எங்கும் புழங்க தமிழ் செழித்தோங்கும்

உலகின் தொன்மையான மொழியான தமிழ், சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக அரியணையில் வீற்றிருப்பது தமிழர்களின் பெரும்பேறு. சிங்கப்பூரில் வாழும் மொழியாக தமிழ்மொழி நிலைத்திருக்க அரசாங்கம் தமிழ்மக்களுக்குப் பல வாய்ப்புகளையும் வளங்களையும் வழங்கி வருகிறது. தற்போது கோலாகலமாக நடைபெற்றுவரும் தமிழ்மொழி விழா அதற்குச் சான்று. ஆனாலும், மக்கள் போதிய அளவில் அவ்வளங்களைப் பயன்படுத்துகிறார்களா எனும் கேள்வி எழுகிறது.

செம்­மொ­ழி­யாம் தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரின் நான்கு ஆட்­சி­மொ­ழி­களில் ஒன்­றாக விளங்கி, பணத்­தாள் முதல் ஊட­கம் வரை சிங்­கப்­பூர்த் தமி­ழர்­க­ளின் அன்­றாட வாழ்­வில் பின்­னிப் பிணைந்­துள்­ளது. பொதுப் போக்­கு­வ­ரத்து நிலை­யங்­களில் பய­ண அட்­டை­யில் (ஈஸி-லிங்க்) பணம் நிரப்­பு­தல், நூல­கங்­களில் தானி­யக்க இயந்­தி­ரம் வழி­யாக நூல்­களை இர­வல் பெறு­தல், தானியக்க வங்கி இயந்­தி­ரங்­கள் (ஏடிஎம்) எனப் பல இடங்­க­ளி­லும் தமிழ்­மொ­ழித் தெரி­வு வழங்­கப்­பட்டு வரு­கிறது.

ஆயினும், இனம், மொழி, சம­யம் குறித்­துக் கொள்கை ஆய்­வுக் கழ­கம் கடந்த ஆண்டு வெளி­யிட்ட ஆய்வறிக்­கை­யில் சிங்­கப்­பூ­ரில் வாழும் பெரும்­பா­லார் ஆங்­கில மொழியை அவர்­க­ளின் முதன்மை மொழி­யா­கக் கரு­து­வ­து தெரிய வந்துள்ளது.

சிங்­கப்­பூர் இந்­தி­யர்­களில் 43 விழுக்­காட்­டி­னர் ஆங்­கி­லத்தை முதன்மை மொழி­யா­கக் கரு­து­கின்­றனர் என்­றும் வேலை, வர்த்­த­கச் சூழ­லில் தாய்­மொழி உத­வும் என 45% இந்­தி­யர்­கள் கரு­து­கி­றார்­கள் என்­றும் அந்த ஆய்­வ­றிக்கை தெரிவித்தது.

அந்த ஆய்வு, தமிழ்­மொ­ழி­யைக் குறிப்­பாக எடுத்­துக்­கொள்­ளா­மல் பல­வித இந்­திய மொழி­கள் பேசும் இந்­தி­யர்­களை ஒட்­டு­மொத்­த­மாக மதிப்­பிட்­டது.

இருந்­தா­லும், பொது­வாக இங்கு மொழி­க­ளின் பயன்­பாட்­டில் ஆங்­கி­லத்­தின் ஆதிக்­கம் அதி­க­ரித்து வரும் போக்கு தெரி­கிறது.

இத்­த­கைய சூழ­லில், தமிழ்­மொழி இங்கு தொடர்ந்து நிலைத்­தி­ருக்க தமிழ் வளங்­க­ள் பயன்­படுத்­தப்பட வேண்டும் என்­கி­றார் இளம்­பிறை இலக்­கிய வட்டத்­தின் துணைத்­த­லை­வர் அ.முஹம்­மது பிலால், 51.

“யாதும் ஊரே யாவ­ரும் கேளிர் என்­பது தமி­ழ­ர் பண்­பாடு. சிங்­கப்­பூ­ரில் வாழும் பல இனத்­த­வர்­களை­யும் பல மொழி­க­ளை­யும் ஆதரித்து வருகிறோம். ஆனால், தமிழை நாம் விட்­டுத்தர முடி­யாது. தொடர்ந்து வாழும் மொழி­யாக இருக்க தமி­ழர்­க­ளான நாம் நம் மொழிக்கு வழங்­கப்­படும் வளங்­களை முறை­யா­கப் பயன்­ப­டுத்­த­வேண்­டும்,” என்கி­றார் திரு பிலால்.

