அன்புடன் அரவணைக்கும் சிங்கப்பூர்

உலக நாடு­களில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி வரும் கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த சிங்­கப்­பூர் உட்­பட பல நாடு­களும் பல்­வேறு பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றன.

மலே­சியா நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை கடந்த 18ஆம் தேதி முதல் செயல்­ப­டுத்­தி­யது. அந்­நாட்­டில் எல்­லை­கள் போக்­கு­வ­ரத்­துக்கு மூடப்­பட்­டன. சிங்­கப்­பூ­ரில் வேலை­ செய்­யும் மலே­சி­யர்­கள் இங்கு வரமுடியாது போனது. இதனால், சேவைத் துறை­களில் முடக்­கம் ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற அச்­சம் பர­வ­லாக எதி­ரொ­லித்­தது.

பாது­காப்பு, சுகா­தார பரா­ம­ரிப்பு, துப்­பு­ரவு, உண­வ­கம், சில்­லறை வர்த்­த­கம் என பல துறை­களில் 300,000க்கும் அதி­க­மான மலே­சி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர்.

இதில் 1,000 சுகா­தா­ரத் துறை ஊழி­யர்­கள் உட்­பட கிட்­டத்­தட்ட 100,000 மலே­சி­யர்­க­ளுக்கு இங்கு தங்­கும் வசதி இல்லை. கணி­ச­மானோர் தினந்­தோ­றும் மலே­சியா சென்று வரு­கின்­ற­னர்.

நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் மலே­சிய ஊழி­யர்­களை சிங்­கப்­பூ­ரில் தங்க வைக்க முயற்சி எடுத்­தன. அர­சாங்­கம் நிறு­வ­னங்­க­ளுக்கு தோள் கொடுத்­தது. தங்­கு­மிட ஏற்­பாட்­டுக்­காக ஒவ்­வோர் ஊழி­ய­ருக்­கும் ஓர் இர­வுக்கு $50 நிதி­ ஆ­த­ரவை அறி­வித்­தது.

தங்க இட­வ­சதி இல்­லா­மல் தவித்த மலே­சி­யர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் மக்­களும் விரைந்து உத­விக் கரம் நீட்­டி­யுள்­ள­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக சில சவால்­களை எதிர்­நோக்­கும் பல­ரில் நிறு­வ­னத்­தின் நிறு­வ­ன­ரும் நிபு­ணத்­துவ இயக்­கு­ந­ரு­மான திரு ஆண்­டனி ஜெயா­வும் ஒரு­வர்.

கிட்­டத்­தட்ட இரு­நூறு ஊழி­யர்­கள் கொண்ட பாது­காப்­புச் சேவை வழங்­கும் ஸ்ட்­ரெய்ட்ஸ் ஃபசி­லி­டீஸ் பிரை­வேட் லிமி­டெட் நிறு­வ­னத்­தில் 40 பேர் மலே­சி­யர்­கள்.

அவர்­கள் எல்­லா­ரும் ஜோகூர் பாரு­வில் தங்­கு­கின்­ற­னர். அறி­விப்பு வந்த நாள் இரவு முழு­தும் திரு ஜெயா­வும் நிர்­வாக அதி­கா­ரி­களும் தூங்­கவே இல்லை. மலே­சிய ஊழி­யர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­திக்கு நிறுவனம் உட­ன­டி­யாக ஏற்­பாடு செய்­ய வேண்டி இ­­ருந்­தது.

“அப்­படி இருந்­தும் 15 பேரால் வர­மு­டி­ய­வில்லை. 25 பேருக்­கான வசதி செய்­யப்­பட்­டது. ஐவர் தங்­கள் உற­வி­னர்­க­ளின் வீட்­டில் தங்க முடி­வெ­டுத்­த­னர். மற்ற 20 பேருக்கு விடு­தி­க­ளி­லும் வீடு­க­ளி­லும் இட­வசதி ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது,” என்­றார் அவர்.

கடந்த 15 ஆண்­டு­க­ளாக பாது­காப்­புத் துறை­யில் செயல்­பட்­டு­வ­ரும் திரு ஜெயா, இந்­தச் சவால் வித்­தி­யா­ச­மா­ன­தா­க­வும் கடு­மை­யா­க­வும் இருப்­ப­தாக சொன்­னார்.

அவ­ரது நிறு­வ­னம் 25 ஆண்­டு­க­ளாக சுத்­தி­க­ரிப்­புச் சேவை­யை­யும் வழங்கி வரு­கிறது. சுமார் 600 பேர் வேலை செய்­யும் அந்த நிறு­வ­னத்­தில் 150க்கும் மேற்­பட்­டோர் மலே­சி­யர்­கள்.

