உயர்தரமிக்க, நம்பகமான ஊடகத்தின் முக்கியத்துவம் பற்றி பிரதமர் லீ சியன் லூங் விளக்கி இருக்கிறார்.
செய்திகள் எந்த வடிவில் மாறினாலும் அது பிரச்சினை இல்லை. உயர் தரமான, உள்ளதை உள்ளபடியே தெரிவிக்கின்ற, நம்பிக்கைமிக்க, செல்வாக்குமிக்க செய்தியாளர்களும் தொடர்ந்து பல தலைமுறை சிங்கப்பூரர்களைக் கவர்ந்து அவர்களை ஐக்கியப்படுத்தும் சீன ஊடகமும் தேவை என்று பிரதமர் வலியுறுத்திக் கூறினார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனம் வெளியிடும் சீன மொழி நாளிதழான லியான்ஹ சாவ் பாவ் நாளிதழின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் ஷங்ரி-லா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
வாசகர்களைத் தொடர்ந்து கவரும் வகையில் அனைத்தையும் உள்ளடக்கிய பல்லூடக செய்தித்தளமாக தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சாவ் பாவ் நன்கு உணர்ந்து இருக்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
அடுத்த 10 ஆண்டுகளிலும் அதற்கு அப்பாலும் ஊடகங்கள் எப்படி உருமாறும், எந்த வகை, எந்த வடிவ செய்திகள் அதிகமாக விரும்பப்படும் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது என்று பிரதமர் கூறினார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் நிறுவனத்துக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கிறது. உயர்தரமிக்க, நம்பகத்தன்மைமிக்க, செல்வாக்குமிக்க ஊடகம் முக்கியம் என்பதால் அரசாங்கம் ஆதரவு அளிக்கிறது.
அரசாங்கம் சாவ் பாவ் நாளிதழுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்கும். இதனால் சிங்கப்பூரர்கள் செய்திக்கும் தகவல்களுக்கும் தொடர்ந்து அந்த நாளிதழை நம்பலாம். அவர்கள் காலத்திற்கு பின்தங்கிவிடாமல் இருந்து வரலாம் என்றார் திரு லீ.
திரு லீ, சாவ் பாவ் நாளிதழை அன்றாடம் படிப்பவர். சிங்கப்பூரில் மட்டுமன்றி ஆசியாவிலும் நம்பத்தகுந்த சீன ஊடகமாக சாவ் பாவ் திகழ்வதற்கான மூன்று முக்கிய அம்சங்களை பிரதமர் குறிப்பிட்டார்.
சாவ் பாவ் செய்தித்துறையில் நேர்மையின் அடையாளமாகத் திகழ்கிறது;
சிங்கப்பூரின் முக்கிய சீன மொழி நாளிதழான அது சமூகப் பிணைப்பையும் சிங்கப்பூரர் தனித்தன்மையையும் பலப்படுத்துவதில் முக்கியமான பங்காற்றுகிறது;
உலகப் பிரச்சினைகள் பற்றி அது சிங்கப்பூரர்களுக்கே உரிய கண்ணோட்டத்தில் செய்திகளை தெரிவிக்கிறது. அதோடு, பலதரப்பட்ட, நியாயமான கண்ணோட்டங்களுக்கான தளமாகவும் அது சேவையாற்றுகிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
நன்யாங் சியாங் பாவ், சின் சியூ ஜிட் போ இரண்டு செய்தித்தாட்களும் முறையே 1923 ஆம் ஆண்டிலும் 1929ஆம் ஆண்டிலும் தோற்றுவிக்கப்பட்டன.
அந்த இரண்டு செய்தித்தாட்களும் சேர்க்கப்பட்டு 1993ல் சாவ் பாவ் உருவானது.
வெள்ளிக்கிழமை நடந்த விருந்தில் 700 பேர் கலந்துகொண்டனர்.


