தமிழார்வத்தின் ஆரம்பப் புள்ளி பெற்றோரே

சிங்கப்பூரில் தாய்மொழிகள் வாழும் மொழிகளாக செழிக்க, இளம் வயதிலேயே தொடங்கவேண்டும். அதுவும், பிள்ளைகளுக்கு சுவைபட தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று நடந்த தாய்மொழிக் கற்றல் மாநாட்டில் கூறினார்.
2020 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சிங்கப்பூர் வீடுகளில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளதை அவர் சுட்டினார். அதே கணக்கெடுப்பு வீட்டில் தமிழ்மொழிப் பயன்பாடு குறைவதைக் காட்டுகிறது. பிள்ளைகள் தமிழில் புழங்காமல் இருக்க அதுவும் ஒரு காரணமாக உள்ளது என்று தமிழ் ஆசிரியர்கள் கூறுகின்றனர். இரு பெற்றோரும் வீட்டிலேயே தமிழில் பேசுவது சரிந்துவருவது தெரிகிறது. அதிலும் கலப்புப் பெற்றோர் கொண்ட சிறார்களுக்கு சவால்கள் அதிகம். ஊர்கூடித் தேரிழுத்தால்தான் தமிழ் மொழிப் புழக்கத்தைத் தூக்கிநிறுத்த முடியும் என்ற நிலையில் தமிழ் புழங்குமொழியாவதில் பெற்றோரின் கூடுதல் பங்கு அத்தியாவசியமாகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி முதல் புகுமுக நிலை வரை தமிழ் படிக்கும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 6% ஆக நிலைத்திருக்கிறது. ஆனால் அதே காலகட்டத்தில் மொத்த தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 26,300 தமிழ் மாணவர்கள் இருந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 25,700ஆக இருக்கிறது என்று கல்வி அமைச்சு தமிழ் முரசிடம் தெரிவித்தது.

“வீட்டில் தமிழில் பேசாமல் வகுப்புக்கு வரும்போது தமிழ் கற்க பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். பெற்றோர் தொடங்கியிருக்க வேண்டிய பணி ஆசிரியர்களையே முழுக்கச் சேர்கிறது. ஆனால் மொழியை வகுப்பில் மட்டுமே படித்துவிட முடியாது. அன்றாடப் பயன்பாடு அவசியம். உயர்நிலைக் கல்விக்குச் செல்லும்போது அடிப்படைத் தமிழ் தெரியாமலேயே மாணவர்கள் போகிறார்கள். இறுதியில் பாதிப்பு மாணவருக்குதான்,” என்றார் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியர் திருமதி காத்தாயம்மாள் செல்லையா பீட்டர், 70.

இல்லங்களில் ஐந்து வயதிற்கும் மேற்பட்டவர்களில் 48.7% விழுக்காட்டினர் ஆங்கிலத்தையே முதன்மை மொழியாக வீட்டில் பயன்படுத்துவதாக 2020ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு காட்டியது. 2010ல் இந்த எண்ணிக்கை 32.3%ஆக இருந்தது. 2010ல் 3.3% வீடுகளில் தமிழ் பயன்பாடு பிரதானமாக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு அந்த விகிதம் 2.5%ஆக குறைந்ததையும் ஆய்வு காட்டியது.

கூடும் கலப்புத் திருமணங்கள்

குறைந்து வரும் பிறப்பு வகிதம் ஒரு காரணமாக இருந்தாலும் கலப்புத் திருமணம் மற்றொரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

மொத்த திருமணங்களின் அடிப்பிடையில் கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை 2009ல் 18.4%ஆக இருந்தது. 2019ஆம் ஆண்டில் 22.9% ஆக அதிகரித்துள்ளது என்று அரசாங்கத் தரவுகள் காட்டுகின்றன.

தொடக்கப்பள்ளி முதல் புதுமுக நிலை வரை இனக்கலப்புப் பெற்றோரைக் கொண்ட மாணவர்கள் சராசரியாக 10% என்று கல்வி அமைச்சு தமிழ் முரசிடம் தெரிவித்தது.

“கலப்புப் பெற்றோராக இருக்கும்போது தமிழைத் தாய்மொழியாகக் தேர்வு செய்வதில் தயக்கம் இருக்கும். பிள்ளையின் நலன் கருதி செயல்படுவதையே அவர்கள் விரும்புவர்,” என்றார் அவர்.

பிள்ளைக்கு இரண்டாம் மொழியாகத் தமிழைத் தேர்வு செய்தால் இரு பெற்றோரும் உறுதியான இணக்கத்துக்கு வருவது அவசியம் என்றார் திருமதி பீட்டர்.

