வர்த்தகப் போர், பொருளியல், இந்திய நிலவரங்கள்
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் நீடிக்கிறது. இவ்விரு நாடுகளும் பல தடவை பேசி பேசி பார்த்தாலும் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட வர்த்தகப் போர் 2019ல் முடிவுக்கு வரவில்லை.
இதன் காரணமாக உலகப் பொருளியல் நிலவரம் நிச்சயமில்லாத நிலையிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. 2020ஆம் ஆண்டும் உலக வர்த்தகத்தைப் பொறுத்தவரை பிரச்சினைகள் அதிகமாகவே இருக்குமென தெரிகிறது.
இதனிடையே, இந்தியாவில் மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று புது ஆட்சி அமைத்தது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்ளாதேஷ் நாடுகளைச் சேர்ந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் புதிய குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதை எதிர்த்து இன்னமும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. பாபர் மசூதி தொடர்பில் உச்சநீதிமன்றம் மிக முக்கிய தீர்ப்பு வழங்கி மசூதி இருந்த இடம் ராமர் கோயிலுக்கே சொந்தம் என்று குறிப்பிட்டது. ஜம்மு காஷ்மீரில் 45 வீரர்கள் கொல்லப்பட்டது, புல்வாமா தாக்குதல் முதல் மோசமான காற்றுத் தூய்மைக்கேடு வரை பலவற்றையும் 2019ல் இந்தியா கண்டது.
பொருளியல் வளர்ச்சி படுமோசமாகச் சுருங்கியது என்று பல தரப்புகளும் கவலை தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் ஏறக்குறைய எல்லா இடங்களையும் வென்று திமுக கூட்டணி நாட்டிலேயே மூன்றாவது ஆகப் பலம் பொருந்திய தரப்பாக மாறியது. 2016க்குப் பிறகு முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலை இப்போது சந்திக்கும் அம்மாநிலம், இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் முதலிடம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபரான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்குத் தேசத் துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டதும் இந்தியாவின் விக்ரம் நிலவு வண்டி நிலவில் தரை இறங்கும் நேரத்தில் காணாமல் போனது, வெங்காய விலை உயர்வு வரை இதர பலவற்றையும் 2019ல் உலகம் கண்டது.
சிங்கப்பூர்: புதிய துணைப் பிரதமர், புதிய சட்டங்கள், ஏற்பாடுகள்

சிங்கப்பூரை பொறுத்தவரையில் 2019ஆம் ஆண்டு மிகவும் குறிப்பிடத்தக்க ஆண்டாக இருக்கிறது. நிதி அமைச்சரான ஹெங் சுவீ கியட் துணைப் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டு நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்குத் தலைமை தாங்கி பொதுத் தேர்தலைச் சந்திக்க ஆயத்தமாவதற்கு அடித்தளம் வகுத்தது இந்த ஆண்டில்தான்.
அரசியல் ஒருபுறம் இருக்க, இதர பல துறைகளிலும் இந்த ஆண்டில் புதிய விதிமுறைகளும், புதிய ஏற்பாடுகளும் இடம்பெற்றன. ஆர்ச்சர்ட் ரோட்டில் புகைப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதோடு புகைப்பதற்கான குறைந்தபட்ச வயது 19ஆக அதிகரிக்கப்பட்டது.
அனலாக் தொலைக்காட்சி ஒளிபரப்பு இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. முழுமைத் தற்காப்பின் ஆறாவது தூணாக மின்னிலக்கத் தற்காப்பு அறிவிக்கப்பட்டது.
இணையத்தில் போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கவும் இணைய கணக்குகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் புதிதாக POFMA என்ற சட்டம் அக்டோபர் 2ல் நடப்புக்கு வந்தது.
கல்வித் துறையில் மிகப் பெரிய மாற்றமாக வழக்கநிலை (தொழிற்கல்வி), வழக்கநிலை(ஏட்டுக்கல்வி), விரைவு நிலைக்குப் பதிலாக பாட அடிப்படையிலான பிரிவுகள் (G1, G2 மற்றும் G3) அறிமுகப்படுத்தப்பட்டன. மின்ஸ்கூட்டர்களுக்கு நவம்பர் 5 முதல் நடைபாதைகளில் தடை விதிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வேலை நிய மன சட்டத்தில் மாற்றங்கள் இடம்பெற்றன.
