மாதக்கணக்கில் தாமதம், அலட்சியம், அலைக்கழிப்பு

கொவிட்-19 கிருமிப்பரவல் காலகட்டத்தில் ஒருபுறம் பல தொழில்கள் நலிவடைந்த போதும், இன்னொருபுறம் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சூடுபிடித்த சில தொழில்களில் சரக்கு ஏற்றுமதி இறக்குமதியும் ஒன்று. இவ்வேளையில், அத்தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களின் செயல் பாடுகள் குறித்துப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சிலரின் கருத்துகளையும் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் விளக்கத்தையும் கேட்டறிந்து வந்தது தமிழ் முரசு.

கடு­மை­யான போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பா­டு­க­ளால் கடந்த ஈராண்­டு­களாக வெளி­நாட்­டிற்­குச் செல்ல முடி­யாத சூழ­லில் இந்­தி­யா­வி­லி­ருக்­கும் தங்­கள் உற்­றார் உற­வி­ன­ருக்கு பொருள்­களை அனுப்பிவைக்க சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­மதி நிறு­வனங்­க­ளின் சேவை­க­ளைப் பலர் நாடி­னர். ஆனால், லிட்­டில் இந்­தி­யா­வின் கஃப் சாலை­யில் அதி­கம் காணப்­படும் இந்­நி­று­வ­னங்­களை நாடிய வாடிக்­கை­யா­ளர்­களில் பல­ரும் மன­வு­ளைச்­ச­லும் ஏமாற்­ற­மும் அடைந்­த­தா­கப் புலம்­பி­னர்.

 

காணாமல்போன நிறுவனம்

 

"கடந்த 2021ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் இந்­தி­யா­வுக்கு அனுப்­பிய பொருள்­கள் இன்­னும் சென்று சேர­வில்லை. இது­வரை பத்து முறைக்கு மேல் நிறு­வ­னத்­திற்கு நேரில் சென்று விசா­ரித்­து­விட்­டேன். சரக்­குக் கொள்­க­லன் தாம­த­மா­கச் சென்­றுள்­ளது, சுங்­க­வரி அலு­வ­ல­கத்­தின் பிடி­யில் உள்­ளது, இன்­னும் பத்து நாள்­களில் சென்­று­வி­டும் என்­பன போன்ற சாக்­குப்­போக்­கு­களை ஒவ்­வொரு முறை­யும் கூறு­கின்­ற­னர். மாதங்­கள் செல்­லச் செல்ல நிறு­வ­னத்­தா­ரின் பதில்­களில் உள்ள பொறுப்­பு­ணர்­வும் பணி­வும், பொருள்­கள் சென்று சேரும் என்ற நம்­பிக்­கை­யும் குறைந்து, மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளாக்­கு­கிறது," என்று குமு­றி­னார் கட்­ட­டப் பரா­ம­ரிப்­புத்­துறைப் பொறி­யா­ள­ரான வை.இளஞ்­சே­ரன், 40.

நண்­பர்­க­ளின் பரிந்­து­ரை­யின் பேரில் அந்நிறு­வ­னத்­தின்மூலம் தாம் பொருள்களை அனுப்­பியதாக திரு இளஞ்சேரன் சொன்னார். ஐந்து ஆண்டு­களுக்குமுன் அதே இடத்­தில் வேறு பெய­ரில் இருந்த நிறு­வனம் வழியாக அனுப்­பிய பொருள்­களும் சென்று சேராத சூழ­லில் திடீ­ரென ஒரு­நாள் அந்த நிறு­வ­னம் மூடப்­பட்­ட­தை­ அடுத்து, காவல்­துறை­யிடம் புகாரளித்­தும் பய­னில்­லா­மல் போனது என்றார் அவர்.

