நூறாண்டுகள் வளமாக வாழ திட்டங்கள்

இர்ஷாத் முஹம்மது, எஸ். வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூரின் எதிர்காலத் தேவைகளை ஆராய்ந்து அதற்கேற்ப ஆக்கபூர்வமான தீர்வுகளை இவ்வாண்டின் தேசிய தினப் பேரணியில் முன்வைத்துள்ளார் பிரதமர் லீ சியன் லூங்.

* மக்களின் கல்வியறிவு நிலையையும் நாட்டின் கல்வித் தரத்தையும் தொடர்ந்து மேம்படுத்தி வரும் அரசாங்கம் அதற்கான கொள்கைகளை வகுத்துள்ளது. மாணவர்களுக்கு கல்விப் பாதையில் நல்ல தொடக்கம் அமையவேண்டும் என்பதை வலியுறுத்த பாலர் கல்வியில் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கல்விப் பயணம் தடைபடாமல் இருக்க உயர்கல்விக் கழக மாணவர்களுக்கு கல்வி உதவி நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது.

* மூப்படையும் சமுதாயமாகி வரும் சிங்கப்பூரர்களின் ஆயுளும் அதிகரித்து வருகிறது. அதனால், மக்கள் நீண்ட காலம் பணிபுரியவும் முதுமையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும் ஏதுவாக ஓய்வு பெறும் வயது, மறுவேலை வாய்ப்பு வயது ஆகியன நீட்டிக்கப்பட்டுள்ளன.

* மக்களின் பொருளாதார நிலைத்தன்மைக்கும் உயர்வுக்கும் சிந்தித்துத் திட்டமிடும் அதேவேளையில், இந்த நாட்டில் மக்கள் வசதியாக வாழவும் நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அடுத்து வரும் தலைமுறையினர் பிரச்சினைகளின்றி வாழவும் நீண்டகாலத் திட்டங்களைப் பிரதமர் வெளியிட்டார்.

இவ்வாண்டின் தேசிய தினப் பேரணியில் பிரதமர் அறிவித்த திட்டங்களை வரவேற்ற மக்கள் அவை குறித்த தங்கள் பார்வையை இங்கே முன்வைத்துள்ளனர்.

தீர்க்கதரிசனத்துடன் முழுமையான இலக்கு


குழந்தை பிறந்ததிலிருந்து, படித்து, வேலை பார்த்து, பணியிலிருந்து ஓய்வு பெறும் காலம் வரையிலான தேவைகளுக்கான திட்டங்களை விவரித்து இவ்வாண்டு பிரதமரின் தேசிய தின பேரணி உரை அமைந்தது. பல நாடுகளிலிருந்து சிங்கப்பூர் அழுத்தத்தை எதிர்கொண்டாலும் நமது சிங்கப்பூர் அடையாளத்தைக் கட்டிகாக்கும் வகையில் முன்னோக்கிச் செல்வோம் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் கூறிய முக்கிய விஷயங்களில் ஒன்று, நமது மரபுடைமை, வரலாறு, மக்களாகவும் ஒரு தேசமாகவும் நமது தனித்துவம் போன்றவற்றைப் புரிந்துகொள்வதைப் பற்றியது. சிங்கப்பூரர்கள் உலகில் தனித்தன்மை பெற்றுத் திகழ இது அவசியம்.

அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகளின் சூழ்நிலையில் வைத்து பார்க்கும்போது இது முக்கியமாகிறது. நாம் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படுவோம். ஆனால், சிங்கப்பூரின் அடையாளத்தால் நாம் தனித்துவமான பாதையில் உறுதியாகச் செல்லவேண்டும்.

எதிர்காலத்தில் நம்பிக்கை கொள்ள நமக்கு காரணங்கள் உண்டு. அதே சமயத்தில், சிங்கப்பூர் அரசாங்கம் முறையாக இயங்குவதும் இதற்கு காரணம் எனும் கருத்தை பிரதமர் முக்கியமாக முன்வைக்கிறார்.

உரையின் இறுதி அங்கம் எதிர்கால வாழ்க்கைமுறைப் பிரச்சினைகளைப் பற்றியது. குறிப்பாக, பருவநிலை மாற்றம் நம்மை மிரட்டுகிறது. அதைக் கண்டு நாம் அச்சப்படக்கூடாது. அதைத் தீர்க்க நமக்கு நேரமும் திட்டங்களும் உண்டு.

திட்டங்களின் வெற்றி மக்கள் கையில்

சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நீண்டகாலப்போக்கில் பயன்தரும் வகையில் பல திட்டங்களை இந்த ஆண்டின் தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் அறிவித்துள்ளார்.
தொலைநோக்குச் சிந்தனையுடன் மாறிவரும் பருவநிலை குறித்தும் அதற்கான தீர்வுகள் பற்றியும் அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது.
முக்கியமாக, மூப்படைந்துவரும் சமூகமாக உருமாறிவரும் சிங்கப்பூரில் ஓய்வு பெறும் வயதையும் மறு வேலைவாய்ப்பு வயதையும் அதிகரிக்க இருப்பது வரவேற்கவேண்டிய அம்சம்.
மக்களின் தேவையை அறிந்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று நம்புகிறேன். இந்த நல்ல திட்டங்களைப் பயன்படுத்தி உரிய பலனைப் பெறுவது மக்கள் கையில்தான் இருக்கிறது.

