விழிப்புடன் இருந்து வேலையிட மரணங்களைத் தவிர்ப்போம்

சிங்கப்பூரின் அடிப்படைக் கட்டுமானங்களையும் குடியிருப்புகளையும் கட்டியெழுப்புவதிலும் இந்நகரைத் தூய்மையாக வைத்திருப்பதிலும் வெளிநாட்டு ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.

சிங்கப்பூர் பொருளியலுக்கு பங்காற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் வேலையிடமும் தங்குமிடமும் பாதுகாப்புடனும் சுகாதாரத்துடனும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்கிறது. கடுமையான சட்டதிட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும், விபத்துகள், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதிக ஆபத்து நிறைந்த கட்டுமானங்கள், கடல்துறைப் பணிகளில் விபத்து நிகழ வாய்ப்புகள் அதிகம்.

கவலை, எச்சரிக்கை தரும் எண்ணிக்கை

ஊழியர்களின் பாதுகாப்பே அரசாங்கத்திற்கு அதிமுக்கியமானது என்றும், அண்மைய விபத்துகள் கவலையையும் எச்சரிக்கையையும் தந்திருக்கிறது என்றும் மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது அண்மையில் கூறினார்.

வேலையிட மரணங்களின் அதி கரிப்பு எச்சரிக்கையாக எடுக்க வேண்டுமென மனிதவள அமைச்சுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் திரு ஜைனல் சஃபாரியும் கூறியுள்ளார்.

ஏலக்குத்தகையில் தேர்வுபெறுவதற்காக செலவைக் குறைத்து, வேலையிடப் பாதுகாப்பிற்கு போதிய கவனம் செலுத்தாமல்விட்டால் அது கவலைக்குரியது என்றார் அவர்.

விபத்தில் உடல் செயலிழந்த 24 வயது சக்திவேல்

இளம் வயது துடிப்புடன், பல கனவுகள் கண்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி சிங்கப்பூருக்கு வந்தார் திரு சக்திவேல் ரங்கசாமி, 24. திருமணம் ஆகாத திரு சக்திவேல் வசதி குறைந்த தமது குடும்பத்திற்கு உதவும் நோக்கத்தில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார்.

இவ்வாண்டு மே மாதம், வேலையிடத்தில் கனமான மரப் பலகை கழுத்துப் பகுதியில் விழுந்ததில் அவரின் இடுப்புக்குக் கீழ் செயலிழந்தது. அவர் 3ஆம் மாடியில் வேலை செய்துகொண்டிருந்தார். 11ஆம் மாடியிலிருந்து பலகை விழுந்தது.

விபத்தைத் தொடர்ந்து சொந்த ஊரான புதுக்கோட்டைக்குத் திரும்பிவிட்ட திரு சக்திவேல், இன்னமும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அப்பா, அம்மா, தம்பி என குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

“எனக்கு நேர்ந்த துன்பம் யாருக்கும் வரக்கூடாது. மிகுந்த வலியிலும் வேதனையிலும் இருந்தேன். குடும்பச் சுமையைக் குறைப்பது, புது வீடு கட்டுவது, மேற்படிப்பு, திருமணம் என்று எல்லா இளைஞர்களுக்கு இருக்கும் கனவுகள்தான் எனக்கும் இருந்தன. கனவுகளை நிறைவேற்றவே சிங்கப்பூருக்கு வந்தேன்,” என்றார் திரு சக்திவேல்.

சிங்கப்பூரில் அவரது மருத்துவ சிகிச்சைக்கு ஆன $50,000 செலவை அவர் வேலை பார்த்த நிறுவனம் செலுத்தியது. மனிதவள அமைச்சின் பணிக்கால காய இழப்பீட்டுத் தொகை கிட்டத்தட்ட $145,000 திரு சக்திவேலுக்குக் கிடைத்தது. இது அவரது மருத்துவச் செலவுகளுக்கு உதவியாக இருக்கிறது. இதில் சிறிது தொகையில் வியாபாரம் தொடங்க விரும்புகிறார் திரு சக்திவேல்.

வேலையிட மேற்பார்வையாளர்களின் ஆலோசனைகளை கவனத்துடன் கேட்டு செயல்பட வேண்டும் என்றும் ஆபத்தான வேலைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திரு சக்திவேல்.

“வேலையிடத்தில் ஆபத்துகள் இருப்பதை உணர்ந்தால் உடனே மேற்பார்வையாளர்களிடம் புகார் செய்யவேண்டும். பாதுகாப்பான சூழலில் இருக்கிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது உகந்தது. வாழ்நாள் முழுவதும் வருத்தப்படுவதைவிட முன்னெச்சரிக்கையாக இருப்பதேமேல்,” என்றார் அவர்.

விதிமுறைகளும் விழிப்புணர்வும்

வேலையிடங்களில் ஒவ்வொருநாளும் காலையில் ஊழியர்களுக்கு ‘டூல்பாக்ஸ் மீட்டிங்’ என்ற கலந்துரையாடல் அங்கம் நடைபெறும். மேற்கொள்ளப்படவுள்ள வேலைகள், கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவை குறித்து அதில் விளக்கப்படும்.