தம்­மைப்­போல் பல­ரும் அதே நிறு­வ­னத்­தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

 

பண்டிகைக்குமுன் பொருள்கள் சென்றுசேராததால் பரிதவிப்பு

 

நோன்பு பெரு­நாளை முன்­னிட்டு தமிழ்­நாட்­டி­லுள்ள தம் குடும்­பத்­தி­ன­ருக்கு புதிய ஆடை­கள், வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­கள் என பல­வித பொருள்­க­ளை­யும் புதி­தாக திறக்­கப்­பட்ட நிறு­வ­னம் ஒன்­றின் வழி­யாக அனுப்­பி­னார் ஷேக் அபுல், 52.

"2020ஆம் ஆண்­டில் ஏறக்­குறைய 135 கிலோ எடை­யுள்ள பொருள்­களை அனுப்பி வைத்­தேன். அவை கப்­பல்­மூ­லம் சென்று சேர்­வதற்கு அதி­க­பட்­சம் இரண்டு மாதங்­க­ளா­கும் என்று அவர்­கள் கூறி­ய­தால் நிச்­ச­யம் நோன்பு பெரு­நா­ளுக்­குள் சென்று சேர்ந்­து­வி­டும் என்று நம்­பி­னேன். ஆனால் பொருள்­கள் சென்றுசேர ஏழு மாதங்­கள் ஆயின," என்­றார் திரு அபுல்.

ஒவ்­வொரு முறை­யும் தனது பொருள்­கள் எங்கே இருக்­கின்­றன, அவை எப்­போது சென்று சேரும் என்று அபுல் விசா­ரித்­த­போது, வெவ்­வேறு கார­ணங்­க­ளைச் சொல்­லிச் சரி­யான பதி­ல­ளிக்­கா­மல் அந்தக் ­க­டைக்­கா­ரர்­கள் மழுப்­பி­ய­தா­க­வும் பணத்தை திருப்­பிக் கொடுக்­கும்­படி கேட்­ட­போது, அது பொருள்­களை அனுப்­பு­வ­தற்­குச் செல­வாகி­விட்­டது என்று கூறி, தம்மை ஏமாற்­றி­ய­தா­க­வும் வருந்­தி­னார்.

 

ஆறு மாதங்களாகியும் சேராத பொருளும் பொறுப்பற்ற பதிலும்

 

புதிய சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­மதி நிறு­வ­னம் ஒன்­றின் வழி­யாக இந்­தி­யா­வி­லி­ருக்­கும் தம் குடும்­பத்­தாருக்கு கிட்டத்தட்ட 800 வெள்ளி மதிப்­புள்ள பொருள்­களைச் சென்ற டிசம்­பர் மாதத்­தில் அனுப்பி வைத்த இல்லப் பணிப்­பெண்ணான 48 வயது முத்து­வேல் பர­மேஸ்­வ­ரிக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

"என்­னு­டைய சொற்ப வரு­மா­னத்­திலும் மிச்­சம் பிடித்து வாங்­கிய பொருள்­களை அந்­நி­று­வனத்தை நம்பி அனுப்பி ஆறு மாதங்­க­ளா­கி­விட்­டன. பொருள்­கள் எங்கே என்று கேட்­டால் அலட்­சி­ய­மாக பதில் கூறு­கி­றார்­கள். பணத்­தைத் திருப்­பிக் கொடுங்­கள் என்று முறை­யிட்­டா­லும் முடி­யாது என்­கிறார்­கள். 'வேண்­டு­மா­னால் காவல்துறை­யிடம் புகார் செய்­யுங்­கள்' என்­றும் சொல்­கி­றார்­கள்," என்று கூறி, ஆதங்கப் பட்டார் திருவாட்டி பரமேஸ்வரி.

