வழக்கநிலைத் தேர்வு: தடைகளை தாண்டி சாதித்த மாணவர்கள்

ரச்­சனா வேலா­யு­தம்

இவ்வாண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் வழக்கநிலைத் (ஜிசிஇ ‘என்’ நிலை) தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. 

தேர்வு எழுதிய 9,000 வழக்கநிலை ஏட்டுக்கல்வி பிரிவு மாணவர்களில் 99.5 விழுக்காட்டினரும் 4,414 வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவு மாணவர்களில் 98 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வறுமையை திறமையால் முறியடிக்கலாம்

குறைந்த வருமான குடும்பத்தைச் சார்ந்த 16 வயதான மகேஸ்வரன் தன்னுடைய விடுமுறை நாள்களில் பெற்றோருக்கு பொருளாதார ரீதியாக உதவும் நோக்கில் விரைவு உணவகங்களில் பகுதி நேரமாக பணிபுரிவார். 

தன்னுடைய நண்பர்கள் மகிழ்ச்சியாக விளையாடும் போது தான் மட்டும் வேலைக்கு செல்வது சற்று கடிமாக இருக்கும் போதிலும் குடும்பத்திற்காக செய்வது மகிழ்ச்சியே என்று கூறுகிறார் மகேஸ்வரன். 

2018ஆம் ஆண்டில் பிஎஸ்எல்இ தேர்வு முடிவுகள் இவர் எதிர்பார்த்த அளவு இல்லாததால் வழக்கநிலை தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்தார். செராங்கூன் கார்டன் உயர்நிலைப்பள்ளி மாணவரான இவர் ஆரம்பத்தில் மிகுந்த கூச்ச சுபாவத்துடன் இருந்தார். 

பிறகு பள்ளியில் ஆசிரியர்களும் சக மாணவர்களும் அளித்த ஊக்கத்தின் பேரில் பல பள்ளி நிகழ்வுகளில் பங்குகொண்டார். குறிப்பாக தேசிய மாணவர் படையில் (National Cadet Corps) இணைந்த இவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது புத்தாக்க சிந்தனையுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்வேறு செயல்களில் ஈடுபட்டார். 

சில மாதங்களிலேயே தலைமைத்துவ பண்புகளில் சிறந்து விளங்கினார். பள்ளிகளின் பல்வேறு கொண்டாட்ட நிகழ்வுகளிலும் 2022, 2021 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய தின பேரணியில் கலந்து கொண்டுள்ளார். 

தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் பேக்கிங் துறை படிப்பை மேற்கொள்ள விரும்பும் இவர் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடும் போதே தன்னம்பிக்கையும் நம்முடைய தனித் திறமைகளும் வளரும் என்று கூறுகிறார்.

குடும்பத்தாருடன் திலோத்திமா டூலி போஸ்.

நற்குணமும் நல்லெண்ணமுமே அழகு 

பருமனான உடலால் பல்வேறு கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளான திலோத்திமா டூலி போஸ் ஒரு கட்டத்தில் தன்னம்பிக்கையை இழந்தார். மெரிடியன் உயர்நிலைப் பள்ளி மாணவியான இவர் சக மாணவர்களுடனும் நண்பர்களுடனும் தன் உடல் வாகை ஒப்பிட்டுப் பார்த்து தாழ்வு மனப்பான்மையால் மிகவும் துயருற்றார். 

மேலும் இவர் நண்பர்களாக நினைத்த பலர் இவரிடம் நேர்மையாக நடந்து கொள்ளாமல் புறம் பேசியது இவரை வெகுவாக பாதித்தது. இக்காரணங்களினால் கவனம் சிதறப்பட்டு நாளடைவில் இவருக்கு படிப்பில் நாட்டம் குறைந்தது. 

பிறகு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளியின் ஊக்கத்தினால் கவனத்தை ஒன்றுதிரட்ட பல்வேறு பள்ளி செயல்பாடுகளில் ஈடுபட்டார். வகுப்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சக மாணவர்களுடன் நட்புணர்வுடனும் அதே சமயம் தன்னுடைய பொறுப்புகளையும் சரிவர செய்தார். 

ஒவ்வொரு உடல்வாகும் அழகு தான் என்பதையும் நாம் செய்யும் செயல்களும் எண்ணமும் தூய்மையாய் இருந்தாலே மகிழ்வுடன் வாழ முடியும் என்பதையும் தான் புரிந்து கொண்டதாக கூறினார் திலோத்திமா. 

2020, 2021ஆம் ஆண்டுகளுக்கான எடுசேவ் நற்குண விருதுகளை இவர் வென்றுள்ளார். தொழில்நுட்பத் துறையில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒன் ஹேக் அ டைம் ஹேக்கத்தான் (One Hack A Time hackathon) போட்டியில் ஒட்டுமொத்த சிறந்த ஹேக் எனும் பரிசினை வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் வருங்காலத்தில் இணையப் பாதுகாப்புத் துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள உள்ளார்.

சமூக தொண்டாற்றுவதே மனநிறைவைத் தருகிறது

தேர்ச்சி பெற்றவர்களில், சமூக அக்கறை கொண்ட ஒருவர் தான் 16 வயது ஸ்ரீநிதா ஏஞ்சல். பல பொறுப்புகளையும், சவால்களையும் எதிர்கொண்ட அவர், இந்த தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். இதற்கு முன் , தமிழில் தேர்ச்சி பெற இவர் சிரமப்பட்டார். அவரின் விடாமுயற்சியினாலும், கடின உழைப்பாலும் இத்தேர்வில் தமிழில் சிறப்பாக செய்துள்ளார் ஸ்ரீநிதா. 

