உலகின் முதல் மின்னிலக்க வர்த்தக விதிமுறைகள் சிங்கப்பூருக்கு நன்மை தரும்

உலகின் முதல் மின்னிலக்க வர்த்தக விதிமுறைகள் சிங்கப்பூருக்கு நன்மை தரும்

2 mins read
a144329d-eb2e-470b-8227-495ec29524c6
கெமரூனில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் 14வது மாநாட்டில் பல நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்டனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

உலக வர்த்தக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள உலகின் முதல் மின்னிலக்க வர்த்தக விதிமுறைகள், மின்னிலக்கப் பொருளியலில் உள்ள சிங்கப்பூரர்களுக்கும் சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் என்று வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ கூறியுள்ளார்.

கெமரூனில் நடைபெற்ற 14வது உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் 66 உறுப்பு நாடுகள் மின்னிலக்க வணிகத்துக்கான உடன்பாட்டைத் தங்கள் நாடுகளில் தொடங்க ஒப்புதல் அளித்தன. அவற்றுள் சிங்கப்பூரும் ஒன்று.

ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், லாவோஸ், பிலிப்பீன்ஸ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பிரிட்டன் ஆகியவையும் அவற்றின் சொந்த நாடுகளில் உடன்பாட்டைப் பின்பற்ற சம்மதித்தன.

மின்னிலக்க வர்த்தக விதிகளை உலக வர்த்தக நிறுவனத்தின் ஏடுகளில் சேர்க்க மேற்கொண்ட முடிவை அண்மை ஆண்டுகளில் இந்தியா போன்ற ஒருசில உறுப்பு நாடுகள் மறுத்துவந்தன.

தற்போது மின்னிலக்க வணிகத்துக்கான விதிமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து வளரும் மின்னிலக்கப் பொருளியலால் சிங்கப்பூருக்கும் சிங்கப்பூர் வர்த்தகங்களுக்கும் புதிய வாய்ப்புகள் கிட்டும் என்று திருவாட்டி ஃபூ குறிப்பிட்டார்.

“செலவினங்களைக் குறைத்து நம்பிக்கையை வலுப்படுத்தி, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளை வளர்க்க அது கைகொடுக்கும்,” என்றார் அவர்.

அனைத்துலக வர்த்தக விதிமுறைகளை மேம்படுத்துவதில் உலக வர்த்தக நிறுவனத்துக்கு உள்ள முக்கிய பொறுப்பை மின்னிலக்க வணிகத்துக்கான உடன்பாடு மறுவுறுதிப்படுத்துவதாகக் கூறிய அவர், எப்போது வேண்டுமானாலும் பிற உறுப்பு நாடுகள் அதில் இணைந்துகொள்ளலாம் என்றார்.

“மின்னிலக்க வணிக உடன்பாட்டைச் செயல்படுத்துவதற்கான முயற்சிகளைத் தொடர்வோம்,” என்று திருவாட்டி ஃபூ கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின்படி அனைத்துலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் 60 விழுக்காட்டுக்கும்மேல் பங்கு வகிக்கின்றன.

மின்னிலக்க வர்த்தகத்தின் பலன்களை வர்த்தகங்களும் பயனீட்டாளர்களும் உடனடியாக அனுபவிக்க மின்னிலக்க வணிக விதிமுறைகள் துரிதமாகச் செயல்படுத்தப்படுவதை உடன்பாடு ஆதரிப்பதாக உலக வர்த்தக நிறுவனம் சொன்னது.

உலக வர்த்தக நிறுவனமும் மின்னிலக்கக் கூட்டுறவும் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு மூலம், மின்னிலக்க வணிக உடன்பாட்டைச் செயல்படுத்த தவறினால் ஒவ்வொரு வர்த்தக ஆண்டுக்கும் கிட்டத்தட்ட $159 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்தது.

எனினும், உலக வர்த்தக நிறுவனத்தில் முழுமையாக அந்த உடன்பாடு செயல்படுத்தப்படுவதில் சவால்கள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

வர்த்தக உடன்பாடுகள் ஒப்புதலின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற இந்தியா, உடன்பாடு நிறைவேற்றப்படுவதை இதற்குமுன் தடுத்தது.

அமெரிக்கா உடன்பாட்டை இன்னும் மறுஆய்வு செய்துவருவதால் அதை ஏற்றுக்கொள்ள இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்
மின்னிலக்கம்வர்த்தகம்பொருளியல்விதிமுறை