அயர்லாந்து எதிர்நோக்கும் பிரெஞ்சு சவால்

லியோன்: ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றை இலக்காகக் கொண்டு போட்டியை ஏற்று நடத்தும் பிரான்ஸ், இன்றிரவு நடைபெறும் ‘நாக் அவுட்’ சுற்றில் அயர்லாந் துடன் மோதுகிறது. முதல் சுற்று ஆட்டங்களில் ருமேனியாவை 2-1 எனும் கோல் கணக்கிலும் அல்பேனியாவை 2-=0 எனும் கோல் கணக்கிலும் பிரான்ஸ் தோற்கடித்தது. ஆனால் முதல் சுற்றின் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதனால் கோல் போட முடியவில்லை. ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.

இதன் விளைவாக பிரான்ஸ் கிண்ணம் வெல்லும் தரத்தைக் கொண்டுள்ள குழுதானா என்ற சந்தேகமும் கவலையும் அதன் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த ஐயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் இன்று முழுமூச்சுடன் தாக்குதலில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பயிற்றுவிப்பாளர் டிடியே டேஷோமின் வியூகமும் முதல் சுற்றில் அபாரமான கோலைப் போட்டு பிரெஞ்சு ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்ற டிமிட்ரி பாயட்டும் இன்றிரவு அயர்லாந்தின் கிண்ணப் பயணத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்பது காற்பந்து நிபுணர்கள் சிலரின் கருத்து.

முதல் சுற்றில் அவ்வளவு சிறப்பாக செயல்படாதபோதிலும் ஒருவழியாக ‘நாக் அவுட்’ சுற்றுக்கு அயர்லாந்து தகுதி பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் சுவீடனுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்ட அயர்லாந்து, அடுத்த ஆட்டத்தில் பெல்ஜியமிடம் 3-0 எனும் கோல் கணக்கில் சுருண்டது. இத்தாலியை 1-0 எனும் கோல் கணக்கில் யாரும் எதிர் பாராத வகையில் தோற்கடித்த அயர்லாந்து ஆகச் சிறந்த மூன்றாம் நிலை அணிகளில் ஒன்று என்ற அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

சொந்த மண்ணில் களமிறங்கும் பிரான்சை வீழ்த்து வது கடினம் என்றபோதிலும் 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கான ‘பிளே ஆஃப்’ ஆட்டத்தில் தங்களுக்கு நேர்ந்த அநியாயத் துக்கு அயர்லாந்து அணியினர் இன்று பழிதீர்க்க கடுமையாகப் போராடக்கூடும். அன்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்த கோல் அடிப்படையில் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்தபோது கூடுதல் நேரத்தில் பிரான்சின் முன்னாள் நட்சத்திர வீரர் தியரி ஓன்ரி பந்தைத் தமது கையால் தட்டி வலைக்குள் சேர்த்தார்.

இந்தச் சர்ச்சைக்குரிய கோல் அயர்லாந்தின் உலகக் கிண்ணக் கனவைக் கலைத்தது. இந்நிலையில், இன்றிரவு நடை பெறும் ஆட்டத்தில் தனது தரத்தை நீரூபிக்க களமிறங்கும் பிரான்சை வீழ்த்த அயர்லாந்து வீரர்களின் இதயங்களில் ஓர் ஓரத்தில் இருக்கும் இந்தப் பழி வாங்கும் உணர்வு போதுமானதாக இருக்குமா என்பதைப் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும். வெற்றி பெறும் குழு அடுத்ததாக இங்கிலாந்து அல்லது ஐஸ்லாந் தை சந்திக்கும்.

முதல் சுற்றில் கோல் போட்டு அதன் ருசி அறிந்த அயர்லாந்தின் ராபர்ட் பிராடியும் (இடது) பிரான்சின் எண்டோய்ன் கிரிஸ்மானும் (வலது) இன்றைய ஆட்டத்தில் மீண்டும் கோல் வலையைப் பதம் பார்க்க தங்களால் ஆன அனைத்தையும் செய்வர் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

யுவென்டஸ் குழுவின் தாக்குதல் ஆட்டக்காரர் ரொனால்டோ. படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

ரொனால்டோ சைகை:  யூஃபா நடவடிக்கை

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரவி அஸ்வின். கோப்புப்படம்: ஏஎஃப்பி

20 Mar 2019

‘என் பந்துவீச்சு மோசம்  என்று சொல்ல முடியாது’