ஒன்றிணைவோம், கிருமியை ஒழிப்போம்

கொரோனா கிருமித்தொற்றால் சுகாதாரத்துறை ஊழியர்களின் சவால்களையும் தியாகங்களையும் பற்றி சமூக ஊடகங்களில் பதிவு செய்து, அவர்களுக்கு ஒத்துழைப்புக் கோரிய தாதி திரு பெஞ்சமின் ஓங், தமது திருமண விருந்தை ரத்துசெய்து விட்டு முழுமூச்சாக பணியில் ஈடுபட்டுள்ளார்.

டான் டோக் செங் மருத்துவமனையின் மூத்த ஸ்டாஃப் தாதியான 29 வயது திரு பெஞ்சமின் சுகாதாரப் பணியாளர்களின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், நோய்ப்பரவல் சமயத்தில் முதல்நிலையில் பணியாற்றும் சுகாதாரத் துறையினரின் சிரமங்களை கடந்த வாரம் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.

‘போரைப் போன்ற சூழலில்’ ஒவ்வொரு நாளும் முகக்கவசம், காப்புக் கண்ணாடி உள்ளிட்ட கருவிகளை அணிந்துகொண்டு மூச்சு முட்ட வேலை பார்ப்போரைப் பொதுமக்களில் சிலர் ஒதுக்கி புண்படுத்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அளவுக்கு அதிமான வேலைப்பளுவால் உடல் வலி ஏற்படுவதாக குறிப்பிட்ட அவர், சுகாதாரத் துறையினர் எதிர்கொள்ளும் ஆண்டு விடுமுறை ரத்து, வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை போன்றவற்றையும் குறிப்பிட்டிருந்தார்.

அவரின் பதிவு பலரையும் நெகிழ வைத்தது. மக்கள் பலரும் சுகாதாரத் துறையினருக்கு பல வழிகளிலும் தங்களது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்.

“ ‘நன்றி’ என்ற வார்த்தையின் மகத்துவத்திற்கு ஈடு இணையே இல்லை. பலர் எங்களுக்கு வாழ்த்து அட்டைகளையும் அன்பளிப்புகளையும் அளித்தாலும் இவற்றை நாங்கள் நாடுவதில்லை. நன்றி ஒன்றே போதும்,” என்றார் திரு ஓங்.

எட்டு ஆண்டுகளாக டான் டோக் சேங் மருத்துவமனையில் பணிபுரியும் திரு பெஞ்சமின் கடந்த நான்கரை ஆண்டுகளாக அவசர சேவைப்பிரிவில் வேலை பார்க்கிறார்.

தற்காப்பு நடவடிக்கையாக விருந்தை ரத்து செய்தார்

இந்த சிரமமான நேரத்தில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் திரு பெஞ்சமின், இந்த மாதம் நடைபெறவிருந்த தமது திருமண விருந்தையும் ரத்து செய்துவிட்டார்.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் அவரது வருங்கால மனைவியும் அவரது குடும்பத்தினரும் அவரது முடிவுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர்.

“என் வருங்கால மனைவி வருத்தம் அடைவாரோ என முதலில் கவலை அடைந்தேன். ஆனால் அவர் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டார். திருமணக் கொண்டாட்டத்தைவிட வாழப்போகும் வாழ்க்கைத்தான் முக்கியம் எனக் கூறினார்,” என்றார் திரு ஓங்.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்தியரான பெஞ்சமின், இரண்டு வயதில் சீனத் தம்பதியரால் தத்தெடுக்கப்பட்டார். 2012ல் வேலை செய்ய சிங்கப்பூருக்கு வந்த திரு பெஞ்சமினின் குடும்பம் மலேசியாவில் உள்ளது.

சிங்கப்பூர் சீனரான தமது 29 வயது காதலியுடன் திருமணப் பதிவைத் தம் வீட்டில் எளிமையாக நடத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

“சுகாதாரத் துறையில் உள்ள நாங்கள் இருவரும் முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பில் உள்ளோம். இந்தத் துறையில் இருக்கும் எங்களைச் சுற்றி சிறார்கள், வயதானவர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட கூட்டத்தைக் கூட்டுவது சரியல்ல. நாங்கள் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்,” என்றார் திரு ஓங்.

