பாரிஸ்: உலகின் முன்னணி காற்பந்து ஆட்டக்காரர்களில் ஒருவராகத் திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பை கோலாக்கத் தவறியதால் அவரது தலைமையிலான போர்ச்சுகல் அணி 0-0 என்ற கணக்கில் ஆஸ்திரியாவுடன் சமநிலை கண்டது. ஐஸ்லாந்து உடனான முதல் ஆட்டத் திலும் போர்ச்சுகல் 1=1 எனச் சமன் கண்டதால் நாளை மறுநாள் நடக்க இருக்கும் ஹங்கேரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி கட்டாயமாக வெற்றிபெற வேண்டிய சூழலில் உள்ளது. ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத் தில் போர்ச்சுகலுக்குப் பல கோல் வாய்ப்புகள் கிடைத்தும் அவை வீணாக்கப் பட்டன. முன்னாள் மான்செஸ்டர் யுனை டெட் வீரரான நானி முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது. அத்துடன் ஆஸ்திரியா கோல்காப்பாளர் ராபர்ட் அல்மரும் போர்ச்சுகல் வீரர்களின் கோல் முயற்சிகளைத் தவிடுபொடியாக்கினார்.
போர்ச்சுகலுக்கு 79வது நிமிடத்தில் கிடைத்தது அருமையான வாய்ப்பு. கோல் கட்டத்திற்குள் ஆஸ்திரியா வீரரின் தப்பாட்டம் காரணமாக போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர். அந்த வாய்ப்பைக் கையாள ரொனால்டோ முன்னே வந்ததால் நிச்சயம் போர்ச்சுகல் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், நினைத்ததற்கு மாறாக பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பி யதால் ரசிகர்களின் முகங்களில் பெரும் ஏமாற்றம் குடிகொண்டது.