சிங்கப்பூர்: அண்மையில் தேசிய சேவையை முடித்த அல்லது உயர்கல்விக் கழகங்களில் பட்டம் பெற்ற இளையருக்காக 2023ல் 900க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
மொத்த விற்பனை, சுற்றுலாத்துறை, நிபுணத்துவச் சேவைகள், தளவாடம், சுகாதாரப் பராமரிப்பு, உணவுச் சேவைகள், சில்லறை விற்பனை, விமானத்துறை, விண்வெளித்துறை, கட்டுமானம், நிதிச் சேவைகள், கல்வி போன்ற துறைகளைச் சேர்ந்த 114 நிறுவனங்கள் இந்த வேலை வாய்ப்புகளை வழங்கும்.
தகுதிபெறுவோர் செப்டம்பர் முதல் தேதியிலிருந்து “career starter lab” இணையவாசல் வாயிலாக இந்த வேலைகளுக்கு விண்ணப்பம் செய்யத் தொடங்கலாம்.
மே மாதம் அறிவிக்கப்பட்ட முன்னோட்ட வாழ்க்கைத்தொழில் துவக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வேலைகள் வழங்கப்படுகின்றன. தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி), சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் கூட்டிணைந்து அறிமுகப்படுத்திய இத்திட்டம், இளையருக்கு வேலையிட வழிகாட்டுதலும் சீரான பயிற்சியும் அளிக்கும்.
இளையர்கள் பள்ளிப் படிப்புக்குப் பிறகு வேலை செய்யும் வாழ்க்கைக்கு மாறிச்செல்ல உதவும் என்டியுசி திட்டங்களில் இதுவும் ஒன்று.
உலகில் நிறைய மாறிவிட்டன. கொவிட்-19 பெருந்தொற்று, மின்னிலக்க உலக மாற்றங்கள் போன்றவை பெரும் மாற்றங்கள் என்று என்டியுசி தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் சூ கூறினார்.
“இதனால் நம் இளைய தலைமுறையினரின் ஆர்வங்களும் பெரிதும் மாறுபட்டுள்ளன,” என்றார் அவர்.
வாழ்க்கைத்தொழில் துவக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இளையர்கள் 160க்கும் மேற்பட்ட வேலைகளை மூன்று மாதங்களில் செய்து பார்க்கலாம். அந்தக் காலகட்டத்தில் அவர்களுக்கு $1,800 முதல் $4,200 வரையிலான பயிற்சிப் படித்தொகை தரப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முழுநேர வேலையில் சேர்வதற்குமுன் ஒரு வேலை தனக்குப் பொருந்துமா என்பதை இளையரும், அந்த வேலைக்கு இளையர் பொருத்தமானவரா என்பதை நிறுவனங்களும் அந்த மூன்று மாதங்களில் கணிக்கலாம்.
முன்னோட்டக் காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து குறைந்தது மூன்று மாதங்கள் வேலை செய்யும் இளையருக்கு $500 ஊக்கத்தொகையும் கிடைக்கும்.
இளையர்கள் தங்களது வாழ்க்கைத்தொழில் பயணத்தில் அதிக தெளிவுபெற வாய்ப்பளிப்பதற்காக என்டியுசி இந்த முன்னோட்டத் திட்டத்தை வடிவமைத்தது.
பள்ளியிலிருந்து வேலைக்கு மாறிச்செல்லும் 18 முதல் 25 வயதுடைய இளையரின் தேவைகளைக் கவனிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட என்டியுசி ஸ்டார்ட்டர் உறுப்பியத் திட்டத்தையும் என்டியுசி தொடங்கவிருக்கிறது. இதுபற்றிய மேல்விவரங்கள் வெள்ளிக்கிழமை சன்டெக் சிட்டி மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கும் என்டியுசி இளையர் பணிக்குழு கருத்தரங்கில் வெளியிடப்படும்.
“இளைய சிங்கப்பூரர்களே சிங்கப்பூரின் எதிர்காலம். அவர்கள் அனைவரும் தங்களது ஆர்வங்களையும் உள்ளாற்றலையும் நிறைவேற்றிக்கொள்ள நாம் அவர்களுக்கு ஆதரவளிப்பது முக்கியம்,” என்றார் திரு சூ.