திருமண விருந்துக்காக முன்பதிவு செய்திருந்த உணவகம், தங்களது சூழ்நிலையைப் புரிந்து வைப்புத் தொகையைத் திரும்பத்தந்ததாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.

நோய்த்தொற்று குறித்து இயல்பான பயம் இருந்தபோதும் அதைப் பற்றி தாம் அதிகம் யோசிப்பதில்லை என்றார்.

“வேலையில் ஈடுபட்டுவிட்டால் யோசிப்பதற்கு நேரம் இருக்காது. பயம் இருந்தால் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் அதனைப் போக்கிவிடுவோம், என அவர் கூறினார்.

சுகாதாரப் பணியாளர்கள் ஒதுக்கப்படுவதைப் பற்றி திரு ஓங் தமது பதிவுகளில் குறிப்பிட்டபோதும் தனிப்பட்ட முறையில் பிறரால் அவ்வாறு நடத்தப்படவில்லை எனத் தெரிவித்த அவர், சமூகத்தினர் தமக்கு கூடுதல் ஆதரவு அளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“எங்களுக்கான ஆதரவு பெருகி வருகிறது. இது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார் அவர்.

இந்தியரின் நோய் எதிர்ப்புத் தன்மை பற்றி தவறான கருத்துகள்

இந்த நேரத்தில் உறவினர்களும் நண்பர்களும் தம்மிடம் ஆலோசனை கேட்பதாகத் திரு ஓங் குறிப்பிட்டார்.

முகக்கவசங்கள், கைகழுவுதல் தொடர்பான சில குறிப்புகளைப் பகிர்வதாகக் கூறிய அவர், சிலரின் தவறான கருத்துகளையும் சுட்டிக்காட்டித் திருத்துவதாகக் குறிப்பிட்டார்.

வூஹான் நகரிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்கள் இந்திய உணவை மட்டும் சாப்பிட்டதால் அவர்களுக்கு இந்நோய் தொற்றவில்லை என்ற பதிவு ஒன்றை சில நாட்களுக்கு முன்பு படித்ததாகக்கூறிய அவர், “நான் இந்திய உணவு வகைகளை அடிக்கடி உண்பேன். இது உண்மையாக இருந்தால் எனக்கு வசதியாக இருக்கும்,” என வேடிக்கையாகக் கூறினார்.

அச்சம் மேலோங்கி இருக்கும் காலகட்டத்தில் மருத்துவரீதியான ஆதாரம் இல்லாத பல்வேறு தகவல்களை மக்கள் எளிதில் நம்புகின்றனர் என்பதை திரு ஓங் சுட்டினார்.

வீட்டில் ஆங்கிலமும் மாண்டரினும் உரையாடும் திரு ஓங், தமிழிலும் சரளமாகப் பேசுகிறார்.

விரைந்து சென்று பிறருக்கு உதவி செய்யும் ஆசை இருப்பதால் அவசர சேவைப் பிரிவு உற்சாகம் அளிப்பதாகக் கூறும் இந்தத் தாதிக்கு, சவாலான காலகட்டங்களில் தமது பணிமீது மேலும் அதிக பிடிப்பு ஏற்படுகிறதாம்.

மனதில் நம்பிக்கையைக் கட்டிக்காத்து ஒருவரை ஒருவரை ஆதரிக்கவேண்டும். சார்ஸ் நோயை எதிர்கொண்டது போல இதனையும் எதிர்கொண்டு சமாளிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார் திரு பெஞ்சமின்.


