கூடுகிறது பொறுப்பு குறைகிறது அச்சம்

சிங்­கப்­பூ­ரில் கொரோனா கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­வ­தைத் தொடர்ந்து கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

அதில் ஒன்­றாக, வரும் 8ஆம் தேதி­யி­லி­ருந்து மே 4ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரில் அனைத்­துப் பள்­ளி­களும் மூடப்­ப­ட­வி­ருக்­கின்­றன. மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்தே படிப்­பார்­கள்.

வீட்­டி­லி­ருந்தே கல்வி கற்­ப­தால், சிக்­கல்­களும் இடை­யூ­று­களும் இருந்­தா­லும் தற்­போ­தைய சூழ­லில் சரி­யான முடிவு என தமிழ் முர­சி­டம் பேசிய பல பெற்­றோர் கருத்­து­ரைத்­த­னர்.

பிள்­ளை­க­ளின் பாது­காப்பே தலை­யா­யது என்­றும் குறிப்­பாக பள்­ளி­கள் மூடப்­ப­டு­வ­தால் பல­ரும் நெருக்­க­மாக பய­ணிக்­கும் பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­க­ளைப் பிள்­ளை­கள் பயன்­ப­டுத்­தத் தேவை­யில்லை என்­றார் இல்­லத்­த­ர­சி­யான 41 வயது திரு­மதி சித்ரா மாத­வன்.

அவ­ரு­டைய மூத்த மகள் காருண்யா மாத­வன், 16, ராஃபிள்ஸ் கல்வி நிலை­யத்­தில் ஐபி எனும் ஒருங்­கி­ணைந்த பாடத்­திட்­டத்­தில் 5ஆம் ஆண்­டில் பயில்­கி­றார். இளைய மகன் நிதே‌ஷ் மாத­வன், 12, சிங்குவா தொடக்­கப்­பள்­ளி­யில் பயில்­கி­றார். அவர் இவ்­வாண்டு பிஎஸ்­எல்இ தேர்வு எழு­த­வி­ருக்­கி­றார்.

இணை­யம் வழி ஆசி­ரி­யர்­கள் வீட்­டுப்­பா­டங்­க­ளை­யும் வகுப்­பு­க­ளை­யும் நடத்­தி­னா­லும் வகுப்­பில் ஆசி­ரி­யர் முன்­னி­லை­யில் பாடங்­க­ளைக் கற்று உட­னுக்­கு­டன் கேள்­வி­க­ளுக்­குப் பதில் தெரிந்­து­கொள்­வது­போல இப்போது இருக்­காது என்­பது திரு­மதி சித்­ரா­வின் கருத்து.

“உயர்­நி­லைப் பள்­ளி­களில் இணை­வ­தற்­கான நேரடி பள்­ளி­கள் சேர்க்கை (DSA) நட­வ­டிக்­கை­கள் பொது­வாக ஏப்­ரல் மாதத்­தில்­தான் நடை­பெ­றும். ஆனால் கொவிட்-19 தொற்­றால் அது தற்­போது நடை­பெ­றுமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக இருக்­கிறது. மேலும் நிதே‌ஷ் கணி­தப் பாடத்­தில் சிறந்து விளங்­கு­வ­தால், அவர் பங்­கேற்­க­வி­ருந்த பல சிறப்பு கணி­தப் (ஒலிம்­பி­யாட்) போட்­டி­களும் ரத்து ஆகி­விட்­டன.

“அரை­யாண்­டுத் தேர்­வு­களும் ரத்து செய்­யப்­ப­டு­வது சற்று ஏமாற்­ற­மாக இருக்­கிறது. மாண­வர்­கள் பிஎஸ்­எல்இ தேர்வு எந்த அள­வுக்­குத் தயா­ராக இருக்­கி­றார்­கள் என்­ப­தைக் கணிக்க அரை­யாண்­டுத் தேர்­வு­கள் உத­வும்,” என்று விவ­ரித்­தார் திரு­மதி சித்ரா.

கிட்­டத்­தட்ட ஒரு மாத காலம் தமது கண­வ­ரும் வீட்­டில் இருந்து பணி­யாற்­ற­வி­ருப்­ப­தால், தமக்கு வேலை­கள் அதி­க­மா­கப் போகிறது என்று சிரித்­துக்­கொண்டே சொன்­னார் அவர்.

கணினி பொறி­யி­ய­லில் இளங்­க­லைப் பட்­டம் முடித்­தி­ருக்­கும் திரு­மதி சித்ரா, கொவிட்-19 நில­வ­ரத்­தால் தாம் நடத்தி வந்த பகுதி நேர துணைப்­பாட வகுப்­பு­க­ளை­யும் ரத்து செய்­து­விட்­டார்.

