பட்ஜெட் அறிவிப்புகளுக்கு வரவேற்பு

கொவிட்-19 கிருமித்தொற்று, புவி சார்ந்த அரசியல் பதற்றங்கள், பொருளியல் மாற்றங்கள், மூப்படையும் மக்கள்தொகை, தொழில்நுட்ப இடையூறுகள், உலகமயமாதலுக்குக் குறைந்து வரும் ஆதரவு இப்படி பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் சூழலில், நம்பிக்கைமிக்க எதிர்காலத்தை உருவாக்குவதற்காக $106 பில்லியன் மதிப்பிலான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நிறுவனங்களுக்கு உதவ $4 பில்லியன் மதிப்பிலான நிலைத்தன்மை, ஆதரவுத் தொகுப்புத் திட்டம், பெற்றோர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவ $1.4 பி. மதிப்பிலான பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத் திட்டம், பொருளியல் உருமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் $8.3 பி. நிதி, பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்காக $5 பி. கடலோர, வெள்ளப் பாதுகாப்பு நிதி, அரசாங்கத்தின் இணைய, தரவுப் பாதுகாப்பை வலுப்படுத்த $1 பி. நிதி, நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப உலகில் சிங்கப்பூரர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ள $1,000 வரை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவி நிதி, அதிகமான முதியவர்கள் பலன்பெறும் வகையில் மூத்தோர் ஆதரவுத் திட்ட விரிவாக்கம், சமூக சேவை அமைப்புகளுக்கு உதவி, பாலர்களுக்கு தரமான ஆரம்பக் கல்வி, உயர்கல்வி நிலைய மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று அனுபவம் பெற உதவி, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவிக்க 28,000 மின்னூட்டி நிலைகள் என ஏராளமான திட்டங்களையும் அறிவிப்புகளையும் திரு ஹெங் வெளியிட்டார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட இரண்டு விழுக்காட்டுப் புள்ளி பொருள், சேவை வரி உயர்வு அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படாது என்ற அறிவிப்பு, வரவுசெலவுத் திட்டத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.

கடந்த பத்தாண்டுகளாக இல்லாத வகையில் $10.9 பில்லியன் பற்றாக்குறையுடன் கூடிய வரவுசெலவுத் திட்டமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

கிருமித்தொற்றைத் தடுக்க கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கைகொடுப்பதற்காகப் பல திட்டங்களும், அதேவேளையில் நிலையானதொரு வளர்ச்சிப் பாதையைக் கட்டமைப்பதை இலக்காகவும் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் தொடர்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களையும் நேர்கண்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்து வந்தது தமிழ் முரசு.


ரொக்கம், மானியம், கல்வி உதவித்தொகை, பற்றுச்சீட்டு எனப் பல வழிகளிலும் ஆதரவுக்கரம்

கணவர், ஐந்து பிள்ளைகளுடன் மூவறை வீட்டில் வசித்து வரும் திருமதி நங்கை சுப்பிரமணியம் (நடுவில்) குடும்பத்தினருக்கு இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் இன்பப் பரிசாக அமைந்துள்ளது. பல்வேறு திட்டங்களின் மூலம் ரொக்கமாகவும் மானியங்களாகவும் குறைந்தது $3,800 இக்குடும்பத்திற்குக் கிடைக்கும்.

மினிமார்ட் ஒன்றில் காசாளராகப் பணியாற்றும் 48 வயதான திருமதி நங்கைக்கும் விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவைத் துறையில் பணியாற்றும் அவருடைய 24 வயது மூத்த மகளுக்கும் பராமரிப்பு, ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் தலா $300 கிடைக்கும்.

20 வயதுக்கும்கீழ் ஒரு பிள்ளையேனும் இருந்தால் கூடுதலாக $100 வழங்கப்படும். அதுவும் திருமதி நங்கைக்குக் கிடைக்கும்.

உயர்நிலைப் பள்ளியில் பயிலும் திருமதி நங்கையின் மற்ற நான்கு பிள்ளைகளும் கல்வி உதவித்தொகை, கூடுதல் நிதி ஆதரவு மானியங்கள் போன்ற வழிகளில் ஆளுக்கு $300 கூடுதலாகப் பெறுவர்.

