மங்கையர் ஊர்வலம் சிங்கையில் புதுவிதம்

மணப்பெண்ணும் அவருடைய தோழிகள் ஐவரும் மோட்டார் சைக்கிள்களில் ஏறி, பெண் வீட்டில் இருந்து திருமண மண்டபத்திற்கு ஓட்டிச் சென்ற காணொளி இணையத்தில் பரவி பெருமளவில் கவனத்தை ஈர்த்தது. ஆயினும், தம்மைப் பொறுத்தவரையில் அது மனதிற்குப் பிடித்த, அதே நேரத்தில் பண்பாட்டையும் கட்டிக்காத்த எளிமையான நிகழ்வின் ஓர் அங்கமே என்கிறார் மணப்பெண் திரேசா அந்தோணி, 37.

அரசாங்க ஊழியரான திரேசா, தமது திருமணத்திற்காக மங்கள உடையில் தம் நண்பரின் ‘கவசாக்கி எச்2 (1000 சிசி)’ மோட்டார்சைக்கிளை, தோழியர் புடைசூழ ஓட்டிச் சென்றதை அக்காணொளி காட்டியது. இவர், யமஹா எம்டி09 டிரேசர் (900 சிசி), கேடிஎம் 1190 அட்வென்ச்சர் (1190 சிசி), யமஹா ஏரோக்ஸ் (155 சிசி) என மூன்று மோட்டார்சைக்கிள்களுக்குச் சொந்தக்காரர்.

தன் திருமணத்திற்கு மோட்டார்சைக்கிளில் செல்வது குறித்த யோசனை தனக்குத் தோன்றியதும் உடனடியாக அதை மோட்டார்சைக்கிள் ஓட்டத் தெரிந்த தோழியர் ஐவரிடம் கூறினார் திரேசா.

“அவர்களும் அதற்கு உடனே ஒப்புக்கொண்டனர்,” என்று கண்கள் மின்ன, முகம் மலர்ந்தபடி சொன்னார்.

ஆயினும், சேலையும் அணிகலன்களும் அணிந்தபடி மணக்கோலத்தில் மோட்டார்சைக்கிளை ஓட்டுவது சாத்தியமா என ஐயம் எழ, தோழியருள் ஒருவரான ஆதிளக்‌ஷ்மி மோகன், 34, தமது வடிவமைப்புத் திறனால் அதைச் சாத்தியமாக்கினார். “மோட்டார்சைக்கிள்களில் அமர்வதற்கு வசதியான முறையில் சேலை வடிவமைப்பு இருக்கவேண்டும். இல்லையேல், மோட்டார்சைக்கிளின் இடுக்குகளில் சேலை சிக்கிக்கொள்ளும் அபாயமுள்ளது,”என்றார் அவர்.

தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டியிருந்ததால் மல்லிகைப் பூவால் கூந்தலை அலங்கரிக்க முடியவில்லை என திரேசா குறிப்பிட்டார்.

அத்துடன் அவர் தமது அணிகலன்களையும் முக ஒப்பனையையும் குறைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. குமாரி ஆதிளக்‌ஷ்மியுடன் மற்றொரு தோழியான 28 வயது நுர் ஹலிமாவும் ஆடைகளை வடிவமைக்க உதவினார்.

“திருமண நாளன்று என் தம்பியின் நண்பர்கள் மோட்டார்சைக்கிள்களில் வந்து எங்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர். அதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. புவாங்கோக்கில் உள்ள என் வீட்டிலிருந்து திருமண மண்டபமான பொத்தோங் பாசிர் சிவ துர்க்கா ஆலயத்திற்கு நாங்கள் மொத்தம் 24 பேர் சைக்கிளில் சென்றோம்,” என்று திரேசா விவரித்தார்.

“மணப்பெண் என்பதற்காக நான் மட்டும் சொகுசாக காரில் இருந்துகொண்டு, என் தோழியர் மட்டும் மோட்டார்சைக்கிள் ஓட்டுவதை நான் விரும்பவில்லை,” என்றும் அவர் சொன்னார்.

மாலை 6 மணியில் இருந்து 6.30 மணி வரை மணக்கோலத்துடன் இந்தப் பரிவாரத்தின் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் இடம்பெற்றது.

