லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதைத் தற்காக்கும் முயற்சியை அதிரடியாகத் தொடங்கியிருக்கிறது ஆர்சனல்.
இந்தப் பருவத்தின் முதல் ஆட்டத்தில் அது 3-0 எனும் கோல் கணக்கில் கோவன்ட்ரி சிட்டியை வீழ்த்தியது. சிங்கப்பூர் நேரப்படி ஆட்டம் சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடந்தது.
ஆட்டம் தொடங்கிய 15வது நிமிடத்தில் கை ஹேவர்ட்ஸ், திறன் காட்டினார். அடுத்த எட்டே நிமிடத்தில் இன்னொரு கோலைப் புகுத்தினார் புக்காயோ சக்கா.
பின்னர் 49வது நிமிடத்தில் ஆர்சனலின் மூன்றாவது கோல் வந்தது. அதனைப் போட்டவர் அணித் தலைவர் மார்ட்டின் ஒடிகார்ட்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீகிற்குள் அடியெடுத்த வைத்த கோவன்ட்ரிக்கு முதல் ஆட்டம் பேரடியாக அமைந்தது.
ஆர்சனலைப் பொறுத்தவரை, இந்தப் பருவத்திற்குச் சரியான தொடக்கமாக முதல் வெற்றி அமைந்துள்ளது என்று கூறினார் ஒடிகார்ட்.
ஆர்சனல் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கேல் ஆர்ட்டேட்டா, கோவென்ட்ரி சிட்டிக்கு எதிரான வலுவான வெற்றி, நடப்பு வெற்றியாளரான தங்களுக்குக் கிண்ணங்களை வெல்லும் தாகம் இன்னும் குறையவில்லை என்பதை நிரூபித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தங்கள் அணி தொடர்ந்து நெருக்குதல் கொடுத்து கோவென்ட்ரி அணியின் வீரர்களை ஆதிக்கம் செலுத்திய விதம் தமக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக அவர் சொன்னார்.

