வெஸ்ட் ஹேம் தொடர் தோல்வி

லண்டன்: வெஸ்ட் ஹேம் குழு அதன் புதிய விளையாட்டரங் கத்தில் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது. சவுதாம்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அது 3=0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. முன்பு அப்டன் பார்க் விளையாட்டரங்கத்தைத் தனது சொந்த விளையாட்டரங்கமாகக் கொண்டிருந்த வெஸ்ட் ஹேம், புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வெற்றிகளைக் குவிக்கும் இலக்குடன் லண்டன் விளையாட்டரங்கத்துக்கு இடம் மாறியது. ஆனால் வெற்றிகளைச் சுவைப்பதற்குப் பதிலாக அக்குழு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

அண்மையில் சொந்த மண்ணில் வாட்ஃபர்ட் குழுவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் தோல்வி அடைந்ததை அடுத்து, ரசிகர்களிடையே கைகலப்பு மூண்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரசிகர்களால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றபோதிலும் வெஸ்ட் ஹேம் ஆட்டக்காரர்களின் செயல் பாடு ஏமாற்றத்தைத் தந்தது. ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் ஆஸ்டின் சவுதாம்டனின் முதல் கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டம் தொடங்கி 17 நிமிடங்களில் வெஸ்ட் ஹேம் கோல்காப்பாளரைக் கடந்து சென்ற தாடிச் பந்தை வலைக்குள் அனுப்பினார். ஆட்டம் முடிய சில வினாடிகளே இருந்தபோது வார்ட்- பிரௌசே சவுதாம்டனின் மூன்றாவது கோலைப் போட்டார். கடந்த மூன்று லீக் ஆட்டங்களில் வெஸ்ட் ஹேம் 11 கோல்களை விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Load next