சிறிய ஐஸ்லாந்து, பெரிய ஆச்சரியம்

பிரான்சில் நடந்துவரும் யூரோ காற் பந்துத் தொடரில் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்து ஆச்சரியப்படத்தக்க அணியாக உருவெடுத்து வருகிறது ஐஸ்லாந்து. யூரோ தொடரில் பங்கேற்கும் மிகச் சிறிய அணியான, சுமார் 330,000 பேர் மட்டுமே வாழும் ஐஸ்லாந்து மக்கள் தொகையில் தன்னைவிட 164 மடங்கு பெரிய இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

நீஸ் நகரில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடந்த இந்த ஆட்டத்தில் முதல் கோலை போட்டது இங்கிலாந்து தான். ஆயினும் ஒட்டுமொத்தமாக அந்த அணியின் ஆட்டம் சொதப்பலாக இருக்க, அது தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் நான்காம் நிமிடத்தில் பந்துடன் ஐஸ்லாந்து கோல் பகுதியை நோக்கி முன்னேறிய இங்கிலாந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங்கைத் தடுமாறி விழச் செய்தார் ஐஸ்லாந்து கோல்காப்பாளர். இதையடுத்து, இங்கிலாந்துக்கு நடுவர் பெனால்டி வாய்ப்பு வழங்க, அதைத் தவறவிடாது கோலாக்கினார் அணித் தலைவர் வெய்ன் ரூனி.

ஆயினும், அடுத்த இரண்டாவது நிமிடத்திலேயே பதில் கோலடித்தது ஐஸ்லாந்து. ‘லாங் த்ரோ’வில் அது வலுவான அணி என்பதை அறிந்திருந் தும் தற்காப்பில் ஏனோதானோவென்று இங்கிலாந்து வீரர்கள் இருக்க, அதைச் சாதகமாக்கிக்கொண்டது ஐஸ்லாந்து. ரக்னர் சிகுர்ட்சன் மூலம் அந்த கோல் வந்தது. 18வது நிமிடத்தில் கோல்பீன் சிக்தர்சன் தன் பங்கிற்கு ஒரு கோலை புகுத்த, ஐஸ்லாந்து முன்னிலை பெற்றது.

முதன்முதலாக ஒரு முக்கிய தொட ருக்குத் தகுதி பெற்று காலிறுதி வரை முன்னேறியுள்ள ஐஸ்லாந்து, காலிறுதி யில் பிரான்சை எதிர்கொள்கிறது. மாறாக, 1950 உலகக் கிண்ணத் தில் அமெரிக்காவிடம் கண்ட தோல் விக்குப் பிறகு ஆக மோசமாகத் தோற்று வெளியேறியது இங்கிலாந்து.

பதில் கோலடித்து இங்கிலாந்தின் முன்னிலையைச் சமன் செய்ததைக் கொண்டாடும் ஐஸ்லாந்து காற்பந்து ஆட்டக்காரர்கள். படம்: ஏஎஃப்பி