“பிள்­ளை­க­ளின் உடல்­ந­லன்­தான் மிக­வும் முக்­கி­யம். அதிக கூட்ட நெரி­சல் மிக்க பேருந்­து­கள், ரயில்­களை எடுத்து பிள்­ளை­கள் பள்­ளிக்கு அன்­றா­டம் செல்­வ­தை­விட வீட்­டி­லேயே இருந்­தால் பாது­காப்­பாக இருக்­க­லாம். குடும்­ப­மாக வீட்­டி­லேயே இருந்து நேரம் செல­விக்க முடி­யும். இது கண்­டிப்­பாக ஒரு புதிய அனு­ப­வ­மாக இருக்­கும். கொவிட்-19 தொற்றை ஒழிக்க மிக­வும் தேவை­யான ஒரு நட­வ­டிக்கை,” என்­றார் திரு­மதி சித்ரா.

முக்கிய தேர்வுகள் குறித்தே கவலை

இதே கருத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார், அலு­வ­லக மேலா­ள­ராக பணி­பு­ரி­யும் 39 வயது திரு­மதி சௌபாக்­கி­ய­வதி தன­பாலு. 

அர­சாங்­கத்­தின்­மீதும் கல்­வி­ய­மைச்­சின்­மீ­தும் நம்­பிக்கை இருந்­த­போ­தும் கிரு­மித்­தொற்­றின் ஆரம்­பக்­கட்­டத்­தில் தமது மூன்று பிள்­ளை­களை பள்­ளிக்கு அனுப்­பு­வது அவ­ருக்கு சற்று பய­மா­கவே இருந்­தது. 

இவ­ரின் மூத்த மகள் திவா­ஷினி கிரைஸ்ட்­சர்ச் உயர்­நி­லைப் பள்­ளி­யில் உயர்­நிலை 4ல் பயில்­கி­றார், பிரித்­திகா உட்­லண்ட்ஸ உயர்­நி­லைப் பள்ளி உயர்­நிலை 2ல் பயில்­கி­றார், மூன்­றா­வது மகள் யாஷிதா சிவ­னே­சன் ஃபூச்சூன் தொடக்­க­நிலை 6ல் பயில்­கி­றார்.

இரு மகள்­கள் முக்­கிய தேர்­வு­களை எழு­து­கி­றார்­கள் என்­றா­லும் அவர்­கள் வீட்­டில் பாது­காப்­பாக இருந்து படிப்­ப­தையே திரு­மதி சௌபாக்­கி­ய­வதி விரும்­பு­கி­றார். 

“முக்­கிய தேர்­வு­கள் என்­ப­தால் அவர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் சிர­ம­மா­கத்­தான் இருக்­கும். என்­றா­லும் உடல்­ந­லன்­தான் மிக முக்­கி­யம். ஆரோக்­கி­ய­மாக இருந்­தால் கடு­மை­யா­கப் படிக்­க­லாம்,” என்­றார் அவர்.

மூத்த அலு­வ­லக நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் அவ­ரும் அடுத்த வாரத்­தி­லி­ருந்து வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யப்­போ­கி­றார். 

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை அதி­கா­ரி­யான அவ­ரது கண­வர் திரு சிவ­நே­சன் வேலைக்­குச் செல்ல வேண்­டும். எனவே தாம் பிள்­ளை­க­ளு­டன் உட்­கார்ந்து வேலை செய்­யப் போவ­தா­கக்­கூ­றிய அவர், தமது பிள்­ளை­க­ளின் வகுப்­பா­சி­ரி­யர்­க­ளு­டன் அணுக்­க­மான தொடர்­பில் இருப்­ப­தா­கக் கூறி­னார். 

தயார்நிலையில் இருந்த பள்ளிகள்

கல்­வி­ய­மைச்­சின் படிப்­ப­டி­யான அணுகு­மு­றை­யால் புதிய அறி­விப்­பு­க­ளால்  பதற்­றம் அடை­ய­வில்லை எனக் கூறி­னார் 40 வயது யசோதா ரகு­நா­தன். 

அவ­ரது இரு பிள்­ளை­கள் பயி­லும் ஃபூச்சூன் தொடக்­கப்­பள்ளி கடந்­தாண்­டி­லி­ருந்தே வீட்­டி­லி­ருந்து கற்­கும் முறையை ஓர­ளவு செயல்­ப­டுத்தி வந்­தது இப்­போது முழு­நே­ர­மும் வீட்­டுச் சூழ­லில் படிப்­ப­தற்கு பிள்­ளை­கள் தயா­ராக எளி­தாக இருக்­கிறது என அவர் கூறி­னார்.

