செக் குடியரசை வீழ்த்திய துருக்கி

லோன்ஸ்: செக் குடியரசை 2-0 எனும் கோல் கணக்கில் தோற் கடித்து காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிடாமல் நம்பிக்கையுடன் துருக்கி காத்துக்கொண்டிருக் கிறது. இந்தத் தோல்வியின் விளைவாக செக் குடியரசின் ஐரோப்பிய கிண்ணப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. ‘டி’ பிரிவில் இடம் பெற்ற துருக்கி அதன் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. அதுமட்டுமல்லாது அதன் ரசிகர்களின் ஒழுங்கீனம் காரணமாக துருக்கிக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டி ருந்தது.

நிலைமை தங்களுக்குச் சாதகமாக இல்லாதபோதிலும் துவண்டுவிடாமல் ஆடிய துருக்கி வீரர்கள் இப்போட்டியில் தங்கள் முதல் வெற்றியை சுவைத் துள்ளனர். ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் துருக்கி கோல் போட்டு முன்னிலை வகித்தது. அதனைத் தொடர்ந்து இரு குழுக்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. செக் வீரர்களின் பல கோல் முயற்சிகளைத் துருக்கியின் கோல்காப்பாளர் தவிடுபொடியாக்கினார். இந்நிலையில், 65வது நிமிடத்தில் துருக்கி அதன் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தது. ஆகச் சிறந்த மூன்றாவது நிலை குழு என்ற அடிப்படையில் துருக்கி காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பது பிற ஆட்டங்களின் முடிவுகளைப் பொறுத்திருக்கிறது.

துருக்கியின் புராக் யில்மாஸ் (நடுவில்) பந்தைத் தலையால் முட்டி வலை நோக்கி அனுப்புகிறார். படம்: ஏஎஃப்பி