அவருக்கு அப்போது ஏழு வயதுதான். குடும்பத்துக்கு நன்கு பரிச்சயமான ஒரு நபர், சிறுமியாக இருந்த தேவிகாவை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார். ஓர் ஆண்டு கடந்த பின், தேவிகாவின் பெற்றோருக்கு அது தெரியவந்தது.
குற்றம் புரிந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டும் தேவிகா, தன் மனச்சிறையிலிருந்து விடுபட முடியாது தவித்தார். 'நடந்ததை மறந்திடு, இதைப் பற்றிப் பேச வேண்டாம்' என்று தேவிகாவின் பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறினர். தகாத முறையில் ஒருவரைத் தொடுவது என்றால் என்ன என்று பள்ளியில் சொல்லித்தரப்பட்டபோதுதான், தனக்கு நேர்ந்தது என்ன என்பதை தேவிகா உணர்ந்தார். இது அவரைப் பெரும் மன அழுத்தத்துக்குத் தள்ளியது. மனநல சிகிச்சைக்குச் சென்றும் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை.
ஆனால் தனக்கு நேர்ந்ததைப் பற்றி இன்று பலர் முன்னிலையில் அவர் பேசுவதால், மௌனமாகத் தவித்துக்கொண்டிருக்கும் பலருக்கு 26 வயது தேவிகா ஸதீஷ் பணிக்கர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
'இதைப் பற்றி கூச்சமே இல்லாமல் எப்படி இப்படி வெளிப்படையாகப் பேசுகிறீர்கள்?' என்று ஒருவர் கேட்டதை நினைவுகூர்ந்த தேவிகா, இத்தகைய வெளிப்படையான உரையாடல்கள் அவசியம் என்றும் இது பல நேரங்களில் உயிரைக் காப்பாற்ற வல்லது என்றும் குறிப்பிட்டார்.
பள்ளிகள் பாலியல் ரீதியான விழிப்புணர்வுப் பாடங்களைச் சிறுவயதிலேயே நடத்துவது அவசியம் என்று கூறிய அவர், ஒருவரின் ஒப்புதலுடன் தொடுதல், அந்நேரத்தில் என்ன செய்வது போன்றவற்றை விளக்க வேண்டும் என்றார். ஊடகங்களும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் பரபரப்பான முறையில் தெரிவிக்காமல் அதன் தொடர்பிலான சிந்தனைகள், உரையாடல்களைத் தூண்டும் தகவல்களை வழங்குவது நல்லது," என்றார் தேவிகா.
சமூக ஆதரவு குழுக்களுடன் இணைந்து மனநலம் தொடர்பிலும் பாலியல் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வரும் ஒரு தன்னார்வலராக இவர் விளங்குகிறார். தனது 21வது வயதில் தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அதே இடத்திற்குச் சென்று சிரித்தவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார் தேவிகா.