ஜிஎஸ்டி, யு-சேவ் பற்றுச்சீட்டுகள் வகையில் $900 பெற இக்குடும்பம் தகுதி பெறும். அத்துடன், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொகை $1,000 திருமதி நங்கைக்கு கிடைக்கும்.

கணவர் திரு சேது ராமகிரு‌ஷ்ணன் நிரந்தரவாசி என்பதால் வரவுசெலவு திட்டச் சலுகைகளுக்கு அவர் தகுதிபெற மாட்டார்.

“படிப்பிற்கு வழங்கப்படும் நிதி, புத்தகங்கள், போக்குவரத்து போன்ற செலவுகளுக்குக் கைகொடுக்கும். எனக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்றான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மூலம் என்னை நான் மேம்படுத்திகொள்ள ஆவலாக இருக்கிறேன்,” என்றார் திருமதி நங்கை.


நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

வியாபாரம் கிட்டத்தட்ட 30% குறைந்துவிட்ட நிலையில், ஒரு மாத வாடகை தள்ளுபடி செய்யப்படும் என்பது செலவுகளைக் கட்டுப்படுத்த ஓரளவு கைகொடுக்கும். ஏனெனில் கடையில் வேலை செய்யும் ஊழியர்களுக்குச் சம்பளம் தரவேண்டும். ஒட்டுமொத்த தேக்கா சந்தையும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் கூடிய விரைவில் நிலைமை சீராகிவிடும் என்று அனைவரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.


- கணே‌ஷ் சிங், 54,
தேக்கா சந்தை ‘மாயா மோகன்’ பானக் கடை உரிமையாளர்


கல்விச் செலவுக்குக் கைகொடுக்கும்

நான் பல்கலைக்கழக முழு நேர மாணவியாக இருப்பதால், வருமானம் இல்லாதவர் என்ற அடிப்படையில்
$300 கிடைக்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தருகிறது. என்னைப் போன்ற மாணவர்களின் அன்றாடச் செலவுக்கும் கல்விக் கடனுக்கும் கைகொடுக்கும் எந்த உதவித்தொகையும் வரவேற்கத்தக்கது. அதுபோக, கொரோனா கிருமித்தொற்று பிரச்சினையையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் சமாளிக்கும் பொருட்டு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவாக $10.9 பில்லியன் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதும் பாராட்டுக்குரியது.


- பிரியா ரவி, 22, வர்த்தகத் துறை இறுதியாண்டு மாணவி, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்


வலுவான ஒரு கருப்பொருளுடன் இலக்கை நிர்ணயித்திருக்க வேண்டும்

முதியோருக்குக் கூடுதல் ஆதரவு, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதி என வரவுசெலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துத் திட்டங்களும் வரவேற்கத்தக்கவை. கொரோனா கிருமி தொற்றி வரும் இந்தக் கடினமான சூழலில், முந்தைய ஆண்டுகளைவிட கூடுதலாக நிதி ஒதுக்கியிருப்பது மக்களுக்கு அதிக நம்பிக்கையைத் தருவதாக உள்ளது. வலுவான ஒரு கருப்பொருளுடன் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் அமைந்திருந்தால் அது திட்டங்களுக்கு மேலும் மெருகூட்டியிருக்கும். ஒரு குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்காக நிதியை ஒதுக்கியிருந்தால் திட்டம் பொருள்பொதிந்ததாக இருந்திருக்கும்.

அ.விக்னேஸ்வரி, 26, அரசாங்க ஊழியர்


ஆதரவு தரும் அனுகூலங்கள்

மெர்டேக்கா தலைமுறையைச் சேர்ந்தவள் என்ற வகையில், கடந்த சில வரவுசெலவுத் திட்டங்கள் மூலம் எனக்கு அனுகூலங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. பராமரிப்பு, ஆதரவு தொகுப்புத் திட்ட ரொக்கம், கூடுதல் ‘யு-சேவ்’ தள்ளுபடி, பொதுப் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ‘பே‌‌ஷன்’ அட்டையில் $100 நிரப்புதல் ஆகியவை வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும். மேலும், மூத்தோர் ஆதரவுத் திட்ட உதவித் தொகைக்கும் நான் இவ்வாண்டு தகுதிபெறக்கூடும்.