மக்களுக்கு உதவ இலவச முகக்கவசங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள்

தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்க 15,000 முகக்கவசங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளோம். சமூக அமைப்பு களுக்கு ஏறத்தாழ 3,000 முகக்கவசங்களை கொடுத்தோம். கடையில் முகக்கவசம் அணிந்திருந்தால் நோய் இருக்கும் என்ற மனப் பான்மையை மக்கள் மாற்றவேண்டும். ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதியே முகக்கவசங்களை அணிகிறார்கள். முறையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் பொதுமக்கள் வழக்கமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளலாம். அச்சப்படத் தேவையில்லை.


- திரு முகம்மது நஜிமுதீன், ஜுவல் பேலஸ் உரிமையாளர், 54


ரசம் கொரோனாவை எதிர்க்கும் என்பதற்கு அறிவியல் அடிப்படையான ஆதாரமில்லை

மிளகு, சீரகம் போன்ற மருத்துவக் குணங்கள் உள்ள மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் ரசம் போன்ற இந்திய உணவுகள் பொதுவாக உடலுக்கு நன்மை தருபவை என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இத்தகைய உணவுப் பொருட்களில் கொரோனா கிருமியை அல்லது இத்தகைய கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளதற்கான அறிவியல் அடிப்படியான ஆதாரம் இல்லை. பிற இனத்தவர் எதிர்நோக்கும் அதே அபாயம் இந்தியர்களுக்கும் உண்டு. இந்தியர்கள் மெத்தனப்போக்கைத் தவிர்க்கவேண்டும்.


மூலிகைப் பொருட்களின் தேவை அதிகரிப்பு

பொதுவாக வியாபாரம் சற்று தளர்ந்திருந்தாலும் மூலிகைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்புக்கு உதவும் ரசப் பொடி, வேப்பிலைப் பொடி, நிலவேம்புப் பொடி, கடுக்காய்ப் பொடி போன்றவற்றை அதிகமாக வாங்குகிறார்கள். சீனர்களும் இப்போது இந்திய மூலிகைப் பொருட்களை வாங்க வருகின்றனர். தைப்பூசத் திருவிழா முடிந்துவிட்டதால் தேக்காவில் வியாபாரம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். வியாபாரம் வழக்க நிலைக்குத் திரும்ப விரைவில் கொரோனா நோயை கட்டுக்குள் வரவேண்டும்.

முருகேசன் வேலுமணி, ‘ஓம் சிவசக்தி ஃப்ளவர்& டிரேடிங்’ உரிமையாளர், 51


வெளிநாட்டு ஊழியர்களிடம் விழிப்புணர்வு

சீனர்களுக்கும் சிங்கப்பூரர்களுக்கும் நோய் தொற்றியபோது பெருமளவில் பயத்தை ஏற்படுத்தவில்லை. பங்களாதே‌ஷ் ஊழியரைத் தாக்கியதும் வெளிநாட்டு ஊழியர்கள் விழிப்படைந்தோம். நோய் வருவதைத் தடுக்க முயற்சிகளை எடுக்கிறோம்.
வேலை இடத்துக்குள் செல்லும் முன் ஊழியர்களின் உடல் வெப்ப நிலை சோதிக்கப்படுகிறது. உணவு, தண்ணீர் பகிர்வதை நிறுத்தியுள்ளோம். ஊழியர்கள் சிறு குழுக்களாகப் பிரிந்து வேலை செய்கிறார்கள். ஒருவேளை நோய் தொற்றினால் ஒரு சிறு குழுவுக்குள் அது கட்டுப்படும்.

சண்முகம் பாஸ்கரன், கட்டுமானத் துறை பாதுகாப்பு அதிகாரி


பதற்றம் ஏற்படுத்தும் செய்திகளைப் பரப்பாதீர்

சிங்கப்பூர் மக்கள் பீதியடையாமல் அரசாங்கத்தின் வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தால் மிக விரைவில் நோயை கட்டுப்படுத்தி விடலாம். முக்கியமாக பதற்றம் ஏற்படுத்தும் செய்திகளைப் பரப்பக்கூடாது.
சமூகத்தைக் கருத்தில்கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். சுகாதார ஊழியர்களுக்கு பெரும்பான்மையான மக்கள் பேராதரவாக உள்ளனர். வெகு சிலரின் அறியாமை அவர்களின் உன்னத சேவையை சீர்குலைத்துவிடாது.