பாரம்பரியச் சடங்குகள் அனைத்தையும் பின்பற்றியதாகக் கூறிய திரேசா, ‘மோட்டார்சைக்கிள் ஓட்டினாலும் இறுதியில் நாங்கள் அனைவருமே தமிழச்சிகள். தமிழ் மரபு மீது எங்களுக்கு ஆழ்ந்த பற்று உள்ளது,” என்றார்.

21 வயதில் தமக்கு நடந்த முதல் திருமணத்திற்குப் பின்னர் மோட்டார்சைக்கிளைப் பொழுதுபோக்குக்காக ஓட்டுவதைக் குறைத்துக்கொண்டார் திருமதி திரேசா.

ஒரு மகனுக்குத் தாயான இவர், தமக்கு 30 வயதானபோது விவாகரத்து பெற்றார். அதன் பின்னரே பழைய ஆர்வத்திற்குப் புத்துயிரூட்ட முடிவு செய்தார்.

“ஏதேனும் ஒன்றில் ஒருவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும்போது சந்தர்ப்ப சூழல் காரணமாக சில நேரங்களில் அது மறைந்திருக்குமே தவிர முற்றிலும் மங்கிவிடாது,” என்றார்.

‘எஸ்ஜி இந்தியன் பைக்கர்ஸ்’ ஃபேஸ்புக் குழுவில் இணைந்த பின்னர், தம்மைப் போலவே மோட்டார் சைக்கிளோட்டும் இந்தியப் பெண்கள் இவருக்கு அறிமுகமானார்கள்.

“மாறுபட்ட ஆர்வம் கொண்ட இந்தியப் பெண்களாக நாங்கள் உள்ளோம் என்பதால் ஒன்றுசேர்ந்தோம்,” என்றார் இந்தக் குழுவின் ஆக இளையவரான ஆர் ஜோதி, 28. திருமதி திரேசா முதலியோர் தமக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து மோட்டார்சைக்கிள் ஓட்டுவது குறித்த அச்சங்களைப் போக்க உதவியதாகக் குறிப்பிட்டார் அரசாங்க ஊழியரான குமாரி ஜோதி.

குழுவாக இணைந்து மலாக்கா, கோலாலம்பூர் உள்ளிட்ட பல தொலைவிடங்களுக்கு ஆடவர் துணையின்றி மோட்டார்சைக்கிளிலேயே பலமுறை சென்றுள்ளனர்.

ஆறாண்டுகளாக தங்கள் நட்பைத் தொடரும் இந்த மங்கையர், இறுதியில் திரேசாவின் மணப்பெண் தோழியராகவும் மாறினர்.

திரேசாவின் திருமண நாள் மோட்டார் சைக்கிள் பவனி குறித்து ஒரு சிலரே அறிந்திருந்தனர்

தாமும் தம் தோழிகளும் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் காட்டும் காணொளி தங்களுக்குத் தெரியாமலேயே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறித்து வியப்படைந்ததாக இவர்கள் கூறினர். காணொளி காட்டுத்தீயாகப் பரவ. அறிமுகமில்லாதோர் பலர் குறுஞ்செய்தி, தொலைபேசி மூலம் தொல்லை தருவதாகக் குறிப்பிட்ட திருமதி திரேசா, இவை எல்லாம் கூடிய விரைவில் ஓய்ந்தால் நல்லது என்றார்.

இவரின் மணக்கோல ‘மோட்டார்சைக்கிள்’ ஊர்வலத்தைப் பலரும் வரவேற்று, ஆதரவளித்தனர். திருமண விழாவின் நளினத்தைக் கெடுப்பதாக உள்ளது என ஒரு சிலர் கூறினர். ஆனாலும், தமக்குப் பிடித்தபடி திருமணத்தை நடத்திய அதே வேளையில் பாரம்பரியத்தைக் கட்டிக்காத்ததையும் பாராட்டினார் மாணவி ரிஷிகா, 18. புதுமைப் பெண்ணின் மற்றொரு புரட்சி என்றார் வர்த்தக ஆலோசகரான குமாரி மோணிக்கா, 25.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!