ஆங்­கி­லம், தமிழ் என இரு­ மொழித்­தி­றன் பெற்ற அவர், பொது­வான மருத்­துவ சேவை­கள் உட்­பட அண்­மைக் காலத்­தில் கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் குறித்த விவ­ரங்­க­ளை­யும் பதி­வு­மு­றை­க­ளை­யும் தமி­ழில் தெரி­வு­செய்து அணு­கு­கி­றார்.

தம் குழந்­தை­கள் இரு­வ­ரு­ட­னும் வெளியே செல்­லும்­போது பொதுச் சேவை­க­ளைத் தமி­ழில் பயன்­ப­டுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார் மருந்து தயா­ரிப்­புத் துறை­யில் பணி­யாற்­றும் திரு சுந்­தர் பில­வேந்­தர்­ராஜ், 31.

“வேலைச் சூழல் கார­ண­மாக பணி­யி­டத்­தில் 95% ஆங்­கி­லத்­தைப் பயன்­ப­டுத்­து­கி­றேன். தனிப்­பட்ட வாழ்­வில் முடிந்த அள­விற்குத் தமிழ் பயன்­ப­டுத்­து­கி­றேன். பிள்­ளை­க­ளு­டன் நூல­கத்­திற்­குச் சென்று நூல்களை இர­வல் பெறும்போது தமிழ்­மொ­ழி­யைக் கட்­டா­யம் பயன்­படுத்­து­வேன். இத­னால் என் பிள்­ளை­களும் தமிழ்ச் சொற்­களை அறிந்­து­கொள்ள வாய்ப்பு கிடைக்­கிறது,” என்­றார் அவர்.

தம் இரண்டு வயது மகன் தீரன் படிக்­கும் பாலர் பள்­ளி­யில் தமிழ் இல்­லா­த­தால் வீட்­டில் தமி­ழ்க் கேலிச் சித்­தி­ரங்­கள் பார்ப்­பது, தமிழ்ப் புத்­த­கங்­களை வாசிப்­பது போன்ற நட­வடிக்­கை­களில் மகனை ஈடு­ப­டுத்­து­வ­தாக அவர் கூறி­னார்.

“பொது இடங்­களில் தமிழ்ப் பயன்பாட்டை மேலும் எளி­மைப்­படுத்த வேண்­டும். தேசிய மொழி­பெ­யர்ப்­புக் குழு தேசிய அள­வில் தமிழை வழங்க பல முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. ஆனால் இளை­யர்­க­ளைக் கவர மேலும் சுவா­ர­சி­ய­மாக்­க­லாம். தொழில்­நுட்­பம், அசை­வுப்­ப­டம், கேளிக்கை வடி­வத்­தில் தமிழ் இருந்­தால் மேலும் பலர் அதனை அணு­கு­வர்,” என்பது திரு சுந்­தரின் எண்ணம்.

ஆங்­கி­லத்­தில் சேவை­களை பயன்­ப­டுத்­து­வ­தி­னால் வேக­மாக வேலை முடி­கிறது என்ற மாற்­றுக் கருத்தை முன்­வைத்­தார் திரு செம்­பி­யன் சோம­சுந்­த­ரம், 28.

“ஆங்­கி­லம் தெரி­யா­த­வர்­கள் அதை தாய்­மொ­ழி­யில்­தான் பயன்­படுத்­து­கி­றார்­கள். ஆனால் ஆங்­கி­லம் தெரிந்­த­வர்­கள் சேவை­க­ளை வேகமாகப் பயன்­ப­டுத்தி, அடுத்த வேலைக்­குச் செல்­லவே பார்ப்­பார்­கள். அன்­றா­டத் தேவை­க­ளுக்­கான சேவை­க­ளைப் பொறுத்­த­வரை அப்­ப­டித்­தான் இருக்­கும் என்று நம்­பு­கிறேன்,” என்­றார் திரு செம்­பி­யன்.

“ஆனா­லும், தமிழ்­மொ­ழி­யு­டன் இணைந்­தி­ருக்க வேறு பல நிகழ்ச்சி­களும் வாய்ப்­பு­களும் உள்­ளன. தமிழ்த் தெரி­வு­க­ளைப் பல இடங்­களில் அர­சாங்­கம் வழங்கி வருவது பாராட்­டுக்கு­ரி­யது. கொவிட்-19 குறித்த விவ­ரங்­களும் பதி­வு­மு­றை­களும்­கூட தமி­ழில் வழங்­கப்­ப­டு­கின்றன. இந்த வளங்­கள் இருப்­பது தமி­ழர்­களுக்கு முக்­கி­யம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊட­கத்­தில் தமிழ்

கடந்த 15 ஆண்­டு­க­ளாக நாள்­தோறும் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் உட­னுக்­கு­டன் செய்­தி­க­ளைப் பதிவிட்டு வரு­கி­றார் ஓய்­வு­பெற்ற பத்­தி­ரி­கை­யா­ளர் திரு ஏ.பி.ராமன், 88.

