அணிவகுப்புக்கு மிடுக்கு சேர்ப்பவர்கள்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன், எஸ்.வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரின் இருநூற்றாண்டு வரலாற்றையும் வளர்ச்சியையும் எடுத்துக்கூறும் வகையில் தனிச்சிறப்போடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் கிட்டத்தட்ட 15,000 பேர் பங்கேற்கின்றனர். பல இனங்களையும் சேர்ந்த சிங்கப்பூர் மக்கள் ஒன்றுசேர்ந்து படைக்கும் இந்த மாபெரும் படைப்பில் பங்கேற்பதில் ஒவ்வொருவரும் அளவில்லா பெருமிதம் கொள்கின்றனர். இந்த ஆண்டின் அணிவகுப்பின் சிறப்புகள் குறித்து அதில் வலம் வரும் சிலர் இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்.

வண்ணமயில் நடனம்

மக்கள் கழகத்துடன் கடந்த 15 ஆண்டுகளாக தொண்டூழியராகப் பணியாற்றி வருகிறார் திருவாட்டி ஜென்னிஃபர் தேவஜென்னர், 60. இவ்வாண்டு அவர் இரண்டாம் முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்கிறார். அணிவகுப்பின் “ஆக்ட் 3: நமது ஆறு” என்ற அங்கத்தைப் படைக்கும் நடனமணிகளில் ஒருவராக அவர் உள்ளார். இந்த நடனத்தில் சீன, மலாய், இந்திய மற்றும் யுரேஷிய நடனங்கள் படைக்கப்படுகின்றன. சிங்கப்பூர் ஆற்றில் சிங்கப்பூரர்களுக்கு பங்கு இருக்கிறது என்பதை இந்த நடனம் சித்திரிக்கிறது.
“ஆரம்பத்தில் மற்ற கடமைகளுக்கும் நேரத்தை ஒதுக்கி, இப்பயிற்சிகளுக்கு தொடர்வது சவாலாக இருந்தது. ஆனால், போகப்போக வழக்கமாகியது. நாங்கள் அனைவரும் சேர்ந்து இந்த அனுபவத்தை இன்பமாக்கியுள்ளோம்,” என்று திருவாட்டி ஜென்னிஃபர் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பின் பயிற்சிகளுக்குத் தயாராவது முக்கியம் என்று அவர் கருதுகிறார்.

வான்குடை சாகச வீரர் ராஜேந்திரன்

சிங்கப்பூரின் ‘ரெட் லயன்ஸ்’ குழுவைச் சேர்ந்த 50 வயது மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன் சுப்ரமணியம் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) கடந்த 25 ஆண்டுகளாக வான்குடை சாகசம் படைத்து வருகிறார்.
இவர் இதுவரை பற்பல நிகழ்ச்சிகளில், மொத்தமாக 750 முறை வான்குடை சாகசம் படைத்துள்ளார்.
“தேசிய தின அணிவகுப்பிற்காக நாங்கள் பலமுறை வான்குடை சாகசப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். கட்டுப்பாடான பயிற்சிகளில் ஈடுபடுகிறோம்,” என்று மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன் கூறினார்.
வான்குடை சாகசம் புரிய தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள, தாம் செய்யவிருப்பதற்கான வழிமுறைகளை மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன் சுயமாக நினைவுப்படுத்திக்கொள்வார்.
இதற்கான பயிற்சிகள் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கியதாக இவர் கூறினார்.
அனைவருடைய பாதுகாப்பிற்காக மின்னல்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளைத் தவறாமல் எடுத்து வருவதைச் சுட்டிய மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன், உதாரணத்திற்கு வான்குடை வீரர்கள் சாகசம் புரிவதற்கு முன்னால் உகந்த சூழல் நிலவுகிறதா என்பதை அவர்கள் உறுதிசெய்வதாக குறிப்பிட்டார்.
“சாகசம் படைத்ததற்குப் பின், தோள்பட்டையிலிருந்து ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்ததுபோல் இருக்கும்.
மேலும், தரையில் வந்து சேரவேண்டிய அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சரியாக இறங்குவதே ஒரு சாதனையாக தோன்றும்,” என்றார் மாஸ்டர் சார்ஜண்ட் ராஜேந்திரன்.

