கூடுதல் மானியம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி

இர்ஷாத் முஹம்மது, எஸ். வெங்கடேஷ்வரன், ப. பாலசுப்பிரமணியம்

தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கடந்த வாரம் அறிவித்த முக்கிய வீடமைப்புக் கொள்கை மாற்றங்களின்படி, முதன்முறையாக வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு வாங்குவோர் கூடுதலான மானியத்தைப் பெறலாம்.

அதோடு, வீட்டு வகை, வீடு அமைந்திருக்கும் இடம் போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதில் அவர்களுக்கு கூடுதல் நீக்குப்போக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், வீடு வாங்க விரும்பும் கூடுதலானோர் பயன்பெறுவர் என எதிர்பார்க்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக, வீடு வாங்க குடும்ப வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பதும் மற்றொரு முக்கிய அம்சம். நான்கு ஆண்டுகளில் சிங்கப்பூரர்களின் இடைநிலை வருமானம் உயர்ந்திருப்பதைத் திரு வோங் சுட்டினார்.

எனவே, அதிக வருமானம் ஈட்டும் கூடுதலான குடும்பங்கள் வீடு வாங்குவதற்குத் தகுதி பெற வருமான வரம்பு இப்போது உயர்த்தப்படுவதாக அவர் சொன்னார்.

முக்கியமாக, புதிய மேம்படுத்தப்பட்ட மசே நிதி வீடமைப்பு மானியமானது, வீடு வாங்குவோரின் மாறுபட்ட தேவைகளுக்கேற்ப அவர்களுக்குக் கூடுதல் நீக்குப்போக்கை வழங்குகிறது.

இளம் சிங்கப்பூரர்கள் திருமணமாகி, வீடு வாங்கி, பிள்ளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக இந்த மாற்றங்கள் அமைகின்றன.

சிங்கப்பூரில் நிலப் பற்றாக்குறை நிலவும் வேளையில், புதிய வீடுகளைக் கட்டிக்கொண்டே போகாமல் வீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவையை அரசாங்கம் பூர்த்திசெய்யவும் இந்த மாற்றம் வழிவகுக்கிறது.

குறிப்பிடும்படியாக, இந்த மாற்றத்தின் மூலம் மறுவிற்பனை சந்தை பெரிதும் பலன் பெறும் என எதிர்பார்க்கலாம்.

வீட்டை விற்க விரும்புவோர் மறுவிற்பனை சந்தையில் வீட்டை விற்க முடிவதுடன் புதிய வீடுகளை அரசாங்கம் கட்டு வதற்கான நெருக்கடியும் குறை கிறது.

இந்நிலையில், வீவக வீடுகளை வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரே தளத்தில் பரிவர்த்தனை செய்ய வகைசெய்யும் ஒரு புதிய இணையத்தளம் அடுத்த ஆண்டு இறுதியில் அமைக்கப்படவுள்ளது.

வீடு வாங்குவோருக்காக புதிதாக விற்பனைக்கு வரும், விற்பனைக்கு விடப்பட்ட வீடுகள் குறித்த தகவல்கள், மறுவிற்பனை வீடுகளுடன் ஒப்பிடும் வசதி போன்றவை இத்தளத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் வோங் தெரிவித்தார்.

எனினும், முதன்முறையாக வீடு வாங்குவோர், அதன் பின்னர் வாய்ப்பு கிடைத்தவுடன் தங்களது வீட்டை விற்பதற்கு அதை வெறும் சொத்தாக கருதாமல், நீண்டகால இல்லமாகப் பார்க்க வேண்டும்.

இதன் அடிப்படையில், வீடமைப்புக் கொள்கைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மாற்றங்கள் குறித்து இளம் தம்பதிகள் மற்றும் பிராப்நெக்ஸ் சொத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறிய கருத்துகள் இந்தச் சிறப்புக் கட்டுரையில் இடம்பெறுகின்றன.

