ஏறத்தாழ 30 ஆயிரம் வீடுகளுடன் விரிவடையவுள்ள தெங்கா வட்டாரத்தில் குடியிருப்பாளர்களுக்கு உதவும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளும் விரிவுபடுத்தப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தெரிவித்துள்ளது.
தெங்காவில் திட்டமிடப்பட்டுள்ள 30,000 அடுக்குமாடி வீடுகளில் கிட்டத்தட்ட பாதி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் ஜூலை மாதம் கூறியதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.
தெங்காவின் இரண்டாவது அக்கம்பக்க நிலையமான ‘பார்க் பாயிண்ட்’, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் திறக்கப்படும்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடி, ‘கோர்மே பேரடைஸ்’ உணவங்காடிகளுடன் தொடங்கி பல்வேறு கடைகளுடன் விரிவடையவுள்ள இந்நிலையம், இதுவரை வீடுகள் வாங்கியுள்ள 12 ஆயிரம் குடியிருப்பாளர்களுக்குப் பலனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
தெங்கா பகுதியில் 1,044 வீடுகள் அடங்கிய 12 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு உதவும் வகையில் அங்குப் பல்வேறு அம்சங்களும் இடம்பெறுகின்றன.
மேலும், இந்த தெங்கா அக்கம்பக்க நிலையத்தில், நடைப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம், மின்படிக்கட்டுகளுக்கு அருகிலேயே சாதாரணப் படிக்கட்டுகளும் அமைக்கப்படும். பொதுவாக, கடைத்தொகுதிகளில் ஓர் ஓரத்தில் இருப்பது போலல்லாமல், பலரைப் படிக்கட்டுகளில் ஏற ஊக்குவிக்கும் வண்ணம், எளிதில் அணுகுமிடத்தில் அமைக்கப்படும்.
அப்படிக்கட்டுகள் மாடித்தோட்டத்தைச் சென்றடையும் என்பதால், அதைக் குடியிருப்பாளர்கள் ஒன்றுகூடல், ஓய்வு நேரங்களைச் செலவிடுதலுக்குப் பயன்படுத்த இயலும்.
குடியிருப்பாளர்களிடையே துடிப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள மழைக்காடுகளுடன் கூடிய நல்வாழ்வுத் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவும் நேரடியாக மாடித்தோட்டத்தைச் சென்றடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு உடற்பயிற்சிக்கான கருவிகளும் இடம்பெறவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
கருப்பொருள்களுடன் வடிவமைக்கப்பட்ட விளையாட்டுப் பூங்கா, பறவைகள் சரணாலயம், வண்ணத்துப்பூச்சிப் பூங்கா, 225 மீட்டர் நீளமுள்ள நடைப்பயிற்சிப் பாதை ஆகியவையும் இதில் அமையவுள்ளன.
தரைத்தளத்தில் குழந்தைப் பராமரிப்பு நிலையம், திறந்தவெளி விளையாட்டுப் பகுதிகள், பயிற்சிக் கருவிகளுடன் கூடிய சமூக நடுவம், எந்தவித வெப்பநிலையிலும் பயன்படுத்த ஏதுவாக அமையவுள்ளன.
நவம்பர் 2025 நிலவரப்படி, எட்டு பாலர் பள்ளிகள் செயல்பாட்டில் உள்ள நிலையில் ஆறு பாலர் பள்ளிகள், தெங்காவின் முதல் தொடக்கப் பள்ளியான பயனியர் தொடக்கப்பள்ளி ஆகியவையும் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்படத் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
குடியிருப்பாளர்கள் தெங்கா நகர மையம், ஜூரோங் வட்டார பெருவிரைவு ரயில்தடம், ‘சென்ட்ரல் பார்க்’ உள்ளிட்ட பிற வசதிகளை எதிர்பார்க்கலாம்.