சிறுவர் படையில் கஜன்

சிங்கப்பூர் சிறுவர் படையைச் சேர்ந்த கஜன் ராஜன், 15, இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் ‘ரோவ் பி’ படையில் இடம்பெறுகிறார். குடைகளை வைத்து செய்யப்படும் சாகசக் காட்சிகளை இப்படை வழிநடத்தும்.
“அணிவகுப்புக்கு அதிபர் வருகை புரிவதும் தேசிய கீதம் பாடுவதும் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள். அதற்கு தகுந்த குடை சாகசக் காட்சிகளை நாங்கள் புரியவேண்டும். சரியான சமயத்தில், முறையாகச் செயலாற்றுவது அவசியம். தவறுகளுக்கு இடமில்லை,” என்றார் கஜன்.
மார்ச் மாதம் முதல் அணிவகுப்பிற்கான பயிற்சிகளைத் தொடங்கிய கஜன், இந்தப் பயிற்சிகள் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பெரிதும் உதவின என்று குறிப்பிட்டார்.
“எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என் மீது அதிக எதிர்பார்ப்புகள் வைத்துள்ளார்கள். குறிப்பாக, எனது பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அங்கத்தைப் படைக்க விரும்புகிறேன்,” என்றார் இவர்.
தேசிய தின அணிவகுப்பில் கஜன் பங்கேற்பது இது இரண்டாவது முறை.

மிடுக்கு நடைபோடும் மெர்டேக்கா தலைமுறையினர்

மெர்டெக்கா தலைமுறையினரைப் பிரதிநிதிக்கும் திரு சுகுமாறன் நடேசன், 68, தற்காப்பு வாகன ஊர்வலத்தில் பங்குபெறவிருக்கிறார்.
“நாங்கள் பங்குபெறும் அங்கம் 30 வினாடிகள் மட்டுமே நீடித்தாலும், இதற்காக ஜூன் மாதம் முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பயிற்சியில் ஈடுபட்டோம்,” என்று திரு சுகுமாறன் கூறினார்.
பயிற்சியின்போது ஒரு முறை மழை தூர ஆரம்பித்தது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாட்டுக் குழுவினரால் உடனடியாக எடுக்கப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
30 ஆண்டுகளாக முக்குளிப்பாளர்களுக்கான மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய திரு சுகுமாறன், இவ்வாண்டு முதல் முறையாக தேசிய தின அணிவகுப்பில் பங்கெடுக்கிறார்.
தற்காப்பு வாகன ஊர்வலத்தைப் பார்க்கும் பெற்றோர்களுக்கு, தங்களது பிள்ளைகளை தேசிய சேவைக்கு அனுப்புவதில் சிறிதளவு அச்சம் ஏற்படலாம் என்று திரு சுகுமாறன் கூறினார்.
“அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. நானும் ஒரு பெற்றோர்தான். ஆனால், தேசிய சேவையில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பயிற்சிகளின்போது தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் நேர்ந்தாலும், அதைச் சமாளிப்பதற்கான உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுகின்றன,” என்றார் அவர்.

அணிவகுப்புக்கு அழகுசேர்க்கும் மரியாதை காவல் அணி, கொடி அணி, ராணுவ வாகன பவனி

ராணுவ நிபுணர் 1-2 சுனில்பிர‌‌‌ஷாந்த் ராஜேந்திரன், 25, இவ்வாண்டு இரண்டாம் முறையாக தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்கிறார். மரியாதை காவல் அணியில் இவர் இடம்பெறுகிறார்.

“குடும்பத்துடனும் நண்பர் களுடனும் செலவிடும் நேரம், காற்பந்து விளையாடும் நேரம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்கும் சூழ்நிலை நேர்ந்தது,” என்று திரு சுனில்பிர‌‌‌ஷாந்த் கூறினார்.