வாழ்க்கையின் முதல் படிக்கு உதவும் திட்டம்

திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததும் வீடு வாங்கும் முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர் பாலமுனியப்பன் பிரனேஷ்-ஹரிபாபு சுவாதி தம்பதியினர்.
பிரனேஷின் பெற்றோர்கள் வசிக்கும் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் நான்கறை மறுவிற்பனை வீட்டை வாங்க எண்ணம் கொண்டுள்ளனர் இந்த இளம் தம்பதியினர்.
சுமார் $400,000 மதிப்புள்ள வீட்டை வாங்கப்போவதால் அதற்கு ஏற்ற வகையில் செலவுகளைக் கணக்கிட்ட தம்பதிக்கு புதிய மானியத் திட்டம் பெரும் மனநிறைவைத் தந்துள்ளது.
“எனக்கு நிம்மதியாக இருக்கிறது என்றே சொல்லலாம். முன்பிருந்த மானியங்களை அடிப்படையாகக் கொண்டு வீடு வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தோம். தற்போது அறிவிக்கப்பட்ட விரிவான மானியங்கள் எங்களுக்கு வரமாக அமைந்துள்ளன,” என்ற மகிழ்ச்சியுடன் கருத்துரைத்தார் பிரனேஷ்.
“மறுவிற்பனை வீடு வாங்குவதால் எங்களுக்கு உடனே வீடு கிடைத்துவிடும். தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் என்றால் மேலும் மூன்றாண்டுகளாவது காத்திருக்கவேண்டும்,” என்று அவர் கூறினார்.
மறுவிற்பனை வீடு வாங்கினால் விலை ஒருபுறம் சற்று அதிகமாகவே இருந்தாலும் அரசாங்கம் அளிக்கும் மானியங்கள் மறுவிற்பனை வீடுகளுக்கு அதிகம் என்பதால் அந்த கூடுதல் விலையை அது சரிசெய்துவிடும் என்பது சுவாதியின் கருத்து.
“அண்மையில் அறிவிக்கப்பட்ட மானியங்களின் அடிப்படையில் எங்களுக்கு சுமார் $35,000 கூடுதலாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். முதல்முறையாக வீடு வாங்க நினைக்கும் புதுமணத் தம்பதியினருக்கு இது பெரிய அளவில் கைகொடுக்கும்,” என்றார் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் 27 வயது சுவாதி.
“இளம் சிங்கப்பூரர்கள் வாழ்க்கையில் முதல்படியை எடுத்துவைக்க அரசாங்கம் பல வகையில் உதவுகிறது. வீடமைப்பு என்பது சிங்கப்பூரர்களின் வாழ்க்கையில் பின்னிப்பிணையப்பட்ட ஓர் அம்சம்.
“திருமணத்திற்கு முன்பே வீடு வாங்க அரசாங்கம் வழிசெய்துள்ளது. மணமாகி, பணம் சேமித்த பின்னர் வீடு வாங்குவோரும் உள்ளனர்,” என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வு பொறியாளராகப் பணியாற்றிக்கொண்டு மேற்கல்வி பயிலும் 28 வயது பிரனேஷ்.
“வீட்டின் விலை ஒருபுறம் இருக்க, இதர செலவுகளுக்கும் பணம் சேமித்து வைத்திருக்கவேண்டும். அந்த வகையில் இளம் சிங்கப்பூரர்கள் வாழ்க்கையின் முதல் படியை சிரமமின்றி எடுத்துவைக்க இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட வீடமைப்பு மானியம் உதவும் என்று நம்புகிறேன்,” என்றார் பிரனேஷ்.

இப்போது வீடு வாங்கியிருந்தால் கூடுதல் பயன் அளித்திருக்கும்

வீடமைப்பு மானியத்தின் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்களுக்கு முந்திய காலகட்டத்தில் முதிர்ச்சி அடைந்த பேட்டையான அங் மோ கியோ வட்டாரத்தில் 2017ல் வீடு வாங்கினர் 34 வயது திரு திவானா பிள்ளையும் 29 வயது குமாரி சரணி கிருஷ்ணனும்.
எஞ்சிய வீட்டு விற்பனைத் திட்டத்தில் இவர்கள் வாங்கிய இந்த நான்கறை வீட்டில் கூடிய விரைவில் குடியேறவுள்ள இத்தம்பதி, முன்னதாக மானியம் எதற்கும் தகுதி பெறவில்லை.
“புதிய மாற்றங்களுக்குப் பின் பதிவு செய்திருந்தால் கிட்டத்தட்ட $25,000 மானியம் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும். என் வருங்கால மனைவியின் பெற்றோர் அங் மோ கியோ வட்டாரத்தில் தங்கியிருப்பதால் அங்கு வீடு வாங்கினோம். முன்பு இருந்த தகுதிகளின் அடிப்படையில் எங்களுக்கு எந்த மானியமும் கிடைக்கவில்லை,”
“இப்போது வீடு வாங்கியிருந்தால் கூடுதல் மானியம் வழங்கப்படலாம் என்பதால், வீடு வாங்குவதற்கு வழங்கப்படும் கடன் தொகையின் அளவு குறைந்திருக்கும். இதனால், வீட்டுக்கான மாதக் கட்டணமும் குறைந்திருக்கும். இந்தப் பணம் வேறு தேவைகளுக்குப் பயன் அளித்திருக்கலாம்,” என்றார் திரு திவானா.
முதிய மாற்றங்களின் மூலம் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளை அதிக பேர் வாங்கலாம் என்று மேலும் கூறினார் அவர்.

