ஆளில்லா வானூர்திகள் செயல்பாட்டில் இருக்கும்போதே நேரடி விவரங்களைப் (real time) பெறும் நோக்கில் அவற்றைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும் முறையை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தகைய முறையை உருவாக்க ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளில்லா வானூர்திகள், ஆட்கள் நேரடியாக இயக்கும் விமானங்கள் ஆகியவற்றுக்கிடையே வித்தியாசத்தை அறிய உதவும் நோக்குடன் அந்த முறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதோடு, ஆளில்லா வானூர்திப் போக்குவரத்து நிர்வாக முறை (UTMS - யுடிஎம்எஸ்) என்றழைக்கப்படும் அந்த முறையில் ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவோர் பதிவு செய்து விமானி உரிமங்கள் உள்ளிட்ட தேவையான உரிமங்களுக்கு விண்ணப்பிக்க வகைசெய்வதும் நோக்கமாகும். அத்தகைய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு ஒரே தளத்தை உருவாக்குவது யுடிஎம்எஸ் முறையின் இலக்கு.
யுடிஎம்எஸ் முறையை உருவாக்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்குமாறு சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 12) அழைப்பு விடுத்தது. ஆகாயப் போக்குவரத்து நிர்வாக முறைகள், சவாலான விமானத் துறை முறைகள் ஆகியவற்றை உருவாக்கும் அனுபவம் உள்ள தரப்புகள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்கலாம்.
இத்தகைய முறை உருவாக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. புதிய முறை, ஆளில்லா வானூர்திகளைக் கண்காணித்து பயனர்களுக்கு நேரடி விவரங்களை அளிக்கும். வர்த்தகங்கள் பயன்படுத்தும் வானூர்திகள், பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்படும் வானூர்திகள் என இருவகையானவற்றுக்கும் புதிய முறை பொருந்தும்.
ஆளில்லா வானூர்திப் பயன்பாட்டின் தொடர்பில் விதிமுறைகளை மீறுவோர் மீது ஆக்ககரமான முறையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் யுடிஎம்எஸ் வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதிக்கப்பட்ட பகுதியைத் தாண்டி ஆளில்லா வானூர்திகளை இயக்குவது அத்தகைய விதிமீறல் செயல்களில் அடங்கும்.
அதோடு, ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் ஆகாயப் படை, சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளால் ஆளில்லா வானூர்தி தொடர்பான விண்ணப்பங்களை ஒரே நேரத்தில் ஆராய முடியும் என்றும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது.