“ஃபேஸ்புக் வழி­யாக தமிழ்­மொழியைக் கற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. தமிழ் நன்கு தெரி­யா­த­வர்­கள் கூட நல்ல தமி­ழில் பேசும் வாய்ப்­பு­க­ளைப் பெற்­றுள்ளனர்,” என்­றார் திரு ராமன்.

இணை­யம் தரும் வாய்ப்­பு­களை அனைவரும், குறிப்­பாக இளை­யர்­கள் பயன்­படுத்திக்கொள்ள வேண்­டும் என்­றும் எதிர்­கா­லத்­தில் தமிழ் வாழும் மொழி­யாக இருக்க இணை­யத்­தில் தமி­ழ்மொழியுடன் ஒன்­றி­ணை­வது முக்­கியம் என்­றும் அவர் கூறி­னார்.

ஆட்­டம் பாட்­டம் என கேளிக்­கைக்கு மட்­டும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­தா­மல் படைப்­பி­லக்­கி­யம், வாசிப்பு போன்­ற­வற்­றிற்­கும் பயன்­ப­டுத்­து­வது அதி­க­ரிக்க வேண்­டும் எனக் கேட்டுக் கொண்டார் சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் செயல்­தலை­வர் நா.ஆண்­டி­யப்­பன், 73.

“தமிழை இழக்­கா­மல் இருக்க அடுத்த தலை­மு­றை­யி­ன­ரின் பங்கு இன்றியமையாதது. மற்ற மொழி­கள் தெரி­யா­மல், தமிழ் மட்­டும் தெரிந்­த­வர்­கள்­தான் தமிழ் வளங்­களைப் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்­றில்லை. தமி­ழர்­க­ளுக்­குத் தமி­ழைப் பயன்­ப­டுத்த கிடைக்­கும் ஒவ்­வொரு வாய்ப்­பும் புதை­யல்­தான்,” என்­றார் திரு ஆண்­டி­யப்­பன்.

வாங்க, பழகலாம்!

தமிழ் வளங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் இயன்றவரை தமிழைப் பயன்படுத்தி வருகிறார் நிதி ஆலோசகரான திருமதி ஹபிடா ‌‌‌ஷா, 32 (படம்).

நூலகத்தில் நூல் இரவல் பெறும்போதும் பயண அட்டையில் பணம் நிரப்பும்போதும் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுக்கும்போதும் இவர் தமிழ்மொழித் தெரிவை சொடுக்கியே பயன்படுத்துகிறார்.

“அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் பல இடங்களில் தமிழ்மொழிக்கான வளங்களை உருவாக்கி வைத்துள்ளன. அவற்றை நாம் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். அதைப் பயன்படுத்தத் தயங்கக்கூடாது,” என்கிறார் திருமதி ஹபிடா.

“நான் தமிழைத் தெரிவுசெய்வது கண்டு என் நண்பர்களே என்னைப் பார்த்து வியப்படைவது ஏன் என்று எனக்குப் புரிவதில்லை. அதுபற்றி அவர்களிடம் கேட்டால், ‘எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை’ அல்லது ‘எனக்குப் புரிவது கடினம்’ என்று சொல்லிவிடுகிறார்கள்,” என்று இவர் சொன்னார்.

“வளங்கள் இருக்கும்போது பயன்படுத்தாமல் அவற்றின் பயன்பாடு குறைந்து, அவை இல்லாமல் போன பிறகு குரல் எழுப்புவது, கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வது போன்றாகிவிடும்,” என்றார் திருமதி ஹபிடா.

பலதுறை மருந்தகங்களில் பாட்டியை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லும்போது அங்கு தமிழ்மொழியில் உள்ள கையேடுகளையே இவர் எடுப்பது வழக்கம்.

“அவற்றால் எவ்வளவோ நன்மைகள் உண்டு. என் பாட்டிக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையில்லை. சிறந்த நல்வாழ்வுக் குறிப்புகளை அவரே படித்துப் புரிந்துகொள்கிறார். மேலும் அவருக்கான தேவைகளை அவரே அறிந்துகொள்ளவும் முடிகிறது,” என்கிறார் திருமதி ஹபிடா.

“பயன்படுத்துவதை இயல்பாக்கிக் கொண்டால் பழகிவிடும், புரிதலும் எளிதாகி விடும். தொடக்கத்தில் எனக்கும் சில சொற்களைப் புரிந்துகொள்ளச் சிரமமாகத் தான் இருந்தது. இப்போது நன்கு புரிகிறது. இதுவே மொழி வளர்ச்சிக்கும் அதிகரிக்கும் மொழிப் புழக்கத்திற்கும் ஒரு சான்றுதானே!” என்றார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!