‘எங்களுக்கு பெரிதாக மாற்றமில்லை’

பொங்கோலின் வடகிழக்கு முனையில், ஜோகூர் நீரிணையை நோக்கி இருக்கும் நிலப்பரப்பில், பொங்கோல் பாயிண்ட் வட்டாரம் என்ற புதிய பேட்டை ஒன்றில் 2,000க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.
அறிவார்ந்த, பசுமை சூழ்ந்த நகராக உத்தேசிக்கப்படும் இந்தப் பேட்டையில் உள்ள வீடுகள் 2024ஆம் ஆண்டிற்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பேட்டையில் சென்ற ஆண்டு தேவைக்கேற்ப கட்டப்படும் (பிடிஓ) வீடு ஒன்றை வாங்கினர் 26 வயது திரு கிரிஸ் செல்வகுமார் குணசேகரனும் அவரது வருங்கால மனைவி 25 வயது குமாரி கெரேஸி லோவும்.
“புதிய மாற்றங்களுக்கு நாம் தகுதி பெற்றிருந்தாலும் நாம் பெறக்கூடிய மானியத்தின் தொகை மாறியிருக்காது. பழைய இரு மானியங்கள் இணைக்கப்பட்டாலும் புதிய மானியத்தின் அதிகபட்ச அளவு இன்னும் $80,000ஆக உள்ளது. அதாவது, தொகை அளவில் மாற்றம் இல்லை. அதற்குத் தகுதி பெறுவதற்கான வருமான உச்சவரம்பு மட்டுமே சிறிது கூடியுள்ளது. இருப்பினும், இது ஒரு நல்ல முயற்சி. கூடுதலான குடும்பங்களுக்கு இந்த மாற்றங்கள் உதவலாம்,” என்றார் திரு கிரிஸ்.
முதன்முறையாக வீடு வாங்குவேருக்கு இந்தத் திட்டம் நன்மை அளித்தாலும் சொத்துச் சந்தையில் அவர்களுக்கு இடையே போட்டித்தன்மை அதிகரிக்கலாம் என்றார் அவர்.
“நான் மேல் மாடியில் வீடு வாங்க விருப்பப்பட்டாலும் போட்டி அதிகரித்ததால் எனக்கு கீழ் மாடியில்தான் வீடு வழங்கப்பட்டது. அச்சமயத்தில், விரும்பிய வீட்டை வாங்குவதா, அல்லது விரும்பிய வட்டாரத்தில் வீட்டை வாங்குவதா என்பதை நாங்கள் தேர்வு செய்யவேண்டியிருந்தது.
“நவீன வசதிகள் கொண்ட பொங்கோல் வட்டாரத்தை விட்டுவிடக்கூடாது என்பதற்காக கீழ்மாடியில் வழங்கப்பட்ட வீட்டையே வாங்கினோம்,” என்றார் திரு கிரிஸ்.

எல்லாத் தரப்புக்கும் நன்மை தரும் மாற்றம்

இந்தப் புதிய மாற்றங்கள் வீடு வாங்குவோர், வீடு விற்போர், சொத்து நிறுவனங்கள் ஆகிய முத்தரப்புகளுக்கும் நன்மை விளைவிப்பதாக அமையும்.
முதலில் வீடு வாங்குபவர்களுக்கு இது சாதகம், ஏனெனில் அவர்களுக்கு கூடுதலாக மானிய உதவி கிடைக்கிறது. அவர்களின் நிதிச் சுமையை இது குறைக்க உதவுகின்றது. இந்த மானிய உதவியின் மூலம் சிங்கப்பூரர்கள் கட்டுப்படியான விலையில் தங்களது முதல் வீட்டை வாங்க அரசாங்கம் வழிவகுத்துள்ளது.
இது வீட்டை விற்க விரும்புவோருக்கும் நல்ல செய்தி. குறிப்பாக, தோ பா யோ, அங் மோ கியோ, தெலுக் பிளாங்கா போன்ற பழைய வீடமைப்புப் பேட்டைகளில் வசிப்பவர்களுக்கு வர வேற்கத்தக்க ஒரு மாற்றம். அந்த வீடுகளின் குத்தகைகாலத்தில் 30 அல்லது 40 ஆண்டுகள் தாண்டியிருக்கலாம். இத்தகைய மறுவிற்பனை வீடுகளின் மவுசு அதிகரிக்கின்றது, ஏனெனில் இவற்றை வாங்குவதற்கு கூடுதல் மானிய உதவி வழங்கப்படுகிறது.இதனால் வீடுகளின் மவுசு அதிகரிப்பதால், அவற்றை விற்பது எளிதாகிறது. ஏனெனில் வீட்டை வாங்க கூடுதலானோர் முன்வருவர்.
வீவக வீட்டில் நீண்ட காலமாக வசிக்கும் ஒருவர் தம் வீட்டை விற்று, அந்தப் பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் லாபத்துடன் எக்சிகியூட்டிவ் கொன்டோமினியம் அல்லது தனியார் வீட்டை வாங்க வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்படுவதுடன், சொத்து நிறுவனங்கள் இத்தகைய வீடுகளை இவர்களிடம் விளம்பரப்படுத்தி விற்கவும் முடிகின்றது. இது சொத்துச் சந்தைக்கும் சொத்து நிறுவனங்களுக்கும் நன்மை விளைவிக்கிறது. ஆதலால், எல்லா தரப்பினரும் இந்த மாற்றங்களால் பயன் அடைகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!