கற்பனையும் பொறியியல் நுட்பமும் கைகோக்கும் கனவு இல்லம்

சொந்த வீடு வாங்க வேண்டும், அந்த வீடு தனித்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கனவு எல்லாருக்கும் உண்டு.
அறிவியல், பொறியியல் சார்ந்த மாய கற்பனைக்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பது சண்முகராஜ்-மகேஸ்வரி தம்பதியின் கனவு. தங்களது விருப்பங்களுக்கும் கற்பனைகளுக்கும் உருக்கொடுத்து நான்கறை வீவக வீட்டைத் தங்களது கனவுலகமாக உருமாற்றியுள்ளனர் இத்தம்பதியர்.

பொறியியல் துறையில் பணியாற்றும் சண்முகராஜ்-மகேஸ்வரி தம்பதி கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருமணம் புரிந்து, சில மாதங்கள் கழித்து, புதிய நான்கறை வீவக வீட்டில் இல்லற வாழ்க்கையைத் தொடங்க ஆயத்தம் ஆகினர். சற்று மாறுபட்ட பொழுதுபோக்குகளில் ஈடுபடும் இருவரும் தாங்கள் வசிக்கும் வீடு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதன்படி, வீட்டு அலங்கார சஞ்சிகைகளைப் புரட்டி, இணையம் வழி ஆராய்ச்சி செய்து, புதுப்பிப்பு நிறுவன கண்காட்சிகளுக்குச் சென்று புதிய வீட்டை எப்படியெல்லாம் புதுப்பிக்கலாம் என பல மாதங்களாகத் திட்டமிட்டனர். ப.மகேஸ்வரிக்குத் தொழிற்சாலை சூழலும் ப.சண்முகராஜுக்கு பேரிடர் நடந்த சூழல் வடிவமைப்பும் பிடித்திருந்தன. இருவரது விருப்பங்களும் வீட்டு புதுப்பிப்பில் உள்ளடக்கப்பட்டன.

வீட்டு புதுப்பிப்புக்காக கிட்டத்தட்ட 20 உள்வடிவமைப்பாளர்களை (‘இண்டீரியர் டிசைனர்ஸ்’) சந்தித்தனர். ஆனால் தங்களின் விருப்பங்களை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்ற ஐயம் இருந்தது உள்வடிவமைப்பாளர் திரு ரெய்யை சந்திக்கும் வரை.

இருவரின் தேவைகளையும் புரிந்துகொண்டு அவர்களின் கனவு இல்லத்தை உருவாக்கித் தர திரு ரெய் உறுதி அளித்தார்.

கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் புதுப்பிப்புப் பணிகள் முடிந்ததும் கடந்தாண்டு நவம்பர் மாதம் தம்பதியினர் புது வீட்டில் குடியேறினர்.

வீட்டுச் சாதனங்கள் சிலவற்றை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். உதாரணத்திற்கு, வீட்டில் பயன்படுத்தப்படும் குளிர்பதனப் பெட்டி ஜப்பானிலிருந்து இறக்குமதியானது. அது பிரபல விரைவு உணவகங்களில் பயன்படுத்தப்படும் பதனப் பெட்டி போலவே இருக்கும்.

இல்லத்திற்குத் தேவையான விளக்குகளை இவர்கள் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களிலிருந்து இணையம் வழி வாங்கினர். கப்பல்களில் பயன்படுத்தப்படும் ராட்சத ஒளி விளக்குகள் இவர்களின் உணவு மேசைக்கு வெளிச்சம் தருகின்றன. வீட்டின் ஓர் அறை, பொழுது போக்கு அறையாகவே மாற்றப்பட்டது. பிரபல ‘மேன் இன் பிளேக்’ ஆங்கிலத் திரைப்படத்தில், அதிகாரிகள் தங்களின் ஆயுதங்களை ஒரு தனி அறையில் அழகாக அடுக்கி வைத்திருப்பர். அந்தக் காட்சியைப் பார்த்துப் பிரமித்துப்போன சண்முகராஜ், அதுபோன்ற அறையைத் தம் வீட்டிலும் உருவாக்கினார்.
தம்முடைய அம்பெய்தல், தற்காப்புக் கலை சாதனங்கள் அனைத்தும் அழகான காட்சி அலமாரியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மேலாக அம்பைக் கூர்மையாக்கவும் இதர தற்காப்புக் கலை சாதனங்களைப் பழுதுபார்க்கவும் ஒரு பணியிட மேசை அவ்வறையில் அமைக்கப்பட்டுள்ளது.

