சுனாமி: 3க்குப் பதில் 36 பிள்ளைகள்

நாகப்பட்டினம் கடற்கரையில் 15 ஆண்டுகளுக்கு முன் கரையேறிய சுனாமி அலைகளில் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்தவர்கள் பரமேஸ்வரன்-சூடாமணி தம்பதி.

மூன்று பிள்ளைகளும் கடலுக்கு இரையானதை அடுத்து ஏன் வாழ வேண்டும் என்ற சிந்தனையில் பல நாட்களைக் கழித்த இவர்கள், தங்கள் ஊரை விட்டுவிட்டு பக்கத்துக் கிராமத்திற்கு இடம்பெயர்ந் தனர். ஆனாலும் ஐந்து வயது மகன், ஒன்பது மற்றும் 12 வயது மகள்களைப் பறிகொடுத்துவிட்ட துயரம் மனதைவிட்டு அகலாமலேயே இந்தத் தம்பதியர் பக்கத்து கிராமத்தில் வசித்து வந்தனர்.

வழி எங்கும் ஏராளமான பிள்ளைகள் பெற்றோரை இழந்து, வீட்டை இழந்து, உடைமைகளை இழந்து, சாலை ஓரமாக அழுதபடி நின்றிருந்ததை இந்தத் தம்பதியர் கண்டு மேலும் மனம் வருந்தினர்.

“என் பிள்ளைகளைத்தான் பறிகொடுத்துவிட்டேன். இந்தப் பிள்ளைகளை எடுத்து ஏன் வளர்க்கக்கூடாது என்ற எண்ணம் எனக்கு அப்போது ஏற்பட்டது,” என்று தெரிவித்தார் சூடாமணி.

இந்தத் தம்பதியர் முதலில் நான்கு ஆதரவற்ற பிள்ளைகளைத் தங்கள் வீட்டிற்குக் கொண்டுவந்தனர். பிறகு மேலும் சில பிள்ளைகளோடு தங்கள் வீட்டுக்கு ‘நம்பிக்கை’ என்று பெயர் சூட்டி அதை ஆதரவற்றோர் விடுதியாக மாற்றினர்.

நாட்கள் செல்ல அவர்களுடைய விடுதியில் சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 36ஆகக் கூடியது. அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தம்பதியர் தங்கள் புது வாழ்க்கை யைத் தொடங்கினார்கள்.

தமிழ்நாட்டில் சுனாமி தாக்கியதில் நாகப்பட்டினம் மாவட்ட கட லோர கிராமங்களில் 6,000 பேருக்கும் அதிகமானோர் மடிந்தனர். இந்தியாவில் மொத்தம் 9,000 பேரை கடல் பலிகொண்டது. ஏறக்குறைய 42,000 பேர் வீடுகளை இழந்தனர்.

பரமேஸ்வரன் நிர்வாகப் பொறியாளராகப் பணியாற்றுகிறார். சூடாமணி ஆயுள் காப்புறுதி ஒன்றில் கிளைத் தலைவராக இருக்கிறார். பெண்களுக்கு, பையன்களுக்கு என இரு கட்டடங்களை இத்தம்பதியர் கட்டி இருக்கிறார்கள்.

சொந்த பணத்தைப் போட்டு கட்டுமானப் பணிகளை இவர்கள் தொடங்கினர். பிறகு நண்பர்களும் கைகொடுத்தனர். இவர்கள் இதுவரை மொத்தம் 45 ஆதரவற்ற பிள்ளைகளை ஆதரித்து ஆளாக்கி இருக்கிறார்கள்.

இத்தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். விடுதியில் தங்கி படித்து வந்த பிள்ளைகளில் பலரும் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர். சிலர் இன்னமும் தங்கிப் படிக்கிறார்கள். ஒரு சிலர் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டயப்படிப்பை முடித்த சங்கீதா, 21, என்பவர் இந்த நம்பிக்கை விடுதிக்கே திரும்பி வந்து தொண்டு செய்கிறார். சங்கீதா சுனாமியில் தன்னுடைய பெற்றோரை இழந்தனர். “இங்குள்ள பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்காக நான் நம்பிக்கை விடுதிக்குத் திரும்பி இருக்கிறேன்,” என்கிறார் சங்கீதா.

பரமேஸ்வரனும் சூடாமணியும் இப்போது தங்கள் வாழ்வு, பொருள் பொதிந்ததாக இருக்கிறது என்று உணர்கிறார்கள். “இந்தப் பணி ஆயுள் வரை தொடரும். எங்கள் பிள்ளைகளைக் கௌரவத்துடன், தன்னம்பிக்கையுடன் வளர்த்து உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் என்பதே இதற்கான காரணம்,” என்று தெரிவித்தார் பரமேஸ்வரன், 54.

இயற்கை பேரிடர்களிலேயே இமாலயப் பேரிடர்: 10 நிமிட நேரம் நிலம் நடுங்கி எழும்பிய பேரலை

இந்தியப் பெருங்கடலில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இந்தோனீசியாவின் ஆகப் பெரிய தீவான சுமத்ராவின் வடகோடி முனையில் உள்ளூர் நேரப்படி காலை 7.59 மணிக்கு உருவான சுனாமி, இந்தப் பூமியின் இயற்கைப் பேரிடர்களில் படுபயங்கரமானது என்று வர்ணிக்கப்படுகிறது.

