சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் திளைத்த ஜூரோங் வட்டாரம்

இந்தியப் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பற்றிய ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுக்கிழமையன்று (7 மே) ஜூரோங் வட்டாரத்தினர் ‘சித்திரை வானவில்’ என்ற சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

கரகாட்டம், பறையிசை, சிலம்பாட்டம், கோலாட்டம், பரதம், இசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்களில் இடம்பெற்றன. 

பல்லாங்குழி, பரமபதம், கோலமிடுதல், ஆடுபுலியாட்டம், அலங்கார விளக்குகள் உருவாக்குதல் போன்ற பல மரபுடைமையை எடுத்துக்கூறும் விளையாட்டு அங்கங்களும் இடம்பெற்றன. 

நல்வாழ்வு முறையைப் பறைசாற்றிய யோகா, ஹெல்த்ஹப்.எஸ்ஜி போன்ற கூடங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

வெளிநாட்டு ஊழியர்கள் பலர் குழுவாக இணைந்து கபடி ஆடினர். 

மேலும் அங்கு நிறுவப்பட்டிருந்த பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்ற மெய்நிகர் தொழில்நுட்பக் காணொளிகளைக் காட்டும் கூடமும் மாணவர்களின் கவனத்தை ஈர்த்தது. 

ஜூரோங் குழுத்தொகுதி, புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி, யூஹுவா தனித்தொகுதி ஆகியவற்றின் சமூக மன்ற இந்தியர் நற்பணிக் குழுக்கள் ஏற்பாட்டில் நடந்த கொண்டாட்டத்தில் பாலர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மாறுவேடப்போட்டி, கதைசொல்லும் போட்டி, பாட்டுப் போட்டி ஆகியவையும் இடம்பெற்றன. 

வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற்ற கொண்டாட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட ஜூரோங் வட்டாரவாசிகள் பங்குகொண்டனர். 

பாரம்பரிய உணவு வகைகளான வடை, இடியாப்பம் ஆகியவற்றுக்கான உணவுக் கூடங்களும் இருந்தன. 

மூத்த அமைச்சரும் சமுதாயக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

“தமிழுணர்வையும் கலாசார விழுமியங்களையும் போற்றும் இதுபோன்ற வட்டார தமிழ் நிகழ்ச்சிகள் வரவேற்கத்தக்கவை. 

“ஏழு தொகுதிகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியாதலால் இதற்குச் ‘சித்திரை வானவில்’ என்று பெயரிட்டுள்ளனர். இது இவ்வட்டார மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது,” என்று திரு தர்மன் கூறினார். 

அவருடன் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, சுகாதார, சட்ட அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் டான் வு மெங், ஷான் ஹுவாங், சியே யாவ் சுவென், முரளி பிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

“முதல்முறையாக பல தொகுதிகளுடன் ஒன்றிணைந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

“நம் வரலாற்றையும் கலாசாரத்தையும் அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்லவே இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளோம்,” என்று கொண்டாட்ட ஏற்பாட்டுக்குழுத் தலைவரான மணி பெரியசாமி, 50, கூறினார். 

“பல்லாங்குழி, தாயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அங்கங்கள் நம் பாரம்பரியத்தை நினைவூட்டின. இவ்விளையாட்டுகளில் பங்கெடுத்தது பிள்ளைகளுக்குப் புதுவித அனுபவமாக இருந்தது,” என்று கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் ஜெயக்குமார் ஆறுமுகம், 51, கூறினார். 

“நண்பர்களுடன் கபடி விளையாடியது, பள்ளி நாள்களை நினைவுபடுத்தியது. இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது உடல்நலனைப் பேண உதவுவதால் தொடர்ந்து அடிக்கடி விளையாடவுள்ளேன்,” என கபடிக் குழுவில் பங்கெடுத்த வெளிநாட்டு ஊழியரான செல்லையா ராம்குமார், 39, கூறினார்.    

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!