10 வயது சக்­தி­வே­லும் 8 வயது சம்­யுக்­தா­வும் வீட்­டி­லி­ருந்து கற்­ப­தற்கு பக்க ­ப­ல­மாக இருக்க முடிவு செய்த திரு­மதி யசோதா துணைப்­பாட நிலைய ஆசி­ரி­யர் பணியை தற்­போது நிறுத்­தி­யுள்­ளார். புகைப்­ப­டக் கலை­ஞ­ராக பணி­பு­ரி­யும் அவர் கண­வர் திரு நரேந்­தி­ரன் வேலைக்கு செல்­ல­வேண்­டும். கண­வர், பிள்­ளை­கள் எல்­லா­ரும் வெளி­யில் செல்­வது யசோ­தா­வுக்கு கவ­லை­யாக இருந்­தது. இப்­போது பிள்­ளை­கள் வீட்­டி­லேயே இருக்­கப்­போ­வது அவ­ருக்கு நிம்­ம­தி­ய­ளிக்­கிறது. 

கடந்த 2003ல் ஏற்பட்ட சார்ஸ் பரவலுக்கு பிறகு, வீட்டிலேயே பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வசதி குறைந்த மாணவர்களும் கணினி களைப் பெற வழி செய்யப்பட்டுள்ளது.

இணையம் வழி வகுப்பு, பாடங்கள் போன்றவற்றுடன் ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர். 

வீட்டிலிருந்து கற்றல் அடிக்கடி சோதிக்கப்பட்டும் வந்துள்ளதால் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படாது என்பதில் நம்பிக்கையுடன் உள்ளனர். வீட்டில் அவர்கள் பொறுப்புடன் படிக்க வேண்டும் என்பதே சில பெற்றோரின் கவலை. ஆனாலும் பிள்ளைகள் வீட்டில் இருப்பதில் அவர்களுக்கு நிம்மதி.


படிப்புடன் நல்ல பழக்கங்களையும் சொல்லித் தரலாம்

பள்ளிக்குச் செல்லாவிட்டாலும் நேரத்துடன் எழுவது, உணவு உண்பது, விளையாடுவது என்ற கட்டுக்கோப்பை தமது மகளுக்குத் தொடர்ந்து வலியுறுத்தும் நூலகரான யுனிஸ் அந்தோனி, 32, இது மிக முக்கியம் எனக் கருதுகிறார்கள்.  
பெற்றோரும் தம்முடன் வசிப்பதால் கிருமிப்பரவல் குறித்து அதிக அக்கறை கொண்டுள்ள திருமதி யுனிஸ், இந்த ஏற்பாடு அனைவருக்கும் நல்லதே என்றார்.
இந்த நேரத்தில் பாலர் பள்ளி செல்லும் லியாவுக்கு சின்ன சின்ன வீட்டுவேலைகளைச் செய்யச் சொல்லி பழக்கப்படுத்த எண்ணம் கொண்டுள்ள அவர் பிள்ளைகளுக்கு சுகாதாரமான நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அதை அவர்களது வாழ்க்கை முறையாக்க இது நல்ல தருணம் என்றார்.
சுத்தமாக இருப்பது பற்றியும் மற்றவர்களின் சுத்தத்தைப் பேணுவது பற்றியும் அவர் மகளுக்கு சொல்லித் தருகிறார். திருமதி யுனிசுக்கு ரியா ஆறு மாத பெண் குழந்தை உள்ளது.
அவரது கணவர் ராஜகுமரன் இளமாறன், 33, கடைத்தொகுதிக் கட்டட மேலாளராகப் பணிபுரிவதால் அவருக்கு வீட்டில் வேலை செய்யும் ஏற்பாடு இல்லை. அதனால் பிள்ளைகளைக் கவனிக்க அவருக்கு நேரம் இருக்காது என்றார் யுனிஸ்.


கிருமித்தொற்றை தவிர்க்க சிறந்த வழி

10 வயது கே‌‌ஷவ், 8 வயது நிகிதா, 6 வயது ‌‌‌‌ஷாம் ஆகிய தமது மூன்று பிள்ளைகளுடன் டாக்டர் மைதிலி. பள்­ளி­களை மூடும் அர­சாங்­கத்­தின் முடிவை அவர் வர­வேற்கிறார்.
10 வயது கே‌‌ஷவ், 8 வயது நிகிதா, 6 வயது ‌‌‌‌ஷாம் ஆகிய தமது மூன்று பிள்ளைகளுடன் டாக்டர் மைதிலி. பள்­ளி­களை மூடும் அர­சாங்­கத்­தின் முடிவை அவர் வர­வேற்கிறார்.