 

தாமதத்தால் பாதியில் நின்ற வீட்டுக் கட்டுமானப் பணிகள்

 

"இந்­தி­யா­வில் வீட்­டுக் கட்­டு­மான பணி­க­ளுக்­காக இங்­கி­ருந்து சுமார் 300 வெள்­ளிக்கு 80 கிலோ எடை­யி­லான மின்­கம்­பி­க­ளைச் சென்ற அக்­டோ­பர் மாதத்­தி­லேயே அனுப்பி வைத்­தேன். பொருள்­கள் இன்­னும் சென்று சேரா­த­தால் கட்­டு­மானப் பணி­கள் தாம­த­மா­கி­யுள்­ளன," என்­றார் கட்­டு­மானத்துறை ஊழி­ய­ரான ரெத்­தி­னம் மணி­கண்­டன், 25.

ஒரு நாளுக்கு 30 வெள்ளி­யைச் சம்­ப­ள­மா­கப் பெறும் இவர், ஒவ்வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்­றும் காக்கி புக்­கிட்­டில் அமைந்­துள்ள தமது தங்­கு­வி­டு­தி­யி­லி­ருந்து லிட்­டில் இந்­தி­யா­வரை சென்று, பொருள்­க­ளைப் பற்றி விசா­ரித்­தும் பய­னில்லை என்­கிறார். சரி­யான தக­வல்­கள் கிடைக்­கப்­பெ­றாத சூழ­லில் தம்­மைப்­போல் பல வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அந்தக் ­கு­றிப்­பிட்ட நிறு­வ­னங்­களை நம்பி ஏமாந்தது இப்­போ­து­தான் தெரிந்­த­தா­க­வும் அவர் கூறி­னார்.

 

நிலு­வை­யில் நிற்­கும் பொருள்­கள்; நிறு­வ­னத்­தா­ரின் நிலைப்­பா­டு­கள்

 

பல ஆண்­டு­க­ளா­கச் சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­ம­தித் தொழில்­செய்­யும் நிறு­வ­னங்­கள், பொரு­ளுக்­கேற்ப கட்­ட­ணத்­தைக் கணக்­கிட்டு ஒரு கிலோ­விற்கு ஏழு முதல் எட்டு வெள்­ளி­வரை கட்­ட­ணம் வசூ­லிக்­கின்­றன. சுங்க வரி, இதர பங்­கு­தா­ரர்­க­ளுக்­குச் சேர­வேண்­டிய பணம் போக, ஒவ்­வொரு கிலோ­விற்­கும் ஏறக்­கு­றைய ஒன்­றரை வெள்ளி லாபம் பார்ப்­ப­தாக சில நி­று­வ­னங்­கள் கூறின.

ஆனால், எந்­தப் பொரு­ளாக இருந்­தா­லும் ஒரு கிலோ­விற்கு வெறும் மூன்­றரை அல்­லது நாலரை வெள்ளி என்று ஒரே விலை­யைச் சொல்­லும் சில புதிய நிறு­வனங்­கள், பெரும்­பா­லும் தொழி­லி­ல் உள்ள அனைத்­துப் பங்­கு­தாரர்­களுக்­கும் செலுத்த வேண்­டிய கட்­ட­ணத்­தைச் செலுத்­தா­மல் இருந்துவிடு­கின்­ற­னர்.

இத­னால், பொருள்­களை ஓர் இ­டத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்கு அனுப்­பு­வ­தில் பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன.

"சில புதிய நிறு­வ­னங்­கள் அதிக வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்க்­கும் நோக்­கில் குறைந்த விலை­யில் பொருள்­களை வாங்கி அனுப்­பும்­போது, இந்­தியத் துறை­மு­கத்­தி­ல் இ­ருந்து பொருள்­க­ளைப் பெறும் நிறு­வனங்­கள் சுங்க வரி செலுத்த முடி­யா­மல் தடு­மா­று­கின்­றன. இத­னால், பொருள்­க­ளைக் கொண்டு சேர்ப்­ப­தில் தடங்­கல்­கள் ஏற்­ப­டு­கின்­றன," என்று 'எஸ்டி கார்கோ' நிறு­வ­னத்­தின் பொறுப்­பா­ளர் காசிம் சரிபு, 33, கூறி­னார்.

