கிண்ணம் ஏந்திய லெஸ்டர்

லெஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை அண்மையில் வென்ற லெஸ்டர் சிட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு கிண்ணத்தை ஏந்திக் கொண்டாடியது. 25 கிலோ எடை கொண்ட கிண்ணம், லெஸ்டர் சிட்டியின் தலைவர் விச்சாய் ஸ்ரீவதனப்பிரபாவின் தாய்நாடான தாய் லாந்தின் அரச குலத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள் நிறத்தாலான ரிப்பன்களாலும் லெஸ்டரின் நீல நிறத்தாலான ரிப்பன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கிண்ணத்தை அணித் தலைவர் வெஸ் மோர்கன் ஏந்த, அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான லெஸ்டர் ரசிகர்கள் கரவொலி எழுப்பிக் கொண்டாட்டத்தில் மூழ்கினர். இனி இப்படி ஒரு காட்சியைத் தங்கள் வாழ்நாளில் மீண்டும் காண்பது அவ்வளவு எளிதல்ல என்று நன்கு அறிந்த லெஸ்டர் ரசிகர்கள் தங்கள் சொந்த அரங்கில் வெற்றி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட கிண்ணத்தைக் கண்கொட் டாமல் பார்த்து அனுபவித்தனர். மேலும் அடுத்த பருவத்தில் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதி பெற்றுள்ள லெஸ்டர், அதிலும் வாகை சூடத் தயாராக இருக்கிறது என ரசிகர்கள் முழக்கமிட்டனர்.

ரசிகர்களுடன் சேர்ந்து லெஸ்டர் சிட்டி ஆட்டக்காரர்களும் நிர்வாகி கிளோடியோ ரனியெரியும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர். திடலில் கிண்ணத்தைத் தொட்டுப் பார்த்து, கட்டிப் பிடித்து, முத்தமிட்ட ஆட்டக்காரர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்துகொண்டதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்தப் பருவத்துக்கான இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி தொடங்கியபோது நட்சத்திர வீரர்கள் பலரைக் கொண்டிருக்கும் ஜாம்பவான் அணிகளை ஓரங்கட்டி லெஸ்டர் சிட்டி லீக் பட்டத்தை வெல்லும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது அசைக்க முடியா உண்மை.

சவால்களை முறியடித்து லீக் பட்டத்தை வென்ற லெஸ்டர் சிட்டி தனது கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பரிசாக கிண்ணத்தை ஏந்தியது. லெஸ்டர் ஆட்டக்காரர்கள் புடைசூழ நிர்வாகி ரனியெரியும் (நடுவில்), அணித் தலைவர் வெஸ் மோர்கனும் கிண்ணத்தை ஏந்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பார்சிலோனாவின் இரண்டாவது கோலைப் போட்டு கொண்டாடும் லயனல் மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்

19 Mar 2019

மெஸ்ஸி ஹாட்ரிக்:  வாகை சூடிய பார்சிலோனா

லிவர்பூலின் சாடியோ மானேவிடமிருந்து (இடமிருந்து இரண்டாவது) பந்தைப் பறிக்க முயலும் ஃபுல்ஹம் ஆட்டக்காரர். படம்: இபிஏ

19 Mar 2019

லிவர்பூல் வெற்றி; செல்சிக்குப் பின்னடைவு