ஊழியர்கள் மேற்பார்வையாளர்கள் சொல்வதைக் கேட்டு தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார் லியோ தங்கு விடுதியின் நிர்வாகி திரு எஸ்.கே.பாவா சாஹிபு.

கட்டுமானத் துறை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் 45 வயது திரு சடையன் பாண்டியன் சிங்கப்பூரில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

“சிங்கப்பூரில் வேலைக்குச் சேர்ந்த 1, 2 மாதங்களில் வேலை செய்வதற்குத் தேவையான ஆங்கில மொழி அறிவையும் வேலைத் திறன்களையும் ஓரளவு பெற்று விடலாம். பல வேலையிடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக இருக்கும். அவற்றை நடைமுறைப்படுத்துவது என்பது நமது கையில்தான் உள்ளது,” என்றார் திரு சடையன்.

“புதிதாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கத் தனியாக ஒரு மேற்பார்வையாளர் பணிக்கு அமர்த்தப்படுவார். முறையான நிபுணத்துவம் பெற்ற பிறகே மற்ற குழுக்களுடன் சேர்ந்து அவர்கள் பணியாற்றத் தொடங்குவார்கள்,” என்றார் திரு சடையன்.

2028ஆம் ஆண்டுக்குள், 100,000 ஊழியர்களுக்கு 1 மரணத்திற்கு கீழ் என்ற எண்ணிக்கையை எட்ட மனிதவள அமைச்சின் முத்தரப்பு உத்திகள் குழு இலக்கு வைத்துள்ளது. 2004ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 4.9ஆகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக 1.2ஆகவும் இருந்து வருகிறது. இந்த எண்ணிக்கை 0ஆக வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு.

மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள்

மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள் பற்றிய விவரங்களைப் பார்வையிடும் ஊழியர்கள். கடந்த நவம்பர் மாதம் வேலை இடங்க ளில் ஊழியர் மரணம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கட்டுமானத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேலையிட பாதுகாப்பு, ஆரோக்கிய மன்றமும் சிங்கப்பூர் கட்டுமானக் குத்தகையாளர்கள் சங்கமும் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, வோ ஹப் கட்டுமான நிறுவனம் நிலப்போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியை கிம் சுவான் பணிமனையில் சென்ற டிசம்பர் 6ஆம் தேதி நடத்தியது.
இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் வேலையிடங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனைகளும் இடம்பெறவுள்ளன. சென்ற டிசம்பர் மாதமும் இம்மாதமும் மொத்தம் அதிக ஆபத்துள்ள வேலை இடங்களில் வழக்கமான சோதனைகளுடன் மேலும் அதிகமாக 400 சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுமென அமைச்சர் ஸாக்கி சென்ற நவம்பர் மாதம் தெரிவித்தார்.

தலைவனை இழந்ததால் பரிதவிக்கும் குடும்பம்

விபத்துகளில் உடல் செயலிழப்பு, காயங்களுடன் மரணங்களும் ஏற்படுகின்றன. 2015ஆம் ஆண்டில் கட்டுமானத் துறை விபத்தில் உயிரிழந்தபோது திரு சின்னையா கணேசனுக்கு வயது 45.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றினார் திரு கணேசன். அவர் ஈட்டிய $500 மாத வருமானம் கடனை அடைக்கவும் குடும்பச் செலவுக்குமே போதாமல் இருந்தது. அவர் இறந்த பின்னர் குடும்பத்தைக் காப்பாற்ற விவசாயமும் இதர கூலி வேலைகளும் செய்து வருகிறார் புதுகோட்டை மாவட்டம், கீரனூரில் வசிக்கும் அவரது மனைவி 38 வயது திருவாட்டி சின்னமணி.
“உடல்நலக் குறைவினால் என்னால் மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரைதான் வேலை செய்யமுடிகிறது,” என்றார் திருவாட்டி சின்னமணி.
கல்லூரியில் கணக்கியல் துறையில் படிக்கும் அவரின் மகன் 18 வயது திரு கீர்த்தன், அரசாங்க வேலையில் சேர விரும்புகிறார். திரு கணேசனின் 16 வயது மகள் குமாரி விஜி உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார்.
திருவாட்டி சின்னமணியின் தம்பி 32 வயது திரு கருப்பையா அடைக்கன் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் பணியாற்றுகிறார். மனிதவள அமைச்சின் இழப்பீட்டுத் தொகை $65,000 ஓராண்டு கழித்து திரு கணேசன் குடும்பத்திற்குக் கிடைத்தது.
“இழப்பீட்டுத் தொகை கடன்களைத் தீர்க்கவும் பிள்ளைகளின் படிப்பிற்கும் உதவினாலும் வாழ்க்கையை நடத்த அது போதாது.
“தந்தையின் இறப்பிற்குப் பின் கீர்த்தன் படிப்பை முடித்து வேலை செய்யவே 5 ஆண்டுகளுக்கும் மேலாகிவிடும். அந்த நேரத்தில் படிப்பு, வீட்டுச் செலவுகளை என் அக்காதான் பார்க்கவேண்டும். அவரும் உடல்நலமற்ற நிலையில் உள்ளார்,” என்றார் திரு கருப்பையா.
உயிரிழப்பைத் தொடர்ந்து இழப்பீடுகள், சில வேளைகளில் நன்கொடைகள் கிடைத்தாலும் அது ஒருவரின் இழப்பையோ குடும்பத்தில் அவரது பங்களிப்பையோ ஈடு செய்யமுடியாது என்றார் அவர்.

