கிரிக்கெட்: இந்தியப் பெண்கள் அணிக்கு ரூ.90 கோடி பரிசு

2 mins read
4f10a618-0b39-4ed9-816d-1bbb80aa2e47
இந்திய அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் (இடது) மற்றும் துணைத் தலைவர் ஸ்மிரிதி மந்தனா. - படம்: இந்திய ஊடகம்

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கிண்ணத்தை வென்ற இந்தியப் பெண்கள் அணிக்கு ரூ.51 கோடி பரிசை அறிவித்துள்ளது.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதுகுறித்த தகவலை வெளியிட்டார்.

“பெண்கள் கிரிக்கெட்டுக்குத் தொடர்ந்து ஊக்கம் தரப்படுகிறது. இதற்கு முன் உலகக் கிண்ணப் போட்டிக்கான பரிசுத் தொகை 2.88 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஆனால், இப்போது அது 14 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார் அவர்.

இந்தியப் பெண்கள் அணி உலகக் கிண்ணத்தை வென்றதற்காக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) ரூ.39 கோடி வழங்கியுள்ளது. அணிக்கு பிசிசிஐயும் தனியாக ரூ.51 கோடி கொடுத்துள்ளது. இரண்டையும் சேர்த்தால் பெண்கள் அணிக்கு மொத்தம் ரூ.90 கோடி பரிசாகக் கிடைத்துள்ளது.

தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் வாழ்த்து

இந்நிலையில், கிண்ணத்தை வென்ற பெண்கள் அணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரௌபதி முர்மு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“இந்த வெற்றி அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

“வரலாறு படைத்துள்ளது பெண்கள் அணி. வீராங்கனைகள் இந்தியாவைப் பெருமையடையச் செய்துள்ளனர்,” என்றார் திருவாட்டி முர்மு.

விராத் கோஹ்லி, ரோகித் சர்மா, கே எல் ராகுல் உள்ளிட்ட பல இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பெண்கள் அணிக்குச் சமூக ஊடகம் வழி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

விளையாட்டரங்கில் இருந்த சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்தைத் தெரிவித்தார். திரைப் பிரபலங்கள் பலரும் அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்