2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னம் அறிமுகம்

மாஸ்கோ: 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற இருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் சின்னமாக ஓநாய் வடிவிலான சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘சபிவாக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்பின்போது ரஷ்ய துணைப் பிரதமர் விடாலி முட்கோ, பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஆகியோர் முன்னிலையில் ‘சபிவாக்கா’ அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. ஜாலியான உணர்வு, வசீகரம், தன்னம்பிக்கை ஆகியவற்றை ‘சபிவாக்கா’ பிரதிபலிப்பதாக அனைத்துலகக் காற்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) கூறியது.

‘சபிவாக்கா’ என்ற பெயருக்கு கோல் போடுபவர் என்று அர்த்தம் என ஃபிஃபா தெரிவித்தது. உலகக் கிண்ணப் போட்டிக்கான சின்னத்தைத் தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ‘சபிவாக்கா’வுக்கு 53 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர். “2018 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கிடையே ‘சபிவாக்கா’ பிரபலமான சின்னமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை. ஆட்டங்களை விளையாட்டரங்கிற்குச் சென்று காண ரசிகர்களை ‘சபிவாக்கா’ வரவேற்கும். ரஷ்யாவை ‘சபிவாக்கா’ மிகச் சிறந்த முறையில் பிரதிநிதிக்கும். ரசிகர்களின் மனதில் அது நீங்கா இடம் பிடிக்கும்,” என்று ரஷ்ய காற்பந்துச் சங்கத்தின் தலைவருமான திரு முட்கோ பெருமிதத்துடன் தெரிவித்தார்.