செஞ்சிலுவை சங்கத்தில் இளையர் தொண்டூழியராக ஈடுபட்ட ஸ்ரீநிதா, அவரின் தொண்டு வேலைக்கு பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். சமூதாயத்தில் இருக்கும் முதியோர்களுக்கு, உடல் குறையோருக்கும் அவர் தொடர்ந்து உதவ விரும்புகிறார். பள்ளியில், சட்டாம்பிள்ளையாக இருந்த இவர், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். தொழில்நுட்ப நிலை அதாவது என்டி நிலையில் இருப்பதை ஒரு தடையாக காணாமல், மற்றவர்களின் பேச்சுக்கு சாயாமல்,  ஸ்ரீநிதா தன் கொள்கைகளை நோக்கி உழைத்தார். 

தன் தாயார் மருத்துவ துறையில் வேலை செய்வதால், ஸ்ரீநிதா அவரை போல மருத்துவ துறையில் பணிபுரிய விரும்புகிறார். தாயாரின் உழைப்பையும், வேலை மீதான ஆர்வத்தையம் கண்டு, ஸ்ரீநிதா தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமை படிப்புக்கு தகுதி பெற்றார். அடுத்த மாதம் அவர் தாதியராக, தன் படிப்பை மேற்கொள்வார். அவரின் தாத்தா, பாட்டியை பார்த்துக்கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். இதனால், வருங்கத்தில், முதியோர்களை பார்த்துக்கொண்டு, செஞ்சுலுவை சங்கத்திற்கு தொடர்ந்து பணியாற்ற ஸ்ரீநிதா விரும்புகிறார்.

படிப்பு, குடும்பம், பள்ளி பொறுப்புகளை சமாளிக்க சிரமப்படும் போது, அவர் பியானோ இசை கருவியை வாசித்து, மனஉளைச்சலை போக்குவார். இசை மீதான ஆர்வத்தினால், சுயமாக பியானோவை கற்றுக்கொண்டார்.   

சென்ற ஆண்டு, 'பிளேஸ் எ பிளாக்' திட்டத்தின்கீழ் வசதி குறைந்த குடும்பங்களுக்கு அன்பளிப்பு பைகளை ஸ்ரீநிதா கொடுத்துள்ளார். இதே  போல, பல சமூக திட்டங்களுக்கும் குழுக்களுக்கும் அவர் உதவி செய்து வருகிறார் ஸ்ரீநிதா.

தம்முடைய ஆசிரியருடன் இம்டியாஸ் அஹமத்.

படிக்க உகந்த சூழல் இல்லை; அது ஒரு தடையும் இல்லை

ஒற்றை தாயார் வளர்ப்பில் வளர்ந்த இம்டியாஸ் அஹமத், கல்வியில் ஈடுபாடு இல்லாமல் பல சவால்களை எதிர்கொண்டார். குடும்ப சூழ்நிலையையும் தாண்டி இத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற இவர் இணையப்பாதுகாப்பு நிபுணராக ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். குவீன்ஸ்டவுன் உயர்நிலைப்பள்ளி சேர்ந்த இவர் ஆரம்பத்தில் படிப்பு மீது அவருக்கு அதிக நாட்டம் இல்லை. இவரின் நண்பர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் இவரை ஊக்கிவித்து வந்ததால், படிப்பு மீதான ஆசை வளர்ந்தது. முதலில், கணினி கல்வியில் இவருக்கு அதிக ஈடுபாடு இல்லை. இருப்பினும், இவரின் அண்ணன் போல ஒரு கணினி நிபுணராக ஆக ஆசைப்படுகிறார். 

மற்றவர்களுக்கு உதவும் மனப்பாண்மை கொண்ட இவர், தனது தொண்டு சேவைகளுக்கு எடுசேவ் நற்குண விருது உள்ளிட்ட விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார். 

பள்ளி வேலையாள்களுக்கு இனிப்பு உணவுகளை சமைத்து, கொடுக்க, இம்டியாஸ் தனது சொந்த நேரத்தை ஒதுக்கினார். பள்ளியை சுத்தம் செய்து, பராமரிக்கும் வேலையாள்களுக்கு நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று இம்டியாஸ் தமிழ் முரசிடம் கூறினார். இந்த சுயநலமற்ற குணம் பலராலும் பாராட்டப்பட்டது. தேசிய மாணவர் காவல் படையில் உறுப்பினரான இவர், சக மாணவர்களுக்கு பயிற்சிகளை பொறுமையாக சொல்லிக்கொடுத்தார். 

தாயார், தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை என்ற இவரின் குடும்பத்தின் ஆதரவு இம்டியாஸ்க்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார். குறிப்பாக இவரின் பாட்டி, அவரை அன்றாடம் ஊக்குவித்து, நற்பண்புகளை புகுத்துவார். இம்டியாஸ் தான் ஆசிரியர்களுக்கும் நன்றி கடன் பட்டுள்ளார். அவர்களின் பொறுமை, ஊக்குவிப்பு இல்லாமல், இந்நிலைக்கு வர முடிந்திருக்க முடியாது என்றும் அவர் கூறினார். 

இவரின் தாத்தாவின் சம்பளத்துடன், அரசாங்கம், பள்ளி நிதி ஆதரவும் இவரின் குடும்பத்துக்கு உதவியுள்ளது. தொற்றுநோய் காலத்தில், வீட்டிலிருந்து பள்ளி படங்களை படிக்கும் வசதி இம்டியாஸ் வீட்டில் இல்லை. இருப்பினும், அதை அவர் தடையாக பார்க்கவில்லை. வாழ்க்கையில் இவர் மேலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அனிமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பி பார்க்கும் இவர், வயலின் இசை கருவியை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!