ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் ஜான் லீ சிங்கப்பூருக்கு வருகை அளித்து இருக்கிறார். ஹாங்காங்கின் புதிய தலைவராக ஓராண்டுக்கு முன் பதவி ஏற்ற திரு லீ, முதன் முதலாக சிங்கப்பூருக்கு இப்போது வருகை அளித்து இருக்கிறார்
பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் அவர் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை இங்கு வருகை அளித்து இருப்பதாக வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
ஹாங்காங் தலைவர் பிரதமர் லீயை சந்திப்பார். பிரதமரும் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் அளிக்கும் விருந்தில் அவர் கலந்துகொள்வார்.
சிங்கப்பூர்-ஹாங்காங்: வெற்றிக்கான பங்காளித்துவ உறவு என்ற தொழில்துறை விருந்து நிகழ்ச்சியில் துணைப் பிரதமரும் பொருளியல் கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹெங் சுவீ கியட்டும் ஹாங்காங் தலைவரும் உரையாற்றுவார்கள்.
திரு லீ ஒரு வார கால ஆசியான் பயணம் மேற்கொண்டு அதன் முதற்கட்டமாக சிங்கப்பூர் வந்திருக்கிறார். அவர், மலேசியா, இந்தோனீசியா நாடுகளுக்கும் செல்வார். அவருடன் ஐந்து உயர்நிலை அதிகாரிகளும் பல துறைகளையும் சேர்ந்த 30 பிரமுகர்களும் அந்தப் பயணங்களில் கலந்துகொள்வார்கள் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.


