சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் திரு தர்மன் சண்முகரத்னம், 66, மாபெரும் முன்னிலை பெற்றுள்ளார் (தமிழ் முரசு நேற்றிரவு அச்சுக்குச் செல்வதற்கு முந்திய நிலவரம்).
வெள்ளிக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் மாதிரி வாக்கு எண்ணிக்கையில் திரு தர்மன் 70 விழுக்காடு வாக்குகள் பெற்று மாபெரும் முன்னிலை பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு இங் கொக் சொங்கிற்கு 16 விழுக்காடு வாக்குகளும் திரு டான் கின் லியானுக்கு 14 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.
முன்னாள் மூத்த அமைச்சரான திரு தர்மன், வாக்களிப்பு முடிந்த பிறகு தாமான் ஜூரோங் உணவு நிலையத்திற்குச் சென்றார்.
அங்கு அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். தங்கள் கைகளில் அன்னாசிப்பழத்தையும் சிங்கப்பூர் கொடியையும் ஏந்தி, அவர்கள் உற்சாகக் குரல் எழுப்பியும் கைத்தட்டியும் திரு தர்மனை வரவேற்றனர்.
அதிபர் தேர்தலில் ‘ஒருவருக்கொருவர் மரியாதை’ என்பது திரு தர்மனின் முழக்கவரியாக இருந்தது.
மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மன், சிங்கப்பூரர்கள் தமக்களித்துள்ள வலுவான ஆதரவிற்குத் தலைவணங்குகிறேன் என்றார்.
அதிபர் தேர்தலை மதிப்புமிக்க போட்டியாக்கிய சக வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் தேர்தல் காலகட்டத்தில் இடம்பெற்ற அனைத்து நிகழ்வுகள் தொடர்பிலும் அணுக்கமாகவும் அமைதியுடனும் ஈடுபாடு காட்டிய சிங்கப்பூரர்களுக்கு அவர் நன்றிகூறிக்கொண்டார்.
“எனக்குக் கிடைத்த வாக்குகள் சிங்கப்பூரின்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்குக் கிடைத்த வாக்குகள். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேறுவோம் என்ற நேர்மறைச் சிந்தனைக்குக் கிடைத்த வாக்குகள்,” என்றார் திரு தர்மன்.
மக்கள் ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ள இடமாக, ஒவ்வொரு தலைமுறையும் நமக்கு உதவக்கூடிய இடமாக உள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கும் நாடாக எதிர்காலத்தில் சிங்கப்பூர் திகழும் என்று திரு தர்மன் நம்புகிறார்.
“சிங்கப்பூரர்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கைக்காகவும் அவர்கள் வெளிப்படுத்திய கருத்துகளுக்காகவும் அவர்களை மதிக்கிறேன்,” என்று திரு தர்மன் கூறினார்.
தேர்தல் காலகட்டத்தில் துடிப்புடன் பங்காற்றிய சக வேட்பாளர்கள் இருவரையும் அவர் பாராட்டினார்.
மாதிரி வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு இங் கொக் சொங், 75, மக்கள் திரு தர்மனுக்குப் பேராதரவு அளித்தமைக்காகத் தாம் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
திரு தர்மனுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்ட திரு டான் கின் லியான், 75, மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தர அவரால் முடியும் என்றும் நம்புவதாகக் கூறினார்.