- வெ.இந்துமதி, 66, இல்லத்தரசி


வரவுசெலவுத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையைக் காட்டியிருக்கிறது. மக்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம் என்பதை அரசாங்கம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. 2021ஆம் ஆண்டில் பொருள், சேவை வரி உயர்த்தப்படாது என்று இப்போதே மக்களிடம் தெரிவித்தது மிக நல்லது என நினைக்கிறேன்.


- தினகரன், 58, சந்தைப்படுத்துதல் துறை நிர்வாகி


கிருமித்தொற்று பாதிப்பைச் சமாளிக்க உதவி

சுற்றுப்பயணத் துறையினர், டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் ஆகியோருக்குச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நகர மன்றங்கள் நடத்தும் உணவங்காடி நிலையங்களில் உள்ள கடைகளுக்கு ஒரு மாத வாடகைக் கழிவு மற்றும் வர்த்தகக் கட்டடங்களில் அரை மாத வாடகைக் கழிவு போன்ற சலுகைகள், கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சமாளிக்க உதவும். நான் ஆர்ச்சர்ட் சாலையில் ஆபரணக் கடை வைத்து நடத்தி வருகிறேன். இங்கு வாடகை மிகவும் அதிகம். அத்துடன், சுற்றுப்பயணிகளின் வருகை குறைந்துவிட்டதாலும் கிருமித்தொற்றுக்குப் பயந்து உள்ளூர் மக்கள் அதிகம் வெளியில் வருவதில்லை என்பதாலும் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறிய, நடுத்தர நிறுவனங்களை நிலைப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மூலதனக் கடன், சந்தை தயார்நிலை உதவி போன்ற திட்டங்கள் நிறுவனங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

முஹம்மது பிலால், 50, ஆபரணக் கடை உரிமையாளர்


சிறு நிறுவனங்களுக்குப் பெரும்பயன்

நிறுவனங்கள் தங்களது திறன்களை மேம்படுத்துவதை ஊக்குவிக்க, முழு நேர நிர்வாகிகள் திட்டத்தை ‘என்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் அனுபவமிக்க நிர்வாகிகளை வேலைக்கு எடுக்க எங்களது தொழிற்சபைக்கும் இத்திட்டத்தின்வழி நிதி வழங்கப்படும். அவர்களது அனுபவங்கள், சிறிய நிறுவனங்களுக்கு மிகுந்த பயன் தரும் என்று நம்புகிறேன். நமது நிறுவனங்கள் உலகெங்கும் விரிவாக்கம் காணும் நிலையில், தங்களது வெளிநாட்டு வர்த்தகச் செயல்பாடுகளை நிர்வகிக்க, சரியான திறனாளரை அடையாளம் காண்பதில் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றன. அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய ஆசிய வட்டார அனுபவத்திற்கான தயார்நிலைத் திட்டத்தின் வழி, வட்டார கலாசாரத்தை நமது மாணவர்கள் அனுபவிக்கின்றனர். சிங்கப்பூர் நிறுவன அடையாளத்தை உலகமயமாக்க, இந்தக் கல்வி அனுபவம் அவர்களுக்கு எதிர்காலத்தில் கைகொடுக்கும்.

டாக்டர் டி.சந்துரு, தலைவர், சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபை


திறமை வெளிப்பட்டது

கொரோனா கிருமித்தொற்று காரணமாக அரசாங்கம் மிக விரைவாக தன் திட்டங்களை மாற்றியிருக்கிறது. வர்த்தகங்களுக்குக் கொடுத்துள்ள வாடகை தொடர்பிலான சலுகைகள் ஊக்கமூட்டுபவை. இதனால் கிருமிப் பரவல் இருந்தாலும் மக்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். நான்காம் தலைமுறைத் தலைவர்கள் தங்களது தொடக்க காலத்திலேயே இந்தப் பெரும் பிரச்சினையைச் சந்தித்துள்ளபோதும் அதை திறமையுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.


- விகாஷ் ராஜ், 52, உணவுத்துறை நிர்வாகி


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!