நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் செந்தோசாவிற்கு தனது ஆறு குடும்ப உறுப்பினர்களுடன் சென்ற ஜக்ஜித் சிங்கிற்கு அந்த உல்லாசப் பயணம் தீராத சோகத்தில் முடிந்தது. இன்றுவரை அன்று நடந்ததை மறக்க அவர் முயன்றுவருகிறார்.
ஜனவரி 29, 1983. செந்தோசா கேபிள் கார் ஒன்றில் அவரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் சென்றுகொண்டிருந்தபோது கப்பல் ஒன்றின் கம்பம் கேபிள் கார் பயணம் செய்யும் கம்பியை தாக்கியது. இதனால் தாங்கள் இருந்த கேபிள் கார் உலுக்கப்பட்டதை திரு சிங் நினைவுகூர்ந்தார். சில நிமிடங்கள் கழித்து கேபிள் கார் மீண்டும் குலுங்கியது. இம்முறை அந்த தாக்கத்தால் கேபிள் காரின் கதவு திறந்தது. திரு சிங்கின் தந்தை, பாட்டி, 22 மாதக் குழந்தையான மற்றொரு உறவினர் ஆகியோர் 55 மீட்டர் கீழே கடலுக்குள் விழுந்தனர்.
“என் குடும்பம் உயரத்திலிருந்து கடலில் விழுந்ததை நான் நேரில் பார்த்தேன். நான் கண்ட துயரத்தை வேறு யாரும் அனுபவித்திருக்கமாட்டார்கள்,” என திரு சிங் கூறினார்.
அந்த சமயம் வேலை முடிந்து படகில் சென்றுகொண்டிருந்த திரு அப்துல் லதீப் ஜன்தன் என்பவர் கடலில் விழுந்த குழந்தையைக் கண்டார். கடலுக்குள் அவர் குதித்து குழந்தையை காப்பாற்றினார்.
இந்நிலையில் கேபிள் கார்களில் சிக்கியவர்களை காப்பாற்ற ஹெலிகாப்டர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதிலிருந்து லான்ஸ் கார்ப்பரல் செல்வநாதன் செல்வராஜூ என்பவர் திரு சிங்கையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் காப்பாற்றினார்.
அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
40 ஆண்டுகள் கடந்தும் அந்த சம்பவத்தை இப்போதும் தன்னுடைய நினைவுகளிலிருந்து மறக்கமுடியவில்லை என்கிறார் திரு சிங்.

தன்னுடைய துயரத்தை சமாளிக்க திரு ஜக்தித் சிங் கேளிக்கை துறையில் பணியாற்றிவருகிறார் (படம்: டிஎன்பி முன்னைய படம்)