மூன்று குழந்­தை­க­ளுக்­குத் தாயா­ரான 39 வயது டாக்­டர் மைத்­திலி பாண்டி, குடும்ப மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­று­கி­றார். அவர் கண­வர் வங்­கித் துறை­யில் பணி­யாற்­று­கி­றார். 
அத்­தி­யா­வ­சிய சேவை வழங்­கும் துறை­யில் பணி­பு­ரி­யும் இரு­வ­ரும் வேலைக்­குச் செல்­ல­வேண்­டிய சூழ்­நி­லை­யில் உள்­ள­னர்.
“வேலைக்­குச் செல்­லும் பெற்­றோ­ருக்கு ஒரு மாத காலம் பிள்­ளை­கள் வீட்­டி­லி­ருந்து படிப்பை மேற்­பார்வை செய்­வது சற்று கடினம்­தான். பிள்­ளை­கள் சுய ஊக்­கத்­து­ட­னும் கட்­டுப்­பா­ட்டு­ட­னும் படிப்­பது அவ­சி­யம். அவர்­க­ளுக்­குத் தேவை­யான கணினி, ஐபேட் (iPad) வச­தி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­ய­வேண்­டும்,” என்ற மைதிலி எனி­னும் இந்­தக் கட்­டுப்­பாடு அவ­சி­யம் எனக் கரு­து­கி­றார். 
எந்­த­வித அறி­கு­றி­யும் இல்­லாத ஒரு­வ­ருக்­குக்­கூட கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருக்­க­லாம் என்­றும் பொதுப் போக்­கு­வரத்து ஓட்­டு­நர்­கள், துப்­பு­ர­வா­ளர்­கள், ஆசி­ரி­யர்­கள் போன்று பல பேரு­டன் தொடர்பை குறைத்­து­கொள்ள இந்த முயற்சி வழி­வ­குக்­கும் என்­றும் குறிப்­பிட்­டார் மருத்­து­வ­ரான திரு­மதி மை­திலி.


பெற்றோர், பிள்ளைகள் இருவரையும் பாதுகாக்க வேண்டும்

பள்­ளி­கள் மூடப்­ப­டு­வது குறித்த அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்­பி­ருந்தே வாரத்­திற்கு ஓரிரு நாட்­கள் பாலர் பள்­ளி­யில் பயி­லும் தமது மகன் ரேஷ்­வனை பள்­ளிக்கு அனுப்­பு­வ­தில்லை என்­றார் செயற்­பாட்டு நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் ரவி­நாத் குஹா, 40. 
வீட்­டில் இருந்­து வேலை பார்க்­கும் தமது மனைவி, மனை­வி­யின் பெற்­றோர் அல்­லது பணிப்­பெண் தமது இரு மகன்­க­ளுக்­கும் பாடம் கற்­றுக் கொடுப்­பார்­கள் என்­றார் அவர்.
அவ­ரது நிறு­வ­னம் தள­வா­டங்­கள் தொடர்­பில் அத்­தி­யா­வ­சிய சேவை வழங்கி வரு­வ­தால் அவர் அலு­வ­ல­கம் செல்ல வேண்­டிய நிலைமை. இருப்­பி­னும் வீட்­டுக்கு வந்­த­வு­டன் நேராக குளி­ய­ல­றைக்­குச் சென்று குளித்­து­வி­டு­வார். 
சிறு பிள்­ளை­கள் இருப்­ப­தால் நல்ல தனி­ந­பர் சுகா­தா­ரத்­தைக் கடைப்­பி­டிப்­பது மிக முக்­கி­யம் என்ற அவர், தாமும் தமது மனை­வி­யும் தங்­க­ளின் பெற்­றோ­ரின் வீடு­க­ளுக்­குச் செல்­வ­தை­யும் அவர்­க­ளின் வரு­கை­யை­யும் தற்­கா­லி­க­மாக நிறுத்தி யுள்ளார். மூத்த குடி­மக்­க­ளின் சுகா­தா­ரத்­தைக் கட்­டிக்­காப்­ப­தும் அனை­வ­ரது கடமை என்­றார் அவர்.


