நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் செல்வி மா.பிரெமிக்கா. தொண்டூழியம் புரிவதிலும் மருத்துவத் துறையில் சேவையாற்றுவதிலும் நாட்டம் கொண்டவராக இருப்பதுடன் தமிழ்மொழியின் மீது பற்றுடையவராகவும் திகழ்கிறார்.
ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியில் தான் படித்த நாள்களை நினைவுகூரும்போது தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் தன்னம்பிக்கையுடன் துணிந்து பேசுவதைப் பள்ளி காலத்தில்தான் கற்றுக்கொண்டதாக எங்களிடம் கூறினார்.
சமூக சேவை புரிந்த அனு
பவங்கள் மூலம் மக்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணம் ஆரோக்கியம் தொடர்பான அவர்களின் அறியாமையே என்று உணர்ந்தார். இந்நிலையை மாற்ற எண்ணியதாலும் மனித உடலிலும் நோய்களிலும் அவர் கொண்டிருந்த ஆர்வத்தாலும் மருத்துவத் துறையில் பயில முடிவு செய்தார். தொடக்கக் கல்லூரியில் மருந்தக வேதியியல் பாடம் படித்ததுடன் 'ஏஸ்டார்' நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வாய்ப்புகளையும் பெற்றார்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இவர் பயின்றபோது, அவர் மருத்துவத்தில் தேர்ச்சி அடைய படிப்பு மட்டும் போதாது என்று உணர்ந்தார். புரிந்துணர்வுடன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டும் நிதானமாகச் சிந்தித்து வலியில் இருக்கும் நோயாளிக்கு உதவு
வதும் முக்கியத் திறன்கள் என்கிறார் செல்வி பிரெமிக்கா.
இந்தியாவின் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஒரு மாதகால பயிற்சியின்போது இதை அவர் உணர்ந்தார்.
"சிங்கப்பூர் சுகாதாரம் மிகவும் மேம்பட்டது. நோயை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிடுகிறோம். குறைந்த பரிசோதனைகள் மூலம் பிரச்சினையைக் கண்டறியும் தன்மை முக்கியம்," என்றார்.
செல்வி பிரெமிக்கா தமிழ்மொழி மீது அதிக ஆர்வமும் மதிப்பும் கொண்டவர். பல இனத்தவர் வாழும் சிங்கப்பூரில் தனது அடையாளத்தை தமிழ்மொழி வலுப்படுத்தியதாக இவர் நம்புகிறார். இவர் ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளியின் இந்தியர் சங்கத்தின் தலைவராகவும் ராஃபிள்ஸ் கல்வி நிலைய (தொடக்கக் கல்லூரி) இந்தியர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் சேவையாற்றியதோடு, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிச் சங்கத்தின் 37வது செயற்குழுவின் துணைத் தலைவராகவும் இருந்தார். மொழியைப் பாதுகாத்து, வரும் தலைமுறைகளுக்கு அதைக் கொண்டு சேர்த்து, அது மற்றவர்களால் தொடர்ந்து பேசப்
படுவதன் அவசியத்தை இவர் பகிர்ந்துகொண்டார்.
"சிங்கப்பூரின் உலகளாவிய அடையாளத்திற்கு மொழியும் கலாசாரமும் முக்கியம். அதுவே நமது தனித்துவம்," என்கிறார் இவர். பள்ளி சார்ந்த ஒரு பாடமாக மட்டும் தமிழ்மொழியைக் கருதாமல், அதை அவரவர் தங்களின் துறை
களுக்கும் வேலைகளுக்கும் கொண்டு சென்று, தமிழ்
மொழிக்கு நம் வாழ்வில் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும் என்பதே இவர் சிங்கப்பூர் இளையர்களுக்கு அறிவுறுத்த விரும்புவதாகும்.

