ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த மாதின் அன்புநிறைந்த வாழ்க்கை

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த மாதின் அன்புநிறைந்த வாழ்க்கை

2 mins read
3e1afab8-4902-4ed1-a749-4a1a85fe92aa
திருவாட்டி ஆனுக்குப் பக்கபலமாக இருக்கும் கணவர் ஸ்டீவன். - படம்: ஆதர்ஷ் வின்சன்ட்
Google News Preferred Icon

தாயாரால் கைவிடப்பட்டு, தந்தை யார் என அறியாமல் சிறுமியர் இல்லத்தில் வளர்ந்து ஆன் ஸ்டீவன் பெரேரா, 63, பிறரின் துயர்தீர்ப்பவராகத் திகழ்கிறார்.

ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த திருவாட்டி ஆன், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் பிறரின் துயர்களைச் செவிமடுத்து தோள்கொடுக்கிறார். நோய் அல்லது வறுமையால் வாடுபவரைக் கண்டு அவர்களுக்குரிய உதவிகளை ஏற்பாடு செய்வது இவரது வாழ்க்கை முறையாக மாறியுள்ளது.

விக்டோரியா ஸ்திரீட்டில் இருந்த இன்ஃபன்ட் ஜீசஸ் ஆதரவற்றோர் இல்லத்திலும் புக்கிட் தீமாவில் இருந்த சிறுமியர் இல்லத்திலும் கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்டார் ஆன். உண்ண உணவு, உடுக்க உடை ஆகியவற்றை அவர்கள் உறுதி செய்ததை நினைவுகூர்ந்தார்.

“ஆயினும் ஒரு சிறுமிக்கு அப்போது தேவைப்பட்ட அன்பும் தாய்மையும் அவர்களால் முழுமையாகத் தர இயலவில்லை,” என்றார்.

வளர்ப்புக் குடும்பத்தைத் தேட கன்னியாஸ்திரிகள் முயன்றபோது வளர்ப்புக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் தன்னைத் தவறான முறையில் அணுகிய விபரீதத்தையும் நினைவுகூர்ந்தார்.

சொந்தக் காலில் வாழ எண்ணி 16 வயதில் சிறுமியர் இல்லத்தைவிட்டு வெளியேறினார். வாடகை வீடுகளின் கட்டண உயர்வுகளால் அடிக்கடி வீடு மாற வேண்டிய துன்பத்திற்கு ஆளானார். சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்து முகாமிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்.

வேலை இடத்திலேயே தம் வருங்கால கணவரைச் சந்தித்து அவரைத் திருமணம் செய்துகொண்டனர்.

கணவருக்கு முன்பான முதல் காதலரின் பெற்றோர் தன்னை அனாதை என இகழ்ந்ததை இவர் நினைவுகூர்ந்தார்.

“இப்போது நான் இரண்டு வளர்ந்த மகன்களுக்குத் தாயார். என் மூத்த மகனுக்கு அண்மையில் திருமணம் நடந்தது,” என்றார் இவர்.

பிறருக்குத் தாயன்பு பொழியும் இவர், இன்றுமே தம் வாழ்வின் ஒரே அன்னையாக இயேசுபிரானின் அன்னை மேரியை எண்ணி வழிபடுவதாகக் கூறினார்.

பெற்றவர்களை மன்னிப்பது சில சமயங்களில் எளிதன்று என்றாலும் பிராத்தனைகளின் மூலம் தமக்குள் பக்குவத்தையும் எல்லையில்லா அன்பையும் வளர்ப்பதாக இவர் கூறுகிறார்.

குறிப்புச் சொற்கள்