மகனின் படிப்பை நேரில் காண வசதி

தொழில்­மு­னை­வ­ரான 42 வயது திரு பிரகாஷ், இனி­மேல்­தான் தம் இரு பிள்­ளை­க­ளின் கல்­விக்­காக கூடு­தல் முயற்சி எடுக்க வேண்­டி­யுள்­ளது என்­றார்.
அவ­ரின் பிள்­ளை­க­ளான, ஆதித்யா செயின்ட் ஆண்ட்­ரூஸ் தொடக்­கப்­பள்ளி முதல் ஆண்­டி­லும் அஞ்­சுனா ‘திங் கிட்ஸ்’ பாலர் பள்ளியில் பாலர் வகுப்பு ஒன்­றி­லும் இந்த ஆண்­டில்­தான் சேர்த்­தார். 
இரு­வ­ருக்­கும் முதல் அனு­ப­வம் என்­ப­தால் கடந்த இரு­மா­தங்­க­ளாக அவ­ரும் அவ­ரது மனை­வி­யும் அவர்­க­ளு­டன் கூடு­தல் நேரத்­தைச் செல­விட்­ட­னர். 
“எங்­க­ளுக்கு அதிக அலைச்­ச­லாக இருந்­தது. இப்­போது மகன் வீட்­டி­லி­ருந்து படிக்­கப் போவது வேறு­வி­த­மான பொறுப்பு,” என்­றார் அவர். மக­ளின் பாலர் பள்ளி இது­வ­ரை­யில் மூடு­வது குறித்து எது­வும் தெரி­விக்­க­வில்லை என்­றார் அவர்.
திரு பிர­கா­ஷும் சமூக அமைப்பு ஒன்­றில் வர்த்­த­கத் தொடர்பு அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரி­யும் அவ­ரது மனைவி சுபா­ஷினி பால­கி­ருஷ்­ணனும் வீட்­டி­லி­ருந்து பணி­புரி­கின்­ற­னர். 
அதனால் பிள்ளைகள் படிப்பதை அருகிலிருந்து பார்ப்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
“நானும், எனது நண்­பர்­க­ளும் எங்­க­ளது பிள்­ளை­க­ளுக்கு நேர­லைக் காணொ­ளி­கள் வாயி­லாக ஓவிய வகுப்­பு­கள், உடற்­பயிற்சி போன்­ற­வற்றை ஏற்­பாடு செய்­துள்­ளோம். 
“என்­றா­லும் வீட்­டி­லேயே பிள்­ளை­க­ளைப் பார்த்­துக்­கொண்டு அவர்­கள் கற்பதை கவ­னிக்­கும் வாய்ப்பு அரிது,” என்ற கூறிய திரு பிர­காஷ், அவர்­க­ளது கற்­றல் பாணி­யைத் தெரிந்­து­கொண்டு அதற்­கேற்­ற­வாறு மேலும் உதவி செய்ய ஆவ­லு­டன் இருப்­ப­தா­கக் கூறி­னார்.


ஒரு மாதம் பள்ளிகள் மூடல்

 கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, வரும் 8ஆம் தேதியிலிருந்து மே 4ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகின்றன.

 பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன.

 தேசிய அளவிலான தேர்வுகள் முக்கியமானவை என்பதால் அவை தொடர்ந்து நடத்தப்படும்.

 ஜூன் 1, 2ஆம் தேதிகளில் நடைபெறுவதாக உள்ள வாய்மொழி, தாய்மொழிப் பாடத் தேர்வுகள் நடைபெறும்.

 பாலர் பள்ளிகளும் மாணவர் பராமரிப்பு நிலையங்களும் மூடப்படும். எனினும் வேலைக்குப் போக வேண்டிய நிலையிலுள்ள, வேறு பராமரிப்பாளர்களைத் தேட முடியாத பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும் சேவைகள் வழங்கப்படும்.

 தனியார் கல்வி நிலையங்களும் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்க வகைசெய்ய வேண்டும் அல்லது வகுப்புகளைத் தற்காலிகமாக ரத்து செய்யவேண்டும். 

 தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் முழுக்க முழுக்க இணையவழிப் பாடங்களுக்கு மாறும்.

 இப்போதைய அறிவிப்பின்படி மே 5ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும். ஆயினும், கல்வி அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் கொரோனா கிருமித்தொற்று நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து, இந்த நடவடிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பதை முடிவுசெய்யும்.

 நாளை பள்ளிகளில் இந்த நடைமுறைகள் குறித்த முழு விவரங்களை மாணவர்களும் பெற்றோரும் பெறலாம்.

கல்வி முழுமையானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். எளிதான அங்கமான பாடத்திட்டத்தை முடிப்பது மட்டும் கல்வியாகாது. அது ஒரு சமுதாயச் செயல்முறை, சமுதாயப் பயணம்.
- கல்வி அமைச்சர் ஓங் யி காங்