அந்தப் பேரிடரில் 230,000 பேருக்கும் அதிகமானோரைக் கடல் சுருட்டிச் சென்றுவிட்டது. 14 நாடுகளில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டது.

கடலுக்கு அடியில் பர்மா அடுக்கும் இந்திய அடுக்கும் அமைந்திருக்கும் பகுதி நெடுகிலும் ஏற்பட்ட பிளவே அந்தச் சுனாமிக்கு காரணம் என்று அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதனால் கடல் அலைகள் 30 மீ. (100 அடி) உயரம் எழும்பின.

இந்தோனீசியாவின் பண்டா அச்சே பகுதியில்தான் ஆக அதிக மக்கள் பலியானார்கள். பூமியின் இயற்கைப் பேரிடர்களில் படுமோசமான பேரிடர் என்று அது வர்ணிக்கப்படுகிறது.

இதுவரையில் பதியப்பட்டு இருக்கும் நிலநடுக்கத்தில் 2004ல் ஏற்பட்ட நிலநடுக்கம் மூன்றாவது ஆகப் பெரியது. மேலும் 8 முதல் 10 நிமிடங்கள்வரை ஆக அதிக நேரம் நீடித்த பேரிடரும் அதுதான்.

அப்போது பூமி 10 மி.மீ. அதிர்வு கண்டது. சுமத்ரா நிலநடுக்கம் காரணமாக அலாஸ்காவிலும் நிலம் நடுங்கியது. உலகமே அச்சமடைந்தது. இந்தோனீசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து நாடுகளில் ஏராளமான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வர்த்தக ரீதியிலும் பெரும் இழப்பு ஏற்பட்டது.

உலகளாவிய மனிதாபிமான உதவிகள் கிடைத்தன. US$14 பில்லியனுக்கும் அதிக நன்கொடை திரண்டது. 2004 நிலநடுக்கம் சுமத்ரா அந்தமான் நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

சொந்தத்தை எடுத்துக்கொண்டு சோகத்தை கொடுத்துச் சென்றது

தமிழ்நாடு கடற்கரையில் 2004ல் கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்த நாள் பேரலைகள் கரையேறியபோது சரண்யா 9 வயது சிறுமி. சரண்யாவின் கிராமம் நாகப்பட்டின மாவட்டத்தில் இருக்கிறது.

15 ஆண்டுகளுக்கு முன் 230,000 பேருக்கும் அதிக மக்களைப் பலிகொண்ட சுனாமி, இந்தியாவில் நாகை மாவட்டத்தில்தான் படுமோசமாக பாதித்தது. அந்த மாவட்டத்தில் 6,000 பேருக்கும் அதிகமானோர் மாண்டுவிட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள். சரண்யாவின் உடன்பிறந்த நால்வரும் கடலுக்கு இரையாகிவிட்டனர்.

ஆண்டுகள் பல ஓடிய நிலையில் சரண்யாவின் வாழ்க்கை இப்போது இப்படி ஓடுகிறது...

சுனாமிக்குப் பிறகு சில ஆண்டுகள் அரசாங்கமும் உதவி அமைப்புகளும் சிறிது பணமும் உணவும் கொடுத்தன. தங்குவதற்கு இடவசதியும் அவருக்குத் தரப்பட்டது. சரண்யாவின் தந்தை மீனவர். சுனாமி தாக்குதலுக்குப் பிறகு சரண்யாவின் பெற்றோருக்கு ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. சரண்யாவின் தாயார் 2017ல் மாண்டுவிட்டார்.

சரண்யாவின் தம்பி மோகன் உடற்குறை உள்ளவர். அவருக்கும் பணம் செலவிடவேண்டி இருக்கிறது.

“சுனாமிக்குப் பிறகு ஓரளவுக்கு உதவிப் பணம் கிடைத்தது. கண்ணியமாக வாழ்ந்தோம். அந்த உதவிப் பணம் தீர்ந்ததும் எங்களுக்குப் பிரச்சினை தொடங்கியது,” என்று கூறினார் சரண்யா.

சரண்யாவுக்குத் திருமணம் ஆகி அவர் இப்போது கருவுற்று இருக்கிறார்.

சுனாமிக்குப் பிறகு வாழ்க்கை பெரும் சவாலாகிவிட்டது என்றும் சோகம் குடிகொண்டுவிட்டது என்றும் சரண்யா கவலை யுடன் தெரிவித்தார்.

“என் உடன்பிறந்தவர்களைப் பற்றி எப்போதுமே எனக்குக் கவலை. அவர்களின் கல்விக்கோ சாப்பாட்டிற்கோ என் தந்தை பணம் கொடுப்பதில்லை,” என்று கூறும் சரண்யா, சுனாமி தன் தந்தையை பெரிதும் பாதித்துவிட்டது என்றும் அவரால் முடிந்தது அவ்வளவுதான் என்றும் பெருமூச்சுடன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!