தேசிய கலைகள் மன்றம், சிங்கப்பூரில் கலைஞர்களுக்கான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி, மேம்படுத்துகிறது. அதன்மூலம், கலைஞர்களின் படைப்புகளை உருவாக்கி அவற்றை மெரு கூட்டுவது இலக்கு.
அந்த வாய்ப்புகளை நேரடியாகவும் மின்னிலக்கத் தளங்கள் மூலமாகவும் வழங்குவதற்கு மன்றம் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளது.
சிங்கப்பூரில் கலைகளுக்கு எப்படி எப்படியெல்லாம் ஊக்கமூட்ட முடியும் என்பதன் தொடர்பான கருத்துகளைச் சுமார் 15,000 பேரிடம் இருந்தும் 1,300 தொழில்துறை பங்காளிகளிடம் இருந்தும் மன்றம் திரட்டி இருக்கிறது. அவற்றை கருத்தில்கொண்டு புதிய முயற்சிகளை அது நடைமுறைப்படுத்துகிறது.
கம்போங் ஜாவாவில் இருக்கக்கூடிய ஓர் இடம் அடுத்த ஆண்டு முடிவில் துடிப்புமிக்க கலைக் கிராமமாக உருவாக்கப்படும்.
முன்பு குடியிருப்புப் பேட்டையாக இருந்த அந்த இடத்தின் எதிர்காலம் பற்றிய விவாதிப்புகளில் கலைஞர்கள் பல்வேறு கருத்துகளையும் முன்வைத்தனர்.
பரந்த அளவில் இணக்கம் காணப்பட்டது. அதன்படி அந்தப் பகுதி பல்வேறு துறைகளைச் சேர்ந்த கலைப் படைப்புகளுக்கான ஓர் இடமாக மிளிர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
கலைஞர்களுக்கு மேலும் ஆதரவை வழங்க அரசாங்கம் நாட்டமாக இருக்கிறது என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் திங்கட்கிழமை 'சிங்கப்பூர் டுநைட்' தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது அறிவித்தார்.
கலைகளுக்கான தேவை கூடும் என்றும் புதுப்புது தொழில்நுட்பங்கள் காரணமாக புதிய வகை கலைகள் உருவாக்கமும் பயனீடும் பல்வேறு ஊடகங்கள், தளங்கள் மூலமாக பரிணமிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்னிலக்க வாய்ப்புகளைப் பலப்படுத்துவது ஒருபுறம் இருக்க, சிங்கப்பூரின் அடுத்த கலைகள் திட்டம் பயிற்சியாளர்களுக்கான வாழ்க்கைத்தொழில் அம்சங்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்கிறது என்றும் ஆதரவு, வழிகாட்டுதல்களை அதிகப்படுத்தி அதன்மூலம் இது சாதிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

