‘ஜெயிலர்’ காணத் திரண்ட தமிழ் முரசு சந்தாதாரர்கள்

‘ஜெயிலர்’ காணத் திரண்ட தமிழ் முரசு சந்தாதாரர்கள்

3 mins read
b999debc-e485-46c8-b749-55323ca3c46f
பாலசுப்ரமணியம் தம்பதியினர். - படம்: ச ஐஸ்வரியா
multi-img1 of 6

தமிழ் முரசு நாளிதழின் 88வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக நாளிதழின் சந்தாதாரர்களுக்கு மட்டும் இலவசமாக ‘ஜெயிலர்’ திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிட்டியது. ஓர் எளிய கேள்விக்குப் பதிலளித்து வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத் திரையில் பார்க்கும் கொண்டாட்டத்தில் திளைத்தனர்.

ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்ற கேள்விக்குச் சரியாகப் பதிலளித்த 90 பேர், ஆகஸ்ட் 22ஆம் தேதி பாய லேபார் குவார்ட்டர் கடைத்தொகுதியில் அமைந்துள்ள ஷா தியேட்டரில் மாலை 7.30 மணி காட்சியைக் காண ஒன்று திரண்டனர். ஒரு சந்தாதாரருக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் வெற்றியாளர்களுக்குக் குளிர்பானங்களும் சோளப்பொறிப் பைகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

தமிழ் முரசின் 88வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வுகளில் மற்றோர் அங்கமாக ‘முத்து’ஸ் கறி’ உணவகம் வழங்கும் சுவையான உணவு விருந்தை இலவசமாகச் சுவைத்துக்கொண்டே தமிழ் முரசு செய்தியாளர்களுடன் கலந்துரையாடலில் இணையும் பிரத்தியேக வாய்ப்பும் சந்தாதாரர்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

இதற்கு 60 நுழைவுச்சீட்டுகள் வரை வழங்கப்படும். வாய்ப்பு இம்மாதம் கடைசியில் முடிவடைகிறது. திரைப்படத்தைக் காண வந்தவர்கள் இந்த வாய்ப்பையும் நழுவவிடாமல் ஆர்வமாகத் தங்கள் கைப்பேசிகளை எடுத்து கியூஆர் குறியீட்டை வருடி அதில் கேட்கப்பட்ட எளிய கேள்விக்குப் பதிலளிக்கத் தொடங்கினர்.

மேலும், தமிழ் முரசு சந்தாதாரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘தி ஒரிஜினல் வடை’ கடையிலிருந்து இரண்டு வடைகளை இலவசமாகப் பெற்றுக்கொண்டு மகிழும் வாய்ப்பும் காத்துக்கொண்டிருக்கிறது. இந்தச் சலுகை அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நீடிக்கும். ஒரு சந்தாதாரர் இரண்டு வடைகள் வரை பெற முடியும்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்த பாலசுப்ரமணியம் தம்பதியினர், 15 ஆண்டுகளாக தமிழ் முரசு நாளிதழுக்குச் சந்தா செலுத்தி வருகின்றனர். நாட்டு நடப்பு, மாணவர் முரசு போன்ற பக்கங்களை விரும்பிப் படிக்கும் அவர்கள் நாளிதழ் படிப்பதன் மூலம் ஒருவரின் தமிழ்மொழிப் புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்றனர். மகன் ஏற்கெனவே திரைப்படத்தைப் பார்த்துவிட்ட நிலையில் இருவரும் ஜெயிலர் திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருந்தனர்.

முன்பு வார இறுதிகளில் மட்டும் நாளிதழை வாங்கி படித்த 66 வயதான அகிலா ஸ்ரீனிவாசன், கடந்த ஈராண்டுகளாகத் தம் கணவர் வெங்கட்ராமன் ஸ்ரீனிவாசனோடு இணைந்து சந்தா செலுத்தி வருகிறார். தமிழ் முரசு நாளிதழில் சிறுகதைப் பக்கமும் வாரயிறுதிப் பக்கங்களும் தங்களுக்குப் பிடிக்கும் என்று குறிப்பிட்ட இவர்கள், “தமிழ் முரசு எங்களைப் போன்ற சந்தாதாரர்களுக்கு இந்த வாய்ப்பளித்தது மிகவும் சிறப்பாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து அவர்கள் வழங்கும் செய்திகளைப் படித்து ஆதரவு அளிப்போம்,” என்று மகிழ்வோடு கூறினர்.

தமிழ் முரசின் முதல் பக்கமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் சிறப்புக் கட்டுரைகளும் வேதித்துறையில் பொறியாளராகப் பணிபுரியும் 42 வயது கோபி கண்ணனுக்குப் பிடித்தவை. தேசிய நூலக வாரிய உறுப்பினராக இருக்கும் அவர், சந்தாதாரராக இருக்கும் தம் நண்பருடன் படத்தை இரண்டாவது முறையாகக் காண வந்திருந்தார்.

“தமிழ் முரசு நல்ல முயற்சி எடுத்து என்னைப் போன்ற வாசகர்களுக்குச் சுவாரசியமான செய்திகளை வழங்கி வருகிறது. ஆனாலும் நாளிதழில் தினமும் ஒரு திருக்குறளைச் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்,” என்று பரிந்துரைத்தார்.

தருண் தயாள், 20, தம்முடைய நண்பர் 22 வயது அருண் முகிலனோடு திரைப்படத்தைக் காண வந்திருந்தார். தமிழ் முரசு நாளிதழின் சந்தாதாரராக இருக்கும் உறவினர் ஒருவரால் திரைப்படம் காண வர முடியாத சூழ்நிலையில் அவருக்குப் பதிலாக வந்த இருவரும், “நாங்கள் தமிழ் முரசு அவ்வப்போதுதான் படிப்போம். பெரும்பாலும் திரைப்படச் செய்திகள் மட்டுமே எங்களைக் கவர்கின்றன. இளையர் முரசு செய்திகள் பற்றி கேள்விப்பட்டோம். இனிமேல் அதை விரும்பிப் படிக்க முடிவெடுத்துள்ளோம்,” என்று குறிப்பிட்டனர்.

தமிழ் முரசின் 88வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நிகழ்வுகளைக் குறித்த கூடுதல் தகவல்களுக்கு வாசகர்கள் தமிழ் முரசின் சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்