வியாபாரம் குறைந்ததால் வர்த்தகர்கள் கவலை

உணவகங்கள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள், துணிக் கடைகள் என்று பல சேவைகளுக்கான மையமாக லிட்டில் இந்தியா வட்டாரம் அமைந்துள்ளது.

இத்தகைய சேவைகளை நாடி ஏராளமான சிங்கப்பூர் மக்களுடன் வெளிநாட்டவரும் லிட்டில் இந்தியாவுக்கு நாள்தோறும் வருகின்றனர்.

கிருமித் தொற்றினால் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, வியாபாரம் மந்தமடைந்துள்ளதாக லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில வாரங்களில் ஏறத்தாழ 30% வியாபாரம் குறைந்துள்ளது என்றார் மீன் தலைக் கறிக்குப் பிரபலமான ‘முத்து’ஸ் கறி’ உணவகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான திருமதி விஷாலி விஸ்வநாத், 41.

“சுற்றுப்பயணிகள் பெருமளவில் குறைந்துள்ளனர். சில வாடிக்கையாளர்கள் அச்சத்தினால் மற்றவர்களிடமிருந்து தள்ளி தூரமாக உட்கார வேண்டுகோள் விடுக்கிறார்கள்,” என் திருமதி விஷாலி.

உணவகங்களில் வியாபாரம் குறைவதால் மற்ற வர்த்தகங்களும் பாதிக்கப்படுகிறது. லிட்டில் இந்தியாவுக்கு சாப்பிட வருபவர்கள் அப்படியே பொருட்களையும் வாங்கிச் செல்வார்கள். சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை குறைவது தங்களையும் பாதிப்பதாக சில சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

“உணவகங்களுக்கு சமையலுக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை வழங்குகிறோம். உணவகங்களில் வியாபாரம் குறைந்ததால் அது நம்மையும் பாதிக்கிறது,” என்று கூறினார் செல்வி ஸ்டோர்ஸ் உரிமையாளரான திரு கா.எழிலன், 60.

“கூட்டமான இடங்களை மக்கள் தவிர்ப்பதால் ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்த மக்கள் அஞ்சுகிறார்கள்,” என்றும் திரு எழிலன் குறிப்பிட்டார்.

சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் கடைகளில் ஒன்றான ‘நல்லி சின்னசாமி செட்டி’ துணி வியாபாரக் கடை, வர்த்தகம் மந்தமாக இருப்பதாகத் தெரிவித்தது.

“சுற்றுப்பயணிகள் அடிக்கடி தேக்கா பகுதிக்கு வருவதுண்டு. இந்திய மரபுடைமை நிலையத்தைப் பார்வையிட்ட பின் கடைகளுக்கு வருவார்கள். உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்குவதற்கு நினைவுப் பொருட்கள் வாங்கி செல்வார்கள். நம் கடையில் சேலைகள், சால்வைகள் வாங்குவார்கள். கடந்த ஒரு வாரமாக அந்த வியாபாரத்தைப் பெரும்பாலும் இழந்துவிட்டோம்,” என்றார் ‘நல்லி சின்னசாமி செட்டி’ கடை ஊழியரான திரு கதிர், 52.

வியாபார சரிவுக்கு கொரோனா மட்டும் காரணம் இல்லை என்றார் ‘சங்கம் டெக்ஸ்டைல்ஸ்’ உரிமையாளரான திரு எம்.இலியாஸ்.

“பொதுவாகவே வியாபாரம் ஆண்டின் இந்தக் காலகட்டத்தில் சற்று மந்தமாகவே இருக்கும். விடுமுறைக் காலம் ஜனவரி மாதத்தோடு முடிந்தது ஒரு காரணம். புத்தாண்டு பிறப்பு, தீபாவளி, பொங்கல், சீனப் புத்தாண்டு போன்ற விழாக்காலம் முடிந்தது மற்றொரு காரணம். இதுபோன்ற வியாபார மந்தநிலை சற்று வழக்கமானதுதான். 2003ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் நிகழ்வைத் தொடர்ந்து இத்தகைய சவால்களைச் சமாளிக்க அரசாங்கம் தயார்நிலையில் உள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் மீது பலருக்கும் நம்பிக்கை உண்டு,” என்று கூறினார் திரு இலியாஸ்.

பணமாற்றச் சேவைகளையும் வழங்கும் ‘சங்கம் டெக்ஸ்டைல்ஸ்’ கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இந்தியர்களாக இருப்பதால் சீன நாட்டை பிரதானமாக பாதிக்கும் கொரோனா பிரச்சினை தம் வியாபாரத்தை அதிகம் பாதிக்கவில்லை என்று குறிப்பிட்டார் திரு இலியாஸ், 60.

காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்கும் ‘சென்னை டிரேடிங் & சூப்பர்மார்ட்’டில் தைப்பூசத் திரு விழாவினால் வியாபாரம் சற்று கூடியுள்ளது என்று குறிப்பிட்டார் அக்கடையின் மேற்பார்வையாளர் திருமதி நீலாவதி மனோகரன், 45.

“வியாபாரம் சற்றுக் குறைந்திருந்தாலும் தைப்பூசத் திருவிழாவால் காய்கறி, வேண்டுதல்களுக்கு பயன்படும் பொருட்கள் போன்றவை அதிகமாக விற்பனையாகிறது,” என்றார் திருமதி நீலாவதி.

பொதுமக்கள் அதிகம் வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்கிறார்கள் என்றும் கடந்த மாதத்தில் வியாபாரம் ஏறக்குறைய 30% குறைந்துள்ளது என்றும் கூறினார் ‘பாரடைஸ் டுவர்ஸ்’ பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு சு.சிராஜுதீன், 48.

“இந்தியா, பங்களாதேஷ் நாடுகளுக்கு வழக்கம்போல வெளிநாட்டு ஊழியர்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால் சுற்றுப்பயணங்கள் செல்வதை பலர் தவிர்க்கிறார்கள்,” என்றார் அவர்.

அதேநேரத்தில், வெப்பமானி, கைகளைச் சுத்தப்படுத்தும் திரவங்கள், முகக் கவசங்கள், உயிர்ச்சத்து மாத்திரைகள் போன்றவற்றுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. அப்போலோ செல்லப்பாஸ் கடையில் வெப்பமானி, கைகளைச் சுத்தப்படுத்தும் திரவங்கள், முகக் கவசங்கள் முற்றிலும் தீர்ந்துவிட்டன என்று குறிப்பிட்டார் அப்போலோ செல்லப்பாஸ், ‘பானானா லீஃப் அப்போலோ’ உணவகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சங்கர் நாதன்.

“விமான நிலையங்கள் காலியாகிவிட்டன. சுகாதாரப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த சூழ்நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் திரு சங்கர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!