மேற்கொண்டு கற்றுக்கொள்ள என்னைத் தேடி வந்தனர். நாட்டியம் பயின்று மகிழ்ச்சி அடைய, வயதான சிங்கப்பூரர்கள் கொண்ட குழுவுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்,” என்றார் அவர்.

“மக்களை ஒன்றுபடுத்தும் அற்புதமான ஆற்றல் நாட்டியத்திற்கு உண்டு. இதில் மதங்களுக்கு இடமில்லை. தூயக் கலையுடன் ஒற்றுமையும் அன்பும் பரவுகிறது.”

நான்கு வயதிலிருந்து திருவாட்டி சித்தாரவம்மாவிடம் நாட்டியம் பயின்றுவரும் 17 வயது நல்லபுராஜு அனன்யா, கட்டொழுங்குடன் வாழவும் தனது ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்.

“நான் எனது இந்தியக் கலாசாரத்தையும் பாரம்பரியங்களையும் விட்டு விலகிச் சென்று கொண்டிருந்தேன். ஆனால், குரு சீதா எனக்கு அறிவு புகட்டினார். எப்படி உடுத்த வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுத்தார். சீரான வாழ்க்கை வாழ்வதும் நல்ல மனிதராக இருப்பதும் ஏன் முக்கியம் என்பதையும் எனக்குப் புரிய வைத்தார். குரு சீதா எனக்கு ஆசிரியராகக் கிடைத்தது என் பாக்கியம்,” என்றார் என்யுஎஸ் உயர்நிலைப் பள்ளி மாணவியான அனன்யா.

ஆரோக்கிய நீர்க்குளியல் சிகிச்சையாளரான விவியன் லாயும் திருவாட்டி சித்தாரவம்மாவால் பெரும் பயனடைந்திருக்கிறார். சிங்கப்பூரரான விவியன், 2014ஆம் ஆண்டு தமது 52வது வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள ஸ்ரீ வடபத்திரக் காளியம்மன் கோயிலில் திருவாட்டி சித்தாரவம்மாவை அணுகினார். செப்டம்பர் 18ஆம் தேதி, தமது 60வது வயதில், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழக அரங்கத்தில் வெற்றிகரமாக அரங்கேற்றத்தை முடித்தார்.

“அவர் அற்புதமான ஓர் ஆசிரியர். என் வயதின் காரணமாக அசைவுகள் விறைப்பாக இருந்தன. ஆனால், அவர் என்னை இன்னொரு நிலைக்கு இட்டுச்சென்றார். பொதுப்படையான எண்ணத்துடன், தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அனைவருக்கும் கற்றுத் தருகிறார். நான் இந்தியர் அல்ல என்பதால் அவர் என்னை வித்தியாசமாகப் பார்க்கவில்லை. அவருக்கு ஒரு மகிமை இருக்கிறது. அதுவே என் ஆன்மீக உணர்வை வளர்த்தது,” என்றார் விவியன்.

திருவாட்டி விவியனைத் தனது மகளைப்போல் நடத்தும் திருவாட்டி சித்தாரவம்மா, கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் அவருடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.

ரேஸ் கோர்ஸ் லேனில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தில் புதிய இடத்திற்குத் திரும்பி வருமாறு சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் திருவாட்டி சித்தாரவம்மாவை இந்த ஆண்டு ஜனவரி மாதம் அணுகியது. அன்றிலிருந்து அவ்விடத்தில் சுமார் 40 மாணவர்களுக்கு அவர் வகுப்பு நடத்தி வருகிறார்.

யோகா ஆசிரியரான நித்ய யோகா ஞான ஆனந்தாவும் (இயற்பெயர் யிப் குவாய் லியோங்), சும்பா ஆசிரியரான அவரது மனைவி கெட் லீயும், திருவாட்டி சித்தாரவம்மாவிடம் தற்போது பரதநாட்டியம் கற்று வருகின்றனர்.

“பரதநாட்டியம் அசைவுகள் நிறைந்தது, உடலுக்குச் சக்தியளிப்பது. உணர்வுகள் அற்புதமான நிலையை அடைவதற்கும் அது துணைபுரிகிறது. குரு சீதா எனக்குக் கற்பித்தவை, யோகாசனத்தைப் பற்றிய எனது அறிவாற்றலுக்கு உறுதுணையாக இருக்கிறது. நான் எப்போதும் நிம்மதியாகவும் மருத்துவப் பிரச்சினைகள் இல்லாமலும் இருக்கிறேன். அவர் கற்றுத்தரும் பாடங்களை, சீனாவில் எனக்குள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கற்றுத் தருகிறேன்,” என திரு ஆனந்தா தெரிவித்தார்.

திருவாட்டி சித்தாரவம்மா பரதநாட்டியத்தைப் “படிப்படியாகவும், மிகவும் அக்கறையாகவும்” கற்றுத் தருவதாகச் சொல்கிறார் திருமதி கெட். “குரு சீதா எனக்காக எளிய முறையில் கற்றுத் தருகிறார். மேடையில் நாட்டியமாடக்கூடிய தன்னம்பிக்கை இப்போது எனக்கு இருக்கிறது. இது என் நலனை மேம்படுத்துகிறது. நான் நானாக இருப்பதில் உண்மையான மகிழ்ச்சியும் தருகிறது,” என்றார் அவர்.

தான் எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்படுவதில் மகிழ்ச்சி காண்கிறார் 69 வயதாகும் திருவாட்டி சித்தாரவம்மா. சிங்கப்பூர் நிரந்தரவாசியாக வலுவாக வேரூன்றியிருக்கும் அவர், தமது பணியை இங்கு தொடர விரும்புகிறார்.

அவரது ஒரே மகனான சத்யம் சந்திரசேகரன், 40, இராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் துறைத் தலைவராகப் பணியாற்றும் சிங்கப்பூரர் திவ்ய தர்‌ஷினியை மணந்திருக்கிறார். அவர்களுக்கு அர்ஜுனா என்ற பெயரில் 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது.

“எனது குரு ருக்மினி தேவி (இந்திய இறையியலாளர், நாட்டியமணி, நாட்டிய இயக்குநர்), உண்மையாகவும் நல்ல ஆசிரியராகவும் இருக்கும்படி என்னிடம் சொன்னார். அதைத்தான் நானும் செய்கிறேன். மனநிறைவுடன் வாழ்கிறேன்,” என்றார் திருவாட்டி சித்தாரவம்மா.

“நான் பணத்தைத் தேடிச் செல்லவில்லை, என்னிடம் மில்லியன் கணக்கில் இல்லை. என் கலைக்கு உண்மையாக இருப்பதும், இங்கு பலருக்கும் கற்றுக் கொடுத்ததும் மட்டும்தான் என் மனநிறைவுக்குக் காரணம்.”

“நான் கடைசிவரை இருக்கப்போகும் இடம் கண்டிப்பாக சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்தான். என்னால் இயலும்வரை, சிங்கப்பூரில் கலை வளர்ச்சிக்காக அனைத்து வகையிலும் பங்களிப்பேன்.”

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!