வெளியேறியது பார்சிலோனா

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது பார்சிலோனா. இத்தாலியின் யுவெண்டசுக்கு எதிரான இரண்டாவது ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. முதல் ஆட்டத்தில் யுவெண்டஸ் 3=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியிருந்தது. இதன் விளைவாக ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் யுவெண்டஸ் 3=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அரையிறுதிக்குத் தகுதி பெற பார்சிலோனா கோல் மழை பொழிவது அவசியமாக இருந்தது. ஆனால் யுவெண்டஸின் தற்காப்பு அரணை பார்சி லோனாவின் நட்சத்திர வீரர்களால் இறுதி வரை முறியடிக்க முடியாமல் போனது. மற்றொரு காலிறுதி சுற்றுக் கான இரண்டாவது ஆட்டத்தில் மொனாக்கோ 3-1 எனும் கோல் கணக்கில் பொருசியா டோர்ட் மண்ட்டைத் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறியது.

பார்சிலோனாவைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றதை அடுத்து, யுவெண்டஸ் குழுவின் தற்காப்பாளரான ஜயோர்ஜியோ சியேலினி (இடது) தமது சக வீரரான ஆண்ட்ரே பார்சாக்லியுடன் (வலமிருந்து இரண்டாவது) இணைந்து அளவற்ற மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார். அவர்கள் கொண்டாடுவதை மிகுந்த ஏமாற்றத்துடன் பார்க்கிறார் பார்சிலோனா ஆட்டக்காரர் (வலது). பார்சிலோனா எவ்வளவு முயன்றும் யுவெண்டசுக்கு எதிராக ஒரு கோல்கூட போட முடியாமல் போனது. படம்: ஏஎஃப்பி