“சுத்­தம் செய்­வது, பாது­காப்பு, உண­வ­கம் போன்ற துறை­களில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் சேவை அத்­தி­யா­வ­சி­ய­மாக உள்­ளது. இந்­நாட்­டில் மனி­த­வ­ளம் பற்­றாக்­கு­றை­யாக இருப்­ப­தால் முழுக்க முழுக்க சிங்­கப்­பூ­ரர்­க­ளைச் சார்ந்­தி­ருப்­பது சாத்­தி­ய­மல்ல. மேலும் சில­ருக்கு இத்­த­கைய வேலை­களில் ஈடு­பாடு இல்லை,” என்று கூறி­னார் திரு ஜெயா.

குடும்­பத்­தைப் பிரி­வதே சிர­மம்

லிட்­டில் இந்­தி­யா­வி­லுள்ள முடி திருத்­த­கம் ஒன்­றில் பணி­பு­ரி­யும் திரு ராஜ்­கு­மார் தினந்­தோ­றும் ஜோகூ­ரி­லி­ருந்து மோட்­டார் சைக்­கி­ளில் சிங்­கப்­பூர் வந்­து­செல்­வார்.

இனி இரண்டு வாரங்­க­ளுக்­குக் குடும்­பத்­தி­ன­ரைப் பார்க்க இய­லாது என்­பது வருத்­தத்தை அளிக்­கிறது.

வயது முதிர்ந்த தாயா­ரும் மனை­வி­யும் ஒரு வயது குழந்­தை­யும் அவரை நம்பி உள்­ள­னர்.

“வரு­மா­னம் இல்­லா­மல் குடும்­பத்தை நடத்த முடி­யாது. இல்­லை­யெ­னில் நான் விடுப்பு எடுத்து குடும்­பத்­து­டன் இருந்­தி­ருப்­பேன். தற்­போது என் மனை­வி­தான் என் தாயா­ரை­யும் குழந்­தையை­யும் பார்க்­க­வேண்­டும். சாமான் வாங்­கப் போக­வேண்­டும்,” என்­றார் அவர்.

புதிய அனு­ப­வம்

பொதுப் போக்­கு­வ­ரத்து நிறு­வ­னம் ஒன்­றில் ஓட்­டு­ந­ரா­கப் பணி­யாற்­றும் 33 வயது சக்தி கும­ர­ன் இது­வரை நட்­சத்­திர விடு­தி­களில் தங்­கி­யதே இல்லை. இப்­போது இரு வாரங்­க­ளுக்கு ஹோட்­ட­லில் தங்­கி­யி­ருப்­பது மாறு­பட்ட அனு­ப­வ­மாக உள்­ளது.

“எனது நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரின் மத்­திய பகு­தி­யில் நட்­சத்­திர விடு­தி­யில் எனக்­குத் தங்­கு­மி­டம் வழங்­கி­யுள்­ளது. என் கன­வில்­கூட இந்த மாதிரி இடத்­தில் தங்­கு­வேன் என்று நான் எண்­ணி­ய­தில்லை,” என்று தெரி­வித்­தார் ஐந்­தாண்­டு­க­ளாக இங்கு பணி­பு­ரிந்­து­வ­ரும் திரு சக்தி.

சிர­மத்­தி­லும் ஒரு சந்­தோ­ஷம்

இந்­திய உண­வ­கம் ஒன்­றில் பல்­லாண்­டு­க­ளா­கப் பணி­யாற்­றி­வ­ரும் திரு கணே­சன் சோம­சுந்­த­ரத்­திற்கு இந்த சிர­ம­கா­லத்­தி­லும் ஒரு சந்­தோ­ஷம். தற்­போது மனை­வி­யோடு லிட்­டில் இந்­தி­யா­வி­லுள்ள ஹோட்­டல் ஒன்­றில் ஒன்­றா­கத் தங்கி வேலை பார்்க்­கும் அவர் இப்­போது அந்த நாள் நினை­வு­களில் திளைத்தி ருக்­கி­றார். கடந்த 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் தினந்­தோ­றும் ஜோகூ­ரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­து­போ­கும் அவர், 1999ஆம் ஆண்­டுக்கு முன்­னர் நான்­காண்­டு­கள் சிங்­கப்­பூ­ரி­லேயே தங்கி வேலை செய்­தார். அப்­போது இங்கு வேலை செய்­யும் மலே­சிய பெண்­ணைக் காத­லித்து மணம் முடித்­தார்.

