காலிறுதியை நோக்கி சிட்டி

கியவ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துத் தொடரில் கால் இறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் உக்ரேனின் டைனமோ கியவ் குழுவை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து 3-1 எனும் கோல் கணக்கில் பந்தாடியது இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி குழு. முற்பாதியின் 15வது நிமிடத் தில் செர்ஜியோ அகுவேரோவும் 40வது நிமிடத்தில் டாவிட் சில்வாவும் கோலடிக்க, 2-0 என்ற முன்னிலையுடன் இடைவேளைக் குச் சென்றது சிட்டி. 58வது நிமிடத்தில் கியவ் குழுவின் புயால்ஸ்கி கோலடித்து சிட்டியின் முன்னிலையை ஒன்றாகக் குறைத்தார்.

ஆயினும், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் அனுபவ வீரர் யாயா டூரே அடித்த அருமையான கோல் இழந்த இரட்டிப்பு முன்னிலையை மீட்டுத் தந்தது. ஸ்பெயினின் அட்லெட்டிகோ மட்ரிட்-நெதர்லாந்தின் பிஎஸ்வி குழுக்களிடையே நேற்று அதிகா லையில் நடந்த மற்றோர் ஆட்டம் கோல் ஏதுமின்றிச் சமநிலையில் முடிந்தது.

 

மான்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் யாயா டூரே தலையால் முட்டி கோலடிக்க முயன்றது பலிக்கவில்லை என்றாலும், ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் அவர் உதைத்த பந்து வளைந்து சென்று வலையை முத்தமிட்டது. படம்: ராய்ட்டர்ஸ்