மோசடிக்காரர் கூறிய பொய்யை நம்பி ஏமாந்த பெண், தமது சேமிப்பில் பெரும் பகுதியை இழந்தார்.
அவரிடமிருந்து $67,500 பறிக்கப்பட்டது.
அப்பெண் ‘வீசாட்’ தகவல் தளத்திலிருந்து தவறுதலாகக் காப்புறுதித் திட்டம் வாங்கிவிட்டதாக மோசடிக்காரர் அவரிடம் தெரிவித்திருந்தார்.
அதை ரத்து செய்ய அப்பெண் அவரிடம் பணத்தை அனுப்பினார்.
மோசடியிலிருந்து பாதுகாக்கும் காப்புறுதித் திட்டத்தை வாங்கிவிட்டதாக அப்பெண்ணிடம் பொய் கூறப்பட்டது.
தம்மை வீசாட் தகவல் தளத்தில் ஊழியராக அந்த மோசடிக்காரர் அடையாளப்படுத்திக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தவறுதலாக வாங்கிய காப்புறுதித் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமாயின் வங்கிக் கணக்கிலிருந்து பலமுறை பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட 35 வயது பெண்ணிடம் அந்த மோசடிக்காரர் தெரிவித்தார்.
சந்தா தொகை கட்டுவதைத் தவிர்க்க வாங்காத காப்புறுதித் திட்டத்தை ரத்து செய்ய பணம் செலுத்தினார் அப்பெண்.
தொடர்புடைய செய்திகள்
இதற்காக அவர் கடன் வாங்கினார்.
காப்புறுதித் திட்டத்துக்காக விண்ணப்பம் செய்த ஞாபகம் இல்லாதபோதிலும் அவர் அதை ரத்து செய்ய பணம் செலுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பில் திருவாட்டி இங் என்று அழைக்கப்படும் அந்தப் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாகக் காவல்துறை தெரிவித்தது.
இந்த மோசடி குறித்து தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றும் திருவாட்டி இங் ஜனவரி 3ஆம் தேதியன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேசினார்.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோசடிக்காரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக அவர் கூறினார்.
வீசாட் தகவல் தளத்துடன் இணைக்கப்பட்டிருந்த டிரஸ்ட் வங்கி அட்டையைப் பயன்படுத்தி காப்புறுதித் திட்டத்துக்காகத் தாம் பணம் செலுத்தியதாக அந்த நபர் தம்மிடம் கூறியதாக திருவாட்டி இங் தெரிவித்தார்.
தமது வங்கிக் கணக்குகள் அனைத்தையும் அவர் பட்டியலிட்டுக் கூறியதாகவும் திருவாட்டி இங் கூறினார்.
எனவே, அவரை நம்பியதாகவும் பதற்றமடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மோசடிக்காரர் கூறியபடி டிரஸ்ட் வங்கிக் கணக்கிலிருந்து $27,800 கடன் வாங்கி அவருக்கு அனுப்பி வைத்ததாகத் திருவாட்டி இங் கூறினார்.
பிறகு $16,700 கடன் வாங்கி அதை அந்த நபரிடம் அனுப்பியதாகவும் அவர் கூறினார்.
தமது சேமிப்பிலிருந்து $23,000 அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
கடனை அடைக்க பகுதிநேர வேலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் திருவாட்டி இங் கூறினார்.
2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்கும் 31ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சீன நிறுவனங்கள் தொடர்பாக குறைந்தது 1,591 மோசடிப் புகார்கள் செய்யப்பட்டன.
அவற்றின் மூலம் குறைந்தது $279 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.