தரமான வாழ்க்கைக்கு உதவும் மானியம்

பாலர்பள்ளி கட்டணம் குறைவதால் மிச்சப்படும் பணம், குடும்ப செலவுகளுக்குப் பயனுள்ளதாக அமையும். அடிப்படைத் தேவைகள் முதல் விடுமுறைப் பயணங்கள் வரை, இன்னும் தரமானதைப் பாவிக்கலாம். குறிப்பாக, பல குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு இந்த மானியம் பெரிதும் உதவும்.

ஓய்வுபெறும் வயது உயர்த்தப்படுவது பலருக்கு உதவியாக இருக்கும்

ஓய்வுபெறும் வயதும் மறுவேலைவாய்ப்பு வயதும் உயர்த்தப்படவிருக்கும் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
உடல் நலத்துடன் இருப்பவர்கள் தொடர்ந்து வேலை செய்ய அரசாங்கத்தின் புதிய திட்டம் வழி அமைத்துள்ளது.
உடல் நலத்துடன் இருந்தாலும் 62 வயதானதும் வீட்டில் இருக்கவேண்டுமே, வருமானம் இல்லாமல் போய்விடுமே என்று இனி கவலைப்பட வேண்டியதில்லை.
நீட்டிக்கப்பட்டுள்ள வேலைஓய்வு வயது உடல் நலத்துடனும் துடிப்பாகவும் இருக்க வாய்ப்பளிக்கிறது.
எதுவும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும்போது உடல்நலமும் மனநலமும் பாதிக்கப்படக்கூடும். வேலைக்குப் போவதால் தொடர்ந்து துடிப்புடன் செயல்பட முடிகிறது.
சிங்கப்பூரில் சராசரியாக மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் அமைந்துள்ளது சிறப்பு.

வேலைவாய்ப்புகள் வேண்டும்

பருவநிலை மாற்றம் குறித்து பிரதமர் பேசியது நல்லது. ஆனால், தேவையில்லாத பொட்டலங்களின் பயன்பாட்டைக் குறைப்பது, சுத்தமான மாற்று ஆற்றல்மூலங்களில் முதலீடு செய்வது என இன்னும் நிறைய முயற்சிகளை சிங்கப்பூர் மேற்கொள்ள வேண்டும். கல்விக் கட்டணம் குறைக்கப்பட்டாலும் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் இருப்பதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

படிப்பதற்கு ஊக்கமளிக்கும் உதவிகள்

மேற்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இனிமையான செய்தியாக பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை அமைந்தது.
எனது நண்பர்கள் சிலர் வேலைக்குச் சென்றுதான் தங்களின் கல்விக்கும் இதர செலவினங்களுக்கும் பணம் ஈட்டுகின்றனர். கல்வி உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு நற்செய்தி. இது படிப்பைத் தொடர்வதற்கு ஊக்கமளிக்கும்.
பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயிலும், உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்படும் 80% வரையிலான கல்வி உதவித் தொகை தற்போது 95% வரை உயர்த்தப்படுவதால் கட்டணம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.
இது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு நல்ல ஊக்கமாக இருக்கும்.

கட்டணம் பற்றி கவலையின்றி படிக்கலாம்

பணம் படிப்புக்கு ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அரசாங்கம் கல்விச் செலவைக் குறைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தந்துள்ளது.
என்னைப்போல அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய மருத்துவம் போன்ற துறைகளில் படிப்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது, கட்டணத்தைக் குறைத்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தந்தை மட்டுமே வேலை செய்வதால், என் படிப்புச் செலவு அவருக்கு பாரத்தை அதிகரித்துள்ளது. அவருக்கு வயது 61 ஆகிறது. கட்டணம் குறைக்கப்படுவதால் அவருக்கு அது சற்று நிம்மதியை அளித்திருக்கும் என நம்புகிறேன்.
வாகனமோட்டியாகப் பணிபுரியும் அப்பாவுக்கு, என் கல்விக்காக இன்னும் கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற மன உளைச்சல் இனி இருக்காது. உபகாரச்சம்பளம், கல்வி உதவி நிதி, வட்டியில்லா கடன் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். இப்போது குறைக்கப்படவிருக்கும் கல்விக் கட்டணம் செலவை மேலும் குறைக்க உதவும்.

அனைத்து நிலைகளிலும் உதவி

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி மிகவும் பயனுள்ளது. அடிப்படைக் கல்வி மட்டுமின்றி மேல்நிலை படிப்புக்கும் கட்டணச் சுமை குறைவது வரவேற்கத்தக்கது.

காலத்துக்கு ஏற்ற கொள்கைகள்

சீனம், மலாய் உட்பட எல்லா மொழிகளிலும் பிரதமர் பேசியது அனைவருக்கும் உரியது. சிங்கப்பூர் மலாய் இனத்தவர்கள் முன்னேற்றம் கண்டதுபோல், பல இனத்தவர்கள் இங்கு வளர்ச்சி கண்டுள்ளார்கள். இஸ்லாமிய சமயம் அனைவரையும் அரவணைத்துக் கொள்கிறது என்றும் இதுபோல் நாம் எல்லோரையும் அரவணைத்து செல்லவேண்டும் என்றும் அவர் கூறினார். ஓய்வு பெறும் வயதைக் கூட்டியிருப்பது காலத்துக்குத் தேவையான மாற்றம். வேலை செய்வதால் முதிய வயதிலும் துடிப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!