இருப்பினும், தமது சக வீரர்கள் உடனான நட்பும் ஒற்றுமையும் வலுப்பட்டுள்ளது என்றார் அவர்.

“எனக்காக எனது நாடு என்ன செய்திருக்கிறது என்று அறிந்துகொள்ளவும் எனது நாட்டிற்கு என்னால் இயலும் பங்கை ஆற்றும் ஒரு தளமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது,” என்றும் இவர் கூறினார்.

தேசிய தின அணிவகுப்பில் முதல் முறையாக பங்கேற்கும் ஸ்டாஃப் சார்ஜண்ட் விக்னே‌ஷ்வரன் செல்வராஜூ, 26, கொடி அணியில் இடம்பெறுகிறார்.

“நம்பிக்கையானவர்களின் தலைமைத்துவத்தில் நாம் இருக்கிறோம் என்று உணரும்போது இந்தக் கடினமான அனுபவம் சிறிதளவு மனதிற்கு இதம் தருகிறது,” என்றார் இவர்.

அணிவகுப்பில் பங்கெடுக்கும் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு கடமைகள் உள்ளன. இதற்கிடையே தேசிய தின அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளுக்கும் நேரத்தை வகுத்து செயல்படுவது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது என்று திரு விக்னே‌ஷ்வரன் கூறினார்.

“கடினமான வேளையில்தான் அருமையான அனுபவங்கள் உருவாகின்றன. சிங்கப்பூர் ஆயுதப் படையின் பலதரப்பட்ட பிரிவுகளை இணைக்கும் தளம் இது. அனைவரும் தங்களிடமுள்ள திறன்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கின்றனர்,” என்றார் அவர்.

சிறு வயதிலிருந்து தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் கனவோடு தாம் வளர்ந்ததாக கார்ப்பரல் பூமிநாதன் புஷ்பநாதன், 20, கூறினார். சிங்கப்பூர் குடியரசுக் கடற்படையின் முக்கு ளிப்புப் பிரிவில் தமது தேசிய சேவையை இவர் ஆற்றி வருகிறார்.

“உயர்நிலைப் பள்ளியில் தேசிய தின அணிவகுப்பில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது, ஆனால் கல்விப் பெறுப்புகளால் என்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்ததும் உடனே ஏற்றுக்கொண்டேன்,” என்றார் அவர். சிங்கப்பூர் கடற்படையைப் பிரதிநிதித்து தேசிய தின அணிவகுப்பின் மரியாதை காவல் அணியில் இடம்பெறு கிறார் இவர்.

முதல் அனுபவம்

ஈசூன் டவுன் உயர்நிலைப் பள்ளியின் தேசிய போலிஸ் மாணவர் படை இசைக் குழுவில் உள்ளார் மித்ரா பெட்ரினா ஜஸ்ட்டின், 15. தமது பள்ளியிலிருந்து இந்தக் குழு பல ஆண்டுகளாக தேசிய தின அணிவகுப்பில் பங்குபெற்று வருகிறது. இவ்வாண்டு முதல் முறையாக இசைக்குழுவுடன் தேசிய தின அணிவகுப்பில் இவர் பங்கெடுக்கவிருக்கிறார்.
“வழக்கமாக, நான் மற்றவர்களுடன் அதிகமாக பேசமாட்டேன். ஆனால், இந்த அனுபவத்தின் மூலம், என்னுடைய தன்னம்பிக்கை அதிகரித்து மற்றவர்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது,” என்று மித்ரா கூறினார்.
இசைக்கருவிகளை வாசிப்பதைப் பொறுத்தவரை, உட்புற, வெளிப்புற சூழலில் நடைபெறும் பயிற்சிகளுக்கு இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. வெளிப்புற சூழலில் நடைபெறும் பயிற்சிகள் கடுமையாக இருக்கும். ஆனாலும், இதுவும் வழக்கமாகிவிட்டது என்று மித்ரா கருதுகிறார்.
“இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன்னால் எல்லா சவால்களையும் கடந்து வரும்போது எதையோ சாதித்த உணர்வு கிடைக்கிறது,” என்றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!