துருக்கிக்கு காற்பந்து பாடம் நடத்திய ஸ்பெயின்

இருமுறை வெற்றியாளர் விருதைத் தட்டிச் சென்ற ஸ்பெயின் அணி நேற்று அதிகாலை நடைபெற்ற யூரோ 2016 போட்டி ஒன்றில் துருக்கி அணிக்கு காற்பந்து பாடம் நடத்தியது. நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஸ்பெயின் அணி யூரோ 2016 போட்டியில் இரண்டு கோல்களுக்கு மேல் போட்ட முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. ஸ்பெயினுக்கு ஆட்டத்தின் 34ஆம் நிமிடத்தில் அல்வரோ மொராட்டா முதல் கோலை போட்டார். அடுத்த மூன்று நிமிடங்களில் நொலிட்டோ இரண்டாவது கோலைப் போட்டு துருக்கி அணியை திக்குமுக்காட வைத்தார்.

பின்னர் இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய மூன்று நிமிடங்களுக்குள் மொராட்டா தமது இரண்டாவது கோலை போட்டு துருக்கியை உண்டு இல்லை எனச் செய்துவிட்டார். இதற்கு முந்தைய ஆட்டங்களில் தற்காப்பு அரணை வலுவாக அமைத்துக்கொண்ட அணி களுக்கு எதிராக ஸ்பெயின் அணி கோல் போட தட்டுத் தடுமாறி வந்துள்ளது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் அந்தத் தடுமாற்றம் ஸ்பெயினிடம் சிறிதும் காணவில்லை என்கிறது பிபிசி செய்தித் தகவல்.

பந்தை கோலாக்க முயலும் ஸ்பெயின் வீரர் செர்ஜியோ ரேமஸ். படம்: ஏஎஃப்பி