‘பெட்மேன்’, ‘ஸ்பைடர்மேன்’ என்ற கேலிச்சித்திர கதாப்பாத்திர பிரியர்களுக்கு மத்தியில் இத்தம்பதியினர் தனித்து நிற்கின்றனர் ஏனெனில் இவர்களுக்கு ‘வில்லன்’ கதாப்பாத்திரங்கள்தான் பிடிக்குமாம். அதனை வெளிக்காட்டும் வகையில், ‘ஸ்பைடர்மேன்’ கேலிச்சித்திர வில்லன் ‘கார்நெஜ்’, பேட்மேன் கேலிச்சித்திர வில்லன் ‘ஜோக்கர்’ ஆகியவை சுவரோவியங்களாக அவதாரம் எடுத்துள்ளன.
வீட்டிலுள்ள பொருட்கள் நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும், பொருள் வீணாகிவிட்டதே என்று அப்புறப்படுத்தும் போக்கைத் தவிர்க்கவேண்டும் என்பதில் தீவிரம் உள்ளது இத்தம்பதியினருக்கு.
அதோடு, பூச்சி வகைகளை ஈர்க்காத, பழுதாகிவிட்டாலும் எளிதில் மாற்றக்கூடிய பொருட்களாகவும் அவை இருக்கவேண்டும் என்று தம்பதியினர் எண்ணினர்.
அந்தச் சிந்தனையோட்டத்தில் மறுபயனீட்டுப் பொருட்களைக் கொண்டு சொந்தமாக வீட்டு அறைகலன்களையும் அவர்கள் உருவாக்கினர். துருப்பிடித்த இரும்பு நாற்காலிகளை அவர்கள் மலிவான விலையில் வாங்கி, மஞ்சள் நிற சாயம் பூசி, அவற்றுக்குப் புது பொலிவு தந்தனர்.

மேலும், வசிப்பறை சாய்விருக்கையை (sofa) இவர்கள் ஏற்றுதட்டுகளின் (Pallets) மேல் அமைத்துள்ளனர். ரசாயன உலோக பீப்பாய்களைச் (chemical drums) சுத்தம்செய்து அவற்றை காப்பி மேசையாக மாற்றி, அதற்குள் பொருட்களை வைக்கும் வசதியும் உள்ளது.

பெரிய ‘பிவிசி’ குழாய்களைச் சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒருங்கிணைத்துக் காலணி வைக்கும் அடுக்கைச் செய்ய முனைந்தது அவர்களின் புத்தாக்க சிந்தனைத் திறனை வெளிப்படுத்துகிறது. மற்ற வீட்டு அம்சங்களிலும் இப்புத்தாக்கச் சிந்தனை மேலோங்கிக் காணப்படுகிறது. உதாரணத்திற்கு, யாராவது வீட்டு கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால், கழிவறையின் வெளியே பொருத்தப்பட்டுள்ள எச்சரிக்கை ஒளி ஒளிக்கும். அடுத்ததாக அதே கழிவறையைப் பயன்படுத்த காத்துக்கொண்டு இருப்பவர்க்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.

அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பற்றி இவர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளதால் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த, வீட்டின் ஒரு பகுதியைக் கரும்பலகை சுவராக ஒதுக்கிவிட்டனர். வண்ண ‘சாக்’ துண்டுகளை வைத்துத் தங்கள் எண்ணங்களை அதில் பதிவுசெய்கின்றனர். மந்த நிறத்தில் இருக்கும் வீட்டிற்குப் பச்சை பசுமையைச் சேர்க்க, மூலிகைத் தோட்டம் ஒன்றை வசிப்பறை சுவரில் அவர்கள் அமைத்துள்ளனர். தாவரங்கள் அதில் வளர, சிறப்பு விளக்குகளை அவர்கள் பொருத்தியுள்ளனர்.

சிலருக்கு வீடு பிடித்திருக்கிறது, வேறு சிலருக்கு வீடு பிடிக்கவில்லை என்றாலும் அனைவரின் கருத்துகளையும் அவர்கள் முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக இந்தத் தம்பதியினர் தெரிவித்தனர். வெளிநாடுகளி லிருந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததால், எதிர்பார்த்ததைவிட புதுப்பிப்புப் பணிகளுக்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருந்தது என்று கூறினார் 30 வயது மகேஸ்வரி.
‘‘நாங்கள் வாழப்போகும் வீடு எங்களின் தனித்துவ முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும். வேலை முடிந்து வீடு திரும்பும்போது, மனதிற்கு இதம் தரும் வீட்டுச் சூழலாக அது அமைய வேண்டும். அது பூர்த்தியாகியுள்ளதில் எங்களுக்கு மகிழ்ச்சி,’’ என்று தெரிவித்தார் 33 வயது, சண்முகராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!