திரு முஹம்மது பிலால், ஆபரண வியாபாரி, சமூக அடித்தள தலைவர், 50


பல்வேறு துறைகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள்

மனித வள அமைச்சு: வேலை அனுமதியின் பேரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கட்டாய 14 நாள் விடுப்பில் இருப்பதை உறுதிப்படுத்த மனித வள அமைச்சு நாள்தோறும் தொலைபேசி அழைப்புகள், நேரடி சோதனைகளை நடத்தி வருகிறது. தொலைபேசியில் பதில் இல்லை என்றால் உடனே அமைச்சு முதலாளியுடன் தொடர்புகொள்ளும். விடுப்பில் இருக்கும் ஊழியர்கள், தாங்கள் இருக்கும் இடம் பற்றி அமைச்சிடம் தெரிவிக்க வேண்டும். மற்றவர்களுடன் பழகுவதைத் தவிர்த்து வீட்டிலேயே இருக்க வேண்டும். உணவு அல்லது தேவையான பொருட்களை வாங்கிவர வெளி யில் சென்று போய்வரலாம்.
இத்தகைய விடுப்பில் உள்ள ஊழியர்கள் தங்கி இருக்கும் இடங்களில் அமைச்சின் அதிகாரிகள் நேரில் சென்று சோதனை நடத்துவதும் உண்டு.

சுகாதார அமைச்சு: அரசு மருத்துவமனைகளில் கொரோனா கிருமி நோயாளி களின் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசாங்கம் ஏற்கிறது. ஆனால் பொது மருத்துவர்கள் நடத்தும் மருந்தகங்கள் அல்லது பலதுறை மருந்தகங்களில் வெளி நோயாளி சிகிச்சை பெறுவோர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரசு உதவி கிடைக்காது.
காய்ச்சல், தொண்டை எரிச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு ஐந்து நாள் மருத்துவ விடுப்பு வழங்கப்படும்.
900 பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் செயல்பட வுள்ளன. இங்கு ஒவ்வொரு நோயாளியின் நோய் அறிகுறி களைக் கண்டறிந்து, கிருமி பரவல் ஆபத்தை மதிப்பிட வழி காட்டிகள் பின்பற்றப்படும். தனிப்பட்டவர்களின் உடல் நலனைப் பேண சாதனங்கள் வழங்கப்படும்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப்படை: கொரோனா தொற்றி இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நோயாளிகளைக் கையாளும் போது மட்டுமின்றி, எந்த ஓர் அவசரகால அழைப்பையும் ஏற்று விரைந்துவரும்போதும் துணை மருத்துவ அதிகாரிகள் தற்காப்பு சாதனங்களை அணிந்து இருப்பார்கள். கொரோனா தொற்றி இருப்பதாகச் சந்தேகிக்கப்படு வோரிடம் பல கேள்விகளைக் கேட்டு துணை மருத்துவ அதிகாரிகள் சோதிப்பார்கள்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை, 219க்கும் மேற்பட்டோரைச் சோதித்து இருக்கிறது. இருந்தாலும் அண்மைய வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித் துள்ளது. அவற்றை இந்தப் படை திறம்பட சமாளித்தும் வருகிறது.

சிங்கப்பூர் போலிஸ் படை: நாடு முழுவதும் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இடங்களில் எல்லாம் சுமார் 200 போலிஸ் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். உள்துறை குழு அதிகாரிகள் எல்லைப் புறங்களில் பணியில் இருந்து உடல் வெப்ப நிலையைச் சோதித்து வருகிறார்கள். அதிகாரிகள் என்ற பெயரில் மோசடிப் பேர்வழிகள் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் தொலைபேசி அழைப்புகள் உண்மைதானா என்பதை பொதுமக்கள் 6325-9220 என்ற எண் மூலம் சுகாதார அமைச்சுடன் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!