2020ல் 5ஜி தகவல் தொடர்பு அறிமுகம் காணும் என்ற அறிவிப்பு முதல் அடுத்த தேர்தலுக்கான தேர்தல் தொகுதி மறுபரிசீலனைக் குழு அமைந்தது, சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மிரட்டல்களை இன்னும் திறம்பட சமாளிக்கும் வகையில் அந்தச் சட்டத்திற்கான மாற்றங்கள் நிறைவேறியது வரை இதர பலவற்றையும் 2019ல் சிங்கப்பூர் கண்டது.
சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டில் 0.5 விழுக்காடுதான் வளரும் என்றும் அடுத்த ஆண்டு பொருளியல் சூடுபிடிக்கும் என்றும் அது 1.5 விழுக்காடு வரை வளர வாய்ப்பு இருக்கிறது என்றும் முன்னுரைக்கப்படுகிறது.
இவற்றோடு இந்த ஆண்டு தனது 200வது ஆண்டு நிறைவை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடும் சிங்கப்பூர், உலகத்தோடு சேர்ந்து சூரிய கிரகணத்தையும் ரசித்தது.
அமெரிக்காவில் அதிபர் நிலை; ஐரோப்பாவில் பிரிட்டன் நிலை; இந்திய நிலவரம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இருக்கும் ஜோ பிடனுக்கு எதிராக செயல்பட்டு அரசியலமைப்புச் சட்டம், தேசிய பாதுகாப்பு, அதிபர் தேர்தலுக்கான நம்பகத்தன்மை ஆகியவற்றுக்கு டிரம்ப் ஆபத்து விளைவித்துவிட்டதாகக்கூறி அவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அது பிரதிநிதிகள் அவையில் நிறைவேறி உள்ளது.
செனட் சபையில் ஜனவரியில் நிறைவேறினால் டிரம்ப் பதிவியை இழக்கவேண்டிய நிலை வரும். அமெரிக்க வரலாற்றில் இத்தகைய நிலைக்கு ஆளாகி இருக்கும் 3வது அதிபர் டிரம்ப்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமா அல்லது அதனுடன் சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற இக்கட்டான நிலையைச் சந்தித்த பிரிட்டன், கடைசியில் 2019ல் திடீர் தேர்தலை நடத்தியது.
அந்தத் தேர்தலில் பழமைவாத கட்சி பெற்ற வெற்றி காரணமாக மீண்டும் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். அதனையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் ஜனவரி 31 வாக்கில் வெளியேறிவிட வேண்டும் என்று நாடாளுமன்றம் டிசம்பர் 20ஆம் தேதி பெரும் பான்மையுடன் வாக்களித்துவிட்டது.
நியூசிலாந்து பயங்கரவாதமும் பதிலடியாக இலங்கையில் குண்டுவெடிப்புகளும்

இலங்கையில் 2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறன்று கொழும்பில் உள்ள மூன்று ஆடம்பர ஹோட்டல்களிலும் மூன்று தேவாலயங்களிலும் தொடர்ச்சியாக தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 259 பேர் கொல்லப்பட்டனர். இதர பல இடங்களிலும் குண்டுகள் வெடித்தன.
இந்தத் தாக்குதல் நியூசிலாந்து படுகொலைக்குப் பதிலடி என்று வர்ணிக்கப்பட்டது. அதன் எதிரொலி இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் இன்னமும் பலரும் தேடப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே வெற்றி பெற்று அரியணை ஏறினார்.
முன்னதாக நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் 2019 மார்ச் 15ஆம் தேதி இரண்டு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர்.
தனி ஒருவர் அரங்கேற்றிய இந்தக் கொடூரச் சம்பவம் உலகையே கதிகலங்கவைத்தது. இத்தகைய தாக்குதல் புதிய பாணி என்று வர்ணிக்கப்பட்டது.
இவை ஒருபுறம் இருக்க, 2019 அக்டோபரில் அமெரிக்க சிறப்புப் படைகள் ஐஎஸ் அமைப்பின் தலைவர் என்று கருதப்படும் அபுபக்கர் அல்பக்தாதியைக் கொன்றன. முன்னதாக தலிபானுடன் கூடிய அமைதிப் பேச்சு செத்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 2019ல் பதற்றம் கூடியது. அந்த வளைகுடாவில் இருக்கும் எண்ணெய்க் கிணறுகளைத் தாக்கியதாக ஈரான் மீது அமெரிக்கா குறைகூறியது. அதை ஈரான் மறுத்தது.