கேம­ரன் மலை­யைச் சேர்ந்த அவர் திரு­ம­ணத்­திற்­குப் பின்­னர் ஜோகூ­ரில் வீடு வாங்கி குடி­யே­றி­னார்். இப்­போது தாங்­கள் இங்கே தங்­கி­யி­ருப்­பது பழைய நினை­வு­களை எழுப்­பு­வ­தா­கக் கூறி­னார் கணே­சன். தங்­க­ளைச் சார்ந்து குடும்­பத்­தி­னர் எவ­ரும் இல்லை என்­ப­தால், இரு­வ­ரும் நிம்­ம­தி­யாக இங்கே இருக்க முடி­கிறது என்­ற­னர்.

செய்­யும் தொழிலே தெய்­வம்

கடந்த இரு­பது ஆண்­டு­க­ளுக்கு மேல் சிங்­கப்­பூ­ரில் துப்­பு­ர­வுப் பணி­யைச் செய்து வரும் 58 வயது திரு நந்­த­கு­மா­ருக்கு போது­மான சேமிப்பு இருந்­தா­லும்­கூட, விடுப்பு எடுக்­கும் எண்­ணம் கொள்­ள­வில்லை.

“என்­னு­டன் வேலை செய்த ஒரு­வர் நாடு திரும்­பி­விட்­டார். ஆனால் எனக்கு மனம் வர­வில்லை. கடந்த பல வாரங்­க­ளா­கவே பணி­யா­ளர்­கள் பற்­றாக்­குறை இருந்­து­வ­ரு­கிறது. நாங்­கள் கூடு­தல் நேரம் பணி­யாற்­று­கி­றோம். நானும் சென்­று­விட்­டால் மேலும் சிர­ம­மாக இருக்­கும்,” என்­றார் திரு நந்­த­கு­மார்.

நல்ல வேலை­யில் இருக்­கும் அவ­ரது இரு மகன்­களும் அவரை வேலை­யி­லி­ருந்து ஓய்­வு­பெ­று­மாறு கூறி­வ­ரு­கின்­ற­னர். ஆனால் அவ­ருக்கு அதில் விருப்­ப­மில்லை. “எனது வாழ்க்­கைக்கு கைகொ­டுத்­தது இந்த வேலை­தான். என்­னால் முடிந்­த­வ­ரை­யில் இந்த வேலையைச் செய்­வேன்,” என்­றார் அவர்.


உணவும் உறைவிடமும் தந்து உதவும் உள்ளங்கள்

திடீர் கட்­டுப்­பா­டு­க­ளால் திண்­டா­டிப் போன மலே­சி­யர்­க­ளுக்கு பல­வ­ழி­களில் சிங்­கப்­பூ­ரர்­கள் உதவி நல்கி வரு­கின்­ற­னர்.

திரு சசி­கு­மார், 45, திரு­மதி ‌ஷியா­மளா தம்­பதி சிர­மப்­படும் மலே­சி­யர்­க­ளுக்கு உணவு, சுவை நீர் பானங்­களை இல­வ­ச­மாக அளித்து வரு­கின்­ற­னர்.

உண­வுப் பொட்­ட­லங்­க­ளை­யும் சுவை நீர் டப்­பாக்­க­ளை­யும் எடுத்­துக்­கொண்டு அட்மிரல்டி, மார்சிலிங், கிராஞ்சி எம்ஆர்டி நிலையங்களுக்கு டாக்சி அல்­லது நண்­பர்­க­ளின் காரில் சென்று இவர்­கள் தேவைப்­படு­வோ­ரைக் கண்­ட­றிந்து உதவி வரு­கின்­ற­னர்.

“பய­ணத் தடை­யால் தவிக்­கும் சில மலே­சி­யர்­க­ளைப் பற்றி செய்­தி­க­ளி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் படித்­தேன். எல்­லோ­ருக்­கும் போதிய வச­தி­கள் இருக்­காது. உட­னடி செல­வுக்­குப் பண­மில்­லா­ம­லும் இருக்­க­லாம். இது போன்ற சூழ்நிலை­யில் தின­சரி உணவு, தண்­ணீர் போன்ற அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளைப் பெறு­வ­து­கூட சவா­லாக அமை­ய­லாம்,” என்­றார் 35 வயது திரு­மதி ‌ஷியா­மளா.

சமூக ஊட­கத் தளங்­களில் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு அழைப்பு விடுத்­தார் அவர். தங்­கள் நண்­பர்­க­ளின் மூல­மும் உதவி தேவைப்­ப­டு­வோரை கண்­ட­றி­வ­தா­கக் கூறி­னார் 45 வயது திரு சசிகுமார்.