இரு பெற்றோரில் ஒருவரிடமாவது பிள்ளை தமிழில் பேசிப் பழக வேண்டும். தமிழ் ஆர்வத்தை ஊட்ட சுவாரசியமான நடவடிக்கைகள், துணைப்பாடம், போன்ற வாய்ப்புகளை அவர்களுக்கு உருவாக்கவேண்டும். தமிழ் பேசும் தாத்தா, பாட்டி, உறவினர்களுடன் தமிழில் பேசிப் பழக அவர்கள் வகைசெய்ய வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார்.

இனக்கலப்புப் பெற்றோர் உள்ள மாணவர்களுக்கு மட்டும் பிரச்சினைகள் இருப்பதில்லை, தமிழ் தெரிந்த பெற்றோர் உள்ள பல சிறார்களும் தமிழ்க் கற்றலில் சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்டார் கிட்டத்தட்ட 20 ஆண்டு களாக தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றும் திருமதி ஷர்மிளா திவாகரன், 42.

“பாலர் பள்ளியில் சீனம் படித்து, அடிப்படைத் தமிழ் ஆற்றல்கூட இல்லாமல் தொடக்கப்பள்ளிக்கு வரும் பல மாணவர்கள் உண்டு. அதனால் ஆசிரியர்களின் பிள்ளைகளை பள்ளியில் தமிழில் பேசவைத்து அடிப்படைத் வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. வீட்டில் தமிழ் பேசாவிட்டால் பிள்ளைகள் அதை முறையாக படிக்கமாட்டார்கள். இப்பிரச்சினை பெற்றோருக்கும் தெரியும்,” என்றார் திருமதி ஷர்மிளா.

கேட்டு, பார்த்து, அனுபவிக்கை யில் மொழி ஆற்றல் இயல்பாக வரும் என்றும் பெற்றோர் வீட்டில் சொல் அட்டைகள் தயாரித்து பிள்ளைகளுடன் தமிழில் உரையாட முயற்சி செய்யலாம் என்றும் கூறினார் அட்மிரல்ட்டி தொடக்கப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக உள்ள திருமதி ஷர்மிளா.

பயன்பாடு அவசியம்

மொழியை வாழ்க்கைத் தேவையாகக் கருதாமல் மதிப்பெண்களுக்காக மட்டுமே படிப்பதும் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்வதாலும் தமிழ் இயல்பாக வருவதில்லை என ‘கிரீனிட்ஜ்’ தொடக்கப்பள்ளியில் தாய்மொழிப் பிரிவின் தலைவரான திருமதி ர. சரோஜினி சுட்டினார்.

“உள்ளூர் குழந்தைகளுக்குத் தமிழ் மீது பிடிப்பு வருவது சிரமமாக உள்ளது. வீட்டிலும் தனிப்பட்ட வாழ்விலும் பயன்படுத்தும் தமிழ் தான் பள்ளியிலும் பிரதிபலிப்பாகும். பழக்கத்தில் இல்லாத போது மொழி வளத்தில் பற்றாக்குறை ஏற்படுகிறது,” என்று ஆதங்கப்பட்டார் திருமதி சரோஜினி.

“என் வகுப்பில் தமிழில் பேசுவதைக் கட்டாயப்படுத்தியுள்ளேன். ஆங்கிலம் அவ்வப்போது வந்தாலும் பரவாயில்லை. ஆனால் தமிழில் பேச முயற்சி செய்யும் பழக்கத்தை உண்டாக்குகிறேன்,” என்றார் டேயி உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான திருமதி ஜைனுல் பானு, 31. புதிர்ப் போட்டிகள், தொழில்நுட்பம், காணொளிகள், செய்தித்தாள் போன்ற வளங்களைக் கொண்டு மாணவர்களுக்குத் தமிழ் ஆர்வத்தை அவர் ஏற்படுத்துகிறார்.

மனம் இருந்தால் மாற்றமுண்டு

வீட்டில் பெற்றோர் இருவரும் தமிழ் தெரிந்தவர்களாக இருந்தாலும் தமிழில் பேச சிரமப்படுகிறார் 8 வயது யுத்தா.

“பாலர் பள்ளியில் சீன மொழியைப் படித்து, தமிழ் மாணவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்காமல் போனது. யுக்தாவிற்கு ஆங்கிலம்தான் எளிதாக வருகிறது. தொடக்கப்பள்ளியில் தமிழ்க் கற்றலில் சிரமம் ஏற்பட்டபோதுதான் பிரச்சினையின் ஆழம் எனக்குப் புரிந்தது,” என்றார் அவரது தந்தை திரு பீமா தியாகராஜன் லோகேஷ், 38.

“அண்மையில் வீட்டில் தமிழ்ப் புழக்கத்தை அதிகரித்துள்ளோம். ஒவ்வொரு திங்களும் வரும் மாணவர் முரசைப் படிக்க ஊக்குவிக்கிறோம். தேசிய நூலக வாரியம், உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம் போன்றவை நடத்திய சில தமிழ் நிகழ்ச்சிகளில் யுக்தாவைக் கலந்து கொள்ள வைத்துள்ளோம். மேலும் பல வாய்ப்புகளைத் தேடி வருகிறோம்,” என்றார் திரு லோகேஷ்.