"பொது­மக்­களும் கட்­ட­ணம் மிக குறை­வாக இருக்­கின்­றதே என்று நினைத்து, சரி­யில்­லாத நிறு­வ­னங்­களி­டம் பொருள்­க­ளைக் கொடுக்­கும்­போது, அவை குறித்த காலத்­திற்­குள் பத்­தி­ர­மா­கச் சென்­று­சேர்­வதற்கு எந்த உத்­த­ர­வா­த­மும் இல்லை. இது­போன்ற சில நிறு­வனங்­கள் பின்­பற்­றும் தவ­றான உத்­தி­க­ளால் பல ஆண்­டு­க­ளா­கச் சிறப்­பாக இயங்­கி­வ­ரும் நிறு­வ­னங்­களுக்­கும் பொது­மக்­க­ளி­டையே அவப்­பெ­யர் ஏற்­ப­டு­கிறது," என்­றும் கூறி, திரு சரிபு வருத்­தப்­பட்­டார்.

"சில வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பொருள்­கள் கால­தா­ம­த­மா­கச் சென்று சேர்ந்­தால் அதற்­குப் பல கார­ணங்­கள் இருக்­கக்­கூ­டும். விமா­னத்­தில் ஏற்­றப்­படும் பொருள்­க­ளின் எடை அள­வுக்கு அதி­க­மாக இருந்­தால் அதைச் சரி­செய்ய மேலும் இரண்டு மூன்று நாள்­கள் ஆக­லாம். அதே­போல, கப்­பல்­வழி அனுப்பப்பட வேண்டிய பொருள்­கள், சரி­யான சரக்­குக் கப்பல் கிடைக்­கா­வி­டில் சிங்­கப்­பூர் துறை­முகங்­க­ளி­லேயே 15 நாள்­க­ளி­ல் இ­ருந்து 20 நாள்­கள்­வரை தேங்கிவிட நேரிடும்," என்­றார் 'ஸ்டார் கார்கோ' நிறு­வனத்­தின் 41 வயது நிறு­வ­னர் திரு யூசுப் அலி.

அண்­மைக்­கா­ல­மாக இலங்­கை­யில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், சில நேரங்­களில் இங்­கி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு அனுப்­பப்­படும் பொருள்­கள் இலங்கை வழி­யா­கத் தூத்­துக்­கு­டித் துறை­மு­கத்தை அடை­வ­தி­ல் 10 முதல் 15 நாள்­கள்­வரை கால­தா­ம­தம் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு யூசுப் குறிப்­பிட்­டார். இருப்­பி­னும், இது­போன்ற எதிர்­பா­ராச் சூழல்­களைச் சமா­ளித்து வாடிக்­கை­யாளர்­க­ளின் பொருள்­க­ளைச் சொன்­ன­படி 60 நாள்­க­ளுக்­குள் சென்­று­சேர்ப்­பதே வழக்­கம் என்­றார் அவர்.

ஆனால், அதிக அள­வில் பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளைக் கொண்ட நிறு­வ­னங்­க­ளின் உரிமையாளர்கள் வேறு கார­ணங்­களைக் கூறி­னர்.

"வாடிக்­கை­யா­ளர்­கள் சிலர் தங்­கம் போன்ற அதிக விலைமதிப்புள்ள பொருள்­களை எங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தா­மல் துணி­க­ளுக்­கு இடை­யி­லும் வீட்­டுப் பொருள்­களுக்கு இடை­யி­லும் மறைத்து வைக்­கி­றார்­கள். ஆனால், சிங்­கப்­பூர் துறை­முகத்­தி­லி­ருந்து இந்­திய துறை­முகங்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வதற்கு முன்­பாக சுங்­கச் சோத­னை­யில் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­படாத பொருள்­கள் கண்­டு­பி­டிக்­கப்­படு­கின்­றன. இத­னால், மொத்த கப்­ப­லும் நிறுத்தி­வைக்­கப்­ப­டு­கின்­றது," என்­றார் ஒரு கடை­யின் நிறு­வ­னர்.