மலேசியர்களுக்கு உதவி வரும் குமாரி கெல்லி கன­கா

‘கெல்­லிஸ்­கா­மெடி’ என்ற பெய­ரில் இணை­யத்­தில் நகைச்­சு­வைக் காணொ­ளி­களை வெளி­யிட்டு வரும் குமாரி கெல்லி கன­கா­வை­யும் அணு­கி­னார் ‌திரு­மதி ஷியாமளா. இத்­தம்­ப­தி­யி­னர் வழங்­கும் சேவை­க­ளைப் பற்றி விழிப்­பு­ணர்வு தரும் பதி­வும் செய்து உத­வி­னார் கெல்லி, 30.

கெல்­லி­யும் மலே­சி­யர்­க­ளுக்கு உத­வும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றார். பல்­லா­யி­ரக்­க­ணக்­கன ரசி­கர்­க­ளைப் பெற்­றுள்ள கெல்லி, உதவி தேவைப்­படும் மலே­சி­யர்­க­ளை­யும் உதவி வழங்­கத் தயா­ராக இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் இணைத்து வரு­கி­றார்.

இது­வ­ரை­யில் 20 மலே­சி­யர்­க­ளுக்கு உத­வி­யுள்­ளார் கெல்லி.

துப்­பு­ர­வா­ளர்­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­றும் இரண்டு மலே­சி­யர்­க­ளுக்கு மார்ச் 17ஆம் தேதி­யி­லி­ருந்து தமது வீட்­டில் இல­வ­ச­மா­கத் தங்க இட­ம­ளித்­துள்­ளது கெல்­லி­யின் குடும்­பம்.

தெரி­யா­த­வர்­களை வீட்­டில் தங்க அனு­ம­திப்­ப­தால் கிரு­மித்­தொற்று ஏற்­ப­ட­லாம் என்ற அச்­சம் சில­ருக்கு இருக்­க­லாம் என்­றும் இந்த நிலைமை இரண்டு வாரங்­க­ளுக்கு மேலாக நீடிக்­க­லாம் என்ற பய­மும் மக்­க­ளி­டம் இருக்­க­லாம் என்­றும் சொன்­னார் கெல்லி.

எனி­னும், இந்த நேரத்­தில் அச்­சத்­தைப் பரப்­ப­வு­தை­விட மனி­த நே­யத்­தை­யும் கரு­ணை­யை­யும் காட்­டு­வது அவ­சி­யம் என்­பது கெல்­லி­யின் கருத்து.


மலேசியர்களுக்கு உதவிய ‌ஷாஃபி பாடா ஜபாரி, சோஃபியா

திரு ‌‌‌ஷாஃபி பாடா ஜபா­ரி­யும் (34 வயது) அவ­ரது மனைவி 30 வயது திரு­மதி சொஃபியா பேக­மும் பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளாக பணி­பு­ரி­யும் மூன்று மலே­சி­யர்­க­ளுக்­குத் தங்­கு­வ­தற்கு இட­ம­ளித்­துள்­ள­னர்.

நான்கு அறை வீட்­டில் வசிக்­கும் இத்­தம்­பதி, தம் நண்­பர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­காக வீட்­டில் ஒர் அறையை ஒதுக்­கி­யி­ருந்­த­னர். தற்­போது அந்த அறையை மூன்று மலே­சி­யர்­க­ளுக்கு இல­வ­ச­மாக தந்­துள்­ள­னர். மார்ச் 19ஆம் தேதி­யி­லி­ருந்து மூவ­ரும் அங்கு வசித்து வரு­கின்­ற­னர்.

மலே­சி­யர்­க­ளின் இக்­கட்­டான சூழ்­நி­லை­யைப் பற்றி அறிந்­த­போது, தங்­கு­வ­தற்கு இடம் தேடும் மலே­சி­யர்­க­ளுக்­கான தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அழைப்புவிடுத்­தார் திரு ‌‌‌ஷாஃபி.

அதன் மூலம் திரு வசந்­த­கு­மார், திரு கார்த்­திக், திரு மோகன் ஆகிய மூன்று மலே­சி­யர்­கள் தங்­கு­வ­தற்கு இடம் தேடு­வ­தாக அறிந்­த­னர் ‌‌‌ஷாபி­யும் சொஃபியா­வும்.

“குறு­கிய காலகட்டத்­தி­லும் அர­சாங்­கம் முடிந்த அள­விற்கு முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. ஆனால் அந்த பொறுப்பு அனை­வ­ருக்­கும் உண்டு. சிறு உத­வி­யாக இருந்­தா­லும் நம்­மால் முடிந்­ததை செய்­வது முக்­கி­யம். அன்­பு­டன் அனை­வ­ரை­யும் அர­வ­ணைப்­போம்,” என்று கூறி­னார் திரு ‌‌‌ஷாஃபி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!