+++

மொழிப் புழக்கம்: மூளை செயல்படும் விதம்

மகிழ்ச்சி தருபவற்றையே நாடு வதுதான் பிள்ளைகளின் அடிப்படை இயல்பு என்பதால், ஐம்புலன் களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புலன்கள் அடங்கிய, ஆக்கபூர்வான உணர்வுகளை உருவாக்கும் நடவடிக்கைகள் தமிழ்மொழி கற்றல் போன்ற கடினமான அனுபவத்தை மகிழ்ச்சிகரமான அனுபவமாக மாற்ற உதவும் என்று கூறினார் குழந்தை உளவியல் நிபுணர் டாக்டர் சீதா.

மொழிக் கற்றலில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்துகொள்வது அவசியம் என்று அவர் கூறினார்.

குழந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சிந்தனைகளை வெளிபடுத்த மொழி பயன்படுகிறது. அதுவே மொழியைக் கற்க குழந்தைக்கு உத்வேகமாக இருக்கிறது. ஏற்கெனவே ஒரு மொழியைக் கற்றால், வேறொரு மொழியைக் கற்கத் தேவையில்லை என்று பிள்ளைகளுக்குத் தோன்றலாம். ஏனென்றால் அவர்களது மனதில் மொழி என்பது தொடர்புக்கான ஒன்று என்றார் அவர்.

வளர்ச்சி அடையும் மூளைக்கு உள்வாங்கும் திறன் அதிகம். 5 முதல் 10 வயதுக்குள் இரண்டாம் மொழியைக் கற்றால், மூளை மொழி கற்றலுக்கு பழகிக்கொள்கிறது என்று ஆய்வுகள் சுட்டுகின்றன. ஒரு மொழி மட்டுமே கற்றுகொள்ள ஆர்வம் இருந்தாலும், இரு மொழிகள் கற்பதற்கு அது உகந்த காலகட்டம் என்றார் முனைவர் சீதா.

வாய்ப்பாடு போன்ற மற்ற தகவல்களைப்போல, மொழியும் மூளையில் உள்ள நீண்டகால நினைவுகளுக்குப் பதிய, அதை மீண்டும் மீண்டும் பல முறைகள் பயன்படுத்தும் வாய்ப்பு அவசியம் என்றும் ஐம்புலன்களில் ஒன்றாவது கற்றலில் தூண்டப்படும்போது மூளை கூடுதல் தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் என்று அவர் கூறினார்.

ஒரு குழந்தையை வற்புறுத்தி அல்லது திட்டி வலுக்கட்டாயமாக தமிழ் படிக்கச் சொன்னாலோ அவரைக் கேலி செய்தாலோ அது வெறுப்புத் தரும் அனுபவமாகி விடுகிறது. பெற்றோருக்கு அது எதிர்மறை விளைவுகளை உண்டாக்குகிறது. குழந்தையின் ஆர்வத்தை அறிந்து அதற்கேற்ப தமிழைக் கற்றுகொடுப்பது சிறந்தது,” என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் சீதா.

+++

வீட்டில் தமிழ் புழக்கம் பெருக தமிழாசிரியர்கள் தரும் ஆலோசனைகள்:

1. இணையத்தில் பல தமிழ் வளங்கள் உள்ளன. யூடியூப் தளத்தில் தமிழ் அசைப்படங்கள், கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றைப் பார்க்க சிறார்களை ஊக்குவிக்கலாம்.

2. அகராதிகள், வரலாற்றுக் கதைகளைப் பிள்ளைகளுடன் சேர்ந்து பெற்றோர் படிக்கலாம்.

3. பரமபதம், ‘ஸ்கிராபள்’ (Scrabble), ஆடுபுலி ஆட்டம் போன்ற பலகை விளையாட்டுகளைத் தமிழில் விளையாடுவது. கொவிட்-19 கட்டுப்பாடுககளால் பிள்ளைகளுடன் வீட்டில் அதிக நேரம் செலவழிக்க வாய்ப்பு இருக்கலாம். பொன்னான நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்க இது ஒரு வழி.

4. முக்கியமான தமிழ் சொற்கள் மனதில் பதிய, சொல் அட்டைகளைத் தயாரித்து வீட்டில் பொருத்தி வைக்கலாம். அடிக்கடி இந்தச் சொற்களைப் பார்ப்பதால் எளிதில் குழந்தையின் நினைவில் அவை பதிவாகின்றன.

5. தரமுள்ள தமிழ் திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து குடும்பமாகப் பார்ப்பது.

+++

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!