ஆயுதத்துடன் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

ஆயுதத்துடன் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றச்சாட்டு

1 mins read
971d88e1-83b2-4ca9-ba37-25c5fbb2fa32
காரில் இருந்து இறங்கி தப்பித்து ஓட முயன்ற ஆடவரை காவல்துறை அதிகாரி துரத்திப் பிடித்து கைது செய்தார். - படம்: சமூக ஊடகம்
Google News Preferred Icon

இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது ஆடவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்றதோடு தமது காரில் சாமுராய் வாள் ஒன்றை வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

முகம்மது ஃபர்ஹான் முகம்மது நூர் எனப்படும் அந்த ஆடவர் மீது, பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்தது, போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியிடம் பொய்யான தகவல்களை வழங்கியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட எட்டுக் குற்றச்சாட்டுகள் வெள்ளிக்கிழமை (மே 17) சுமத்தப்பட்டன.

ஓட்டுநர் உரிமம் இல்லாத நிலையில் கடந்த புதன்கிழமை (மே 15) காலை 11.25 மணியளவில் சிம்ஸ் டிரைவ் வழியாக கார் ஓட்டிச் சென்றார். சீருடையில் இருந்த காவல்துறை அதிகாரிகள் காரை நிறுத்துமாறு கூறியபோதும் அதற்கு இணங்க மறுத்து அவர் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்றார். உடனடியாக அதிகாரிகள் அவரைத் துரத்தினர்.

தப்பிக்கும் முயற்சியில் அவர் ஆபத்தான முறையில் காரை ஓட்டியதோடு, ஓர் இடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடி தப்பிக்க முயன்றதாகவும் அதிகாரி ஒருவர் அவரை விரட்டிப் பிடித்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரரான ஃபர்ஹான் இவ்வாண்டின் ஜனவரி மாதத்திலும் போக்குவரத்து தொடர்பான சில குற்றங்களில் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

அவர் மீண்டும் ஜூன் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்.

பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்கு மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, ஆறு பிரம்படிகள் ஆகியன விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்