டெல்லி: இந்தியன் பிரிமியர் லீக் என்று அழைக்கப்படும் ‘ஐபிஎல்’ டி20 கிரிக்கெட் போட்டி உலக அளவில் பிரபலமான விளையாட்டு போட்டியில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், 2025 பருவத்திற்கான வீரர்கள் ஏலம் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் நடக்கவுள்ளது. ஏலம் சவூதி அரேபியாவின் ஜெடாவில் நடக்கிறது.
ஏலத்தில் பங்கேற்கும் இறுதி விளையாட்டாளர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்தப் பட்டியலில் மொத்தம் 574 வீரர்கள் உள்ளனர்.
பட்டியலில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது 13 வயது வைபவ் சூர்யவன்ஷி தான். அனைத்துலக கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாட வீரர்களுக்கான பிரிவில் அவர் உள்ளார்.
இவ்வாண்டு ஜனவரி மாதம் பீகார் அணிக்காக முதல்தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடத் தொடங்கிய சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி வருகிறார்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியிலும் விளையாடிய சூர்யவன்ஷி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் விளாசினார். இது ஐபிஎல் அணிகளை ஈர்த்தது.
அதனால் சூர்யவன்ஷியை அணியில் எடுத்து அவரை எதிர்காலத்திற்கு தயாராக்க ஐபிஎல் அணிகள் திட்டமிடுகின்றன.
ஆர்ச்சர் இல்லை
இதற்கிடையே ஐபிஎல் ஏலப்பட்டியலில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை. அவர் ஏன் பட்டியலில் இல்லை என்பது குறித்து காரணங்கள் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் ஏலப்பட்டியலில் ஆக வயதான வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார். 42 வயதான ஆண்டர்சன் அண்மையில் அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார்.
டி20 ஆட்டங்களில் பெரிதாக விளையாடாத ஆண்டர்சனை எந்த அணி விலைக்கு வாங்கும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

