சதம் விளாசிய கோஹ்லி

இந்தூர்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான முதல் நாளில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி சதம் அடித்து தமது அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளார். இந்தியா=நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத் தில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணி பந்தடிக்க முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், கௌதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர்.

முரளி விஜய் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்காகக் களமிறங்கிய காம்பீர் நிதானமாக விளையாடி 29 ஓட்டங்கள் சேர்த்தபோது போல்ட் அனுப்பிய பந்தில் சிக்கி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் புஜாரா- கோஹ்லி ஜோடி விக்கெட் விழாமல் நிதானமாக விளையாடியது. இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 100ஐ தொட்டபோது புஜாரா ஆட்டமிழந்தார். அவர் 108 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகானே, விராத் கோஹ்லியுடன் நீண்டநேரம் களத்தில் இருந்தார். இந்த ஜோடியின் அபார ஆட்டம் நியூசிலாந்து வீரர்களைத் திணற வைத்தது. கோஹ்லி அரை சதம் கடந்து முன்னேற, ஓட்ட எண்ணிக்கை 200 ஓட்டங்களை எட்டியது.

தொடர்ந்து விளையாடிய கோஹ்லி சதம் அடித்து அசத்தினார். அவர் 184 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் இந்த இலக்கை எட்டினார். நேற்றைய ஆட்டத்தில் 103 ஓட்டங்கள் குவித்த கோஹ்லிக்கு இது 13வது டெஸ்ட் சதமாகும். இதேபோல் அரை சதம் கடந்த ரகானேவும் சதத்தை நோக்கி முன்னேறினார். 79 ஓட்டங்கள் சேர்த்துள்ள ரகானேயும் கோஹ்லியைப் போல ஆட்டமிழக்காமல் உள்ளார். நாளை நடைபெறும் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்சைத் தொடரும். முதல் இரு டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்தியா மூன்றாவது டெஸ்ட்டையும் வெல்லும் முனைப்புடன் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட்டையும் வெல்லும் முனைப்புடன் பந்தடித்த விராட் கோஹ்லி. படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

32வது நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார் இங்கிலாந்தின் ஹேரி விங்க்ஸ். படம்: இபிஏ

19 Nov 2019

சௌத்கேட்: பெரும் முன்னேற்றம்