 

காவல்துறையிடம் குவிந்த புகார்

 

2021 ஜனவரி - 2022 ஜூன் மாதத் தொடக்­கம்­வரை இரு நிறு­வ­னங்­களின்­மீதே அதிக அள­வில் புகார்­அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக 'கேஸ் (CASE)' எனப்­படும் சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் தெரி­வித்­தது. 'தமி­ழன் எக்ஸ்­பி­ரஸ் கார்கோ அண்ட் லாஜிஸ்­டிக்ஸ்' நிறு­வ­னத்­தின்­மீது 44 புகார்­களும், 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் கார்கோ அண்ட் இன்­டர்­நே­ஷ­னல் லாஜிஸ்­டிக்ஸ்' நிறு­வனத்­தின்­மீது 33 புகார்­களும் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.

'கேஸ்' அமைப்பை நாடிய பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் நான்கு முதல் 12 மாதங்­கள்வரை பொருள்­கள் சென்றுசேர காத்­தி­ருந்த பிறகே புகார் அளித்­த­தை­யும் பணத்­தைத் திருப்­பித் தரும்­படி கேட்­டும் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­கள் எவ்­வித சரி­யான பதி­லை­யும் அளிக்­கா­த­தை­யும் 'கேஸ்' உறு­தி­செய்­தது.

அதே நேரத்­தில், கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் பதி­வு­க­ளின்­படி, இரு நிறு­வனங்­க­ளின் பங்­கு­தா­ர­ரும் ஒரு­வர்­தான் என்­பதை 'கேஸ்' கண்­டு­பி­டித்­தது. இரு நிறு­வனங்­க­ளை­யும் தொடர்­பு­கொள்ள முயன்று தோல்வி­யுற்ற 'கேஸ்', வேறு சில வாடிக்­கை­யா­ளர்­க­ளைப்­போல் காவல்­துறை­யில் புகார் அளித்திருக்கிறது.

சரக்கு ஏற்­று­மதி இறக்­கு­மதி நிறு­வ­னத்­து­ட­னான தங்களது பிரச்­சி­னை­களைத் தீர்க்க இய­லா­த­வர்­கள் 9795 8397 என்ற எண்­ அல்­லது www.case.org.sg என்ற இணை­யத்­த­ளம் வழி­யாக 'கேஸ்' அமைப்­பி­டம் உத­வி­கோ­ர­லாம்.

எவ்வளவு கட்டணம்? எத்தனை நாளாகும்?

சரக்கு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் பெரும்பாலும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விமானம் மற்றும் கப்பல் வழியாக சரக்குகளை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. சிங்கப்பூரிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் வழியாக அனுப்பப்படும் பொருள்கள், ஏழு முதல் பத்து நாள்களுக்குள் அங்கு சென்றுசேர்வது வழக்கம்.

மாறாக, கப்பல் வழியாக அனுப்பப்படும் பொருள்கள் தமிழ்நாட்டிற்குச் சென்றுசேர

60 நாள்கள்வரை ஆகலாம். ஆனாலும், கப்பல்வழி அனுப்பப்படும் பொருள்கள்

30 முதல் 40 நாள்களுக்குள் தமிழ்நாட்டைச் சென்றடைந்து விடுவதாக சில நிறுவனங்கள் தெரிவித்தன.

பொருள்களை விமானம் வழியாக அனுப்பினால் கிலோவிற்கு பத்து வெள்ளி வரையும் கப்பல் வழியாக அனுப்புவதற்குக் கிலோவிற்கு மூன்று முதல் நான்கு வெள்ளி வரையும் கட்டணமாக வசூலிப்பதாக அந்நிறுவனங்கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!