சிங்கப்பூரின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) பெய்த இடைவிடாத மழையால், புதன்கிழமை காலை தீவின் மத்தியப் பகுதியில் வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியஸ் வரை இறங்கியது.
ஜனவரியில் பதிவான 22.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையைவிட இது குறைவு.
புதன்கிழமை காலை 5.10 மணியளவில் நியூட்டனில் வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியஸ் எனும் அளவில் பதிவானதாக சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காலை 7.20 மணியளவில் அங்கு வெப்பநிலை 21.6 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
கிளமெண்டியில் வெப்பநிலை 21.7 டிகிரி செல்சியசாகக் குறைந்தது. அங் மோ கியோவில் வெப்பநிலை 21.9 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
செம்பவாங், அட்மிரல்டியில் வெப்பநிலை 22.1 டிகிரி செல்சியசாக இருந்தது.
தீவின் கிழக்கில், சாங்கியில் வெப்பநிலை 22.4 டிகிரி செல்சியசாகவும் ஈஸ்ட் கோஸ் பார்க்வேயில் அது 23.1 டிகிரி செல்சியசாகவும் இருந்தது.
தெற்கு ஜோகூரிலும் சிங்கப்பூரிலும் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து பெய்து வந்த பருவமழை புதன்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டது.
"மிதமான முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று குறிப்பிட்ட மையம், சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாகக் குறையக்கூடும் என்றது.
இந்நிலையில், சாங்கி விமான நிலையத்தை நோக்கிச்செல்லும் தீவு விரைவுச்சாலையில், புளோக் 195 கிம் கியட் அவென்யூ அருகே காலை 7.30 மணியளவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

