புதுடெல்லி: இந்திய- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் துவக்க வீரராக களமிறங்க ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகிய இருவரில் யாருக்கு இடம் கொடுப்பது என்ற கேள்வி அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு எழுந்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக முரளி விஜய், தவான், ராகுல் ஆகிய மூன்று பேர் உள்ளனர். இரு தொடக்க வீரர்களில் ஒருவர் தமிழக வீரர் முரளி விஜய் என்பது உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவருடன் களமிறங்கப்போகும் மற்றொருவர் யார் என்பது தற்போது இந்திய அணியில் பெரும் குழப்பமாக உள்ளது. 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,308 ஓட்டங்கள் எடுத்துள்ள டெல்லியைச் சேர்ந்த தவான் பந்தடிப்பில் கூடுதல் அனுபவம் உள்ளவர்.
ஆனால், இடது கை பந்தடிப்பாளரான அவர் கடந்த சில போட்டிகளில் சிறப்பாகச் செயல்படவில்லை. தற்போது வெஸ்ட் இண்டீசில் நடந்த பயிற்சி ஆட்டங்களிலும் குறைவான ஓட்டங்களே எடுத்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் தேர்வாளர் கள் அனைவரும் ஷிகார் தவானுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கர்நாடகாவின் லோகேஷ் ராகுல் இரு சதங்கள் உட்பட 256 ஓட்டங்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுடனான இரண்டு பயிற்சி ஆட்டங்களிலும் லோகேஷ் ராகுல் இரண்டு அரைசதங்கள் அடித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். கோஹ்லிக்கும் ராகுல் மீது நம்பிக்கை உள்ளதாகத் தெரிகிறது.