பாதுகாப்பு விழிப்புணர்வில் தங்குவிடுதிகளின் பங்களிப்பு

ஊழியர்கள் வசிப்பதற்குத் தேவையான நவீன வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன், ஊழியரின் பாதுகாப்புக்கும் பல வழிகளில் முன்னுரிமை கொடுக்கிறது கிட்டத்தட்ட 4,300 ஊழியர்கள் வசிக்கும் ‘தி லியோ’ ஊழியர் தங்குவிடுதி.

ஊழியர்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்குவதற்காக விடுதியில் வசிக்கும் சில ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் தூதர்களாகச் செயல்படுகின்றனர்.

மாதந்தோறும் விடுதியின் தூதர் குழு குடியிருப்பாளர்களைச் சந்தித்து, வேலையிடம், குடியிருப்பு, தீ, இயந்திரங்கள் அனைத்திலும் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து சொல்லித் தருவதாக லியோ தங்கு விடுதியின் நிர்வாகி திரு எஸ்.கே.பாவா சாஹிபு, 36, தெரிவித்தார்.

ஏறத்தாழ 50 உறுப்பினர்கள் உள்ளடக்கிய தூதர் குழுவிற்கு ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு கருப்பொருட்களைக் கொண்டு பயிற்சி பயிலரங்குகள் நடத்தப்படும்.

டிசம்பர் மாதம் மழைக்காலத்தில் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு குறித்து பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

புதிதாக சிங்கப்பூரில் வேலைசெய்ய வருபவர்களுக்கு இங்குள்ள வேலையிட ஆபத்துகள் குறித்தும், பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் அறிவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, ஊழியர் தங்குவிடுதி நிர்வாகம் பாதுகாப்பு பற்றி எடுத்துச்சொல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார் திரு பாவா.

விபத்து நேர்ந்தால்...

‘கே ரவி லா கார்ப்பரேஷன்’ சட்ட நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணி புரியும் 39 வயது சட்ட உதவியாளர் திரு டி. பால் ஸ்டீபன், 32 வயது நிர்வாகி திருமதி ஷாமினி பிரபாகரன் இருவரும் விபத்துகளைத் தவிர்க்க ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், விபத்து நேர்ந்தபின் நிறுவனங்களும் ஊழியர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினர்.

* விபத்து நேர்ந்தால், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டும். சில நிறுவனங்கள் செலவை மிச்சப்படுத்த, அல்லது சம்பவத்தை மறைக்க தெரிந்த தனியார் மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லக் கட்டாயப்படுத்துவார்கள். முதலுதவியையும் சிகிச்சையையும் தாமதிப்பார்கள். சிகிச்சை தாமதமாகும்போது பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை மோசமாகலாம்.

* ஊழியர்கள் பயத்தில் மருத்துவர்களிடமோ, அதிகாரிகளிடமோ பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு தவறான தகவல்கள் கொடுக்கப்படும்போது, இழப்பீட்டுத் தொகை பெறுவதில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.

* பத்திரத்தில் எழுதப்பட்டு இருப்பதை அறியாமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்கவும். மனிதவள அமைச்சு சில வேளைகளில் மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்துகொடுப்பார்கள். மனிதவள அமைச்சால் அச்சேவையை வழங்கமுடியாத நிலையில் ஒரு வழக்கறிஞரை நாடுவது நல்லது. ஆவணங்களில் இருக்கும் தகவல்களை அறிந்த பிறகே கையெழுத்திடவேண்டும்.

* சட்டப்படி ஒரு நாளில் அதிகபட்சம் 12 மணி நேரமே ஓர் ஊழியர் பணியாற்ற முடியும். முறையான ஓய்வு இல்லாததே பல விபத்துகளுக்குக் காரணமாக உள்ளது. ஊழியர்களுக்கு முறையான வேலை நேரம் ஒதுக்கப்பட்டு, ஓய்வு வழங்கப்பட வேண்டும். ஊழியர் ஒருவருக்கு குறைந்தது 8 மணி நேரம் ஓய்வு தேவை.

* மனிதவள அமைச்சின் இழப்பீட்டுத் தொகைகளுக்குப் பதிவு செய்யும் தகுதியைப் பெற, விபத்து குறித்து ஓராண்டுக்குள் அமைச்சில் புகார் செய்யவேண்டும்.

* பிரச்சினைகளைத் தவிர்க்க சட்ட நிறுவனத்தை நாடுவது நல்லது. பத்திரங்கள், இழப்பீட்டுத் தொகை என அனைத்துமே முறையாக செய்துகொடுப்பார்கள். தனியாகப் பிரச்சினைகளை சமாளிப்பது கடினம். இதில் ஏமாந்துபோக